சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் 2012ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கையை, 13.04.2013 சனிக்கிழமையன்று நடைபெற்ற அம்மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது, அதன் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் சமர்ப்பித்தார்.
ஆண்டறிக்கை வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றம்
2012ஆம் வருடத்தின் ஆண்டறிக்கை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் 2012ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் எமது செயற்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
சமூகப் பணிகளுக்காக முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுகையில் ஏற்பட்ட சிரமங்கள் பல ஒருபுறமிருந்தபோதிலும், அதன் விளைவுகளும், பயன்களும் சமூகத்திற்கு சென்று சேர்ந்ததைப் பார்க்கையில், மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
நலிந்த நிலையிலுள்ள நம் சமூக மக்களின் துயர்துடைப்பிற்காகவும், நகர்நலனுக்காகவும் பல்வேறு முன்மாதிரி திட்டங்களைத் தீட்டி, அவற்றின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளியேற, எங்களையும், எங்களுடன் இணைந்து கடந்த 2011 ஏப்ரல் முதல், 2013 மார்ச் வரை துணைக்குழுவினராக செயல்பட்ட மன்ற உறுப்பினர்களையும் எல்லாம்வல்ல இறைவன் ஒரு கருவியாக்கியதை எண்ணி பெருமகிழ்ச்சியடையும் இந்நேரத்தில், இன்ஷாஅல்லாஹ் அடுத்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய செயற்குழுவும் தனது பொறுப்புக் காலத்தில் இன்னும் சிறப்பாக செயலாற்றிட அவர்களை அன்புடன் வேண்டுகிறோம்.
மன்ற உறுப்பினர்கள் அனைவரின் மனப்பூர்வமான ஒத்துழைப்புகளை நிறைவாகப் பெற்றதாலேயே இவற்றை எமது செயற்குழு செய்ய இயன்றது. இதே ஒத்துழைப்பை அனைத்து உறுப்பினர்களும் - இன்ஷாஅல்லாஹ் இனி வருங்காலங்களில் பொறுப்பேற்கும் எல்லா செயற்குழுவிற்கும் முழுமையாகத் தந்துதவ வேண்டுமாய் கேட்டுக்கொண்டு, கடந்த 2012ஆம் ஆண்டில் நம் மன்றம் ஆற்றிய முக்கியமான நகர்நலப் பணிகள் மற்றும் சமூகப் பணிகளை சுருக்கி இங்கே பட்டியலிடுகிறேன்:
ஜனவரி 2012
2012ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் நிதிநிலை அறிக்கை (Financial Budget) ஆயத்தம் செய்யப்பட்டு, செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2012ஆம் ஆண்டிற்கான மன்றப் பணிகள் துவங்கின. இந்த நிதிநிலையறிக்கையை ஆயத்தம் செய்த உறுப்பினர் எம்.என்.ஜவஹர் இஸ்மாஈலுக்கு மன்றம் பாராட்டுக்களைத் தெரிவித்தது.
மைக்ரோ காயல் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. அடுத்த 6 மாதங்களுக்கு அதன் செயல்பாடுகளை அவதானித்த பின்னர் இதுகுறித்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
திருக்குர்ஆனை முழுமையான மனனமிட்டு முடிக்கும் ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கு மன்றத்தின் சார்பில் தலா ரூ.2500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டு, துவக்கமாக, காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின்போது, ஹாஃபிழா பட்டம் பெற்ற 6 மாணவியருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. மன்றப் பொருளாளரும், உள்ளூர் பிரதிநிதியும் இவ்விழாவில் மன்றத்தின் சார்பில் நேரடியாகச் சென்று ஊக்கத்தொகையை வழங்கி வந்தனர்.
பிப்ரவரி 2012
சிங்கப்பூர் லேப்ரடார் பூங்காவில், மன்ற உறுப்பினர்கள் குடும்ப சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், மன்றத்தின் நிதியாதாரத்தைப் பெருக்கும் நோக்குடன், “ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டம் (ODYSY)” செயற்குழுவால் முன்வைக்கப்பட்டது.
அத்துடன், மருத்துவ அவசர தேவைக்காக ரூபாய் 35 ஆயிரம் தொகையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மன்றத்தால் பெறப்படும் விண்ணப்பங்களை விசாரிப்பதற்காக, மன்ற உறுப்பினர்கள் பி.எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர், முஹம்மத் அப்துல்லாஹ் ஆகியோரை விசாரணைக் குழுவினராக செயற்குழு நியமித்தது.
காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளியோர் பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட நல்லாடைகளை சேகரித்து, நகருக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 15 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஏழை ஒருவருக்கு வீடு கட்ட மன்றத்தால் உதவப்பட்டபோது, கூடுதலாகத் தேவைப்பட்ட ரூபாய் 30 ஆயிரம் தொகையை மன்ற உறுப்பினர்கள் சிலர் தாமாக முன்வந்து வழங்கினர்.
மன்றத்தின் புதிய உறுப்பினராக எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத் இணைக்கப்பட்டார்.
மார்ச் 2012
2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை செயற்குழு பரிசீலித்து ஒப்புதலளித்தது.
வருடாந்திர பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்திடுவதற்காக, ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டது.
இக்ராஃ கல்விச் சங்கத்துடனான தொடர்புகளை துரிதமாகவும், சிறப்புறவும் செய்வதற்காக - மன்றத்தின் இக்ராஃ ஒருங்கிணைப்பாளராக எஸ்.எச்.உதுமான் நியமிக்கப்பட்டார்.
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கால்பந்துப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டது.
மன்றத்தின் “ஒருநாள் ஊதிய நன்கொடை” திட்டத்தின் கீழ், தமது ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்கிட, 2012 மார்ச் 02 அன்று மன்ற உறுப்பினர்கள் எண்ணம் (நிய்யத்) வைத்தனர். மன்ற உறுப்பினர்களின் ஆர்வத்துடன் கூடிய பங்களிப்பின் காரணமாக, இத்திட்டத்தின் கீழ், ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரம் சேகரிக்கப்பட்டது.
மன்றத்தின் புதிய உறுப்பினராக எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
ஏப்ரல் 2012
ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டத்தில் இணைய, அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கும் அழைப்பு விடுக்க மன்ற செயற்குழு தீர்மானித்தது.
மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் இரண்டு பொதுக்குழுக் கூட்டங்களை நடத்திடவும், அக்கூட்டங்களை ஏதேனும் சிற்றுலாத் தலங்களில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் பி.எஸ்.எம்.அப்துல் காதிர், அப்துல்லாஹ் ஆகியோரைக் கொண்ட - மன்றத்தின் விண்ணப்ப விசாரணைக் குழு தனது விசாரணை அறிக்கையை செயற்குழுவில் சமர்ப்பித்து, விசாரணையின்போதான தமது அனுபவங்களையும் செயற்குழுவில் பகிர்ந்துகொண்டது.
இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்கு உதவும் திட்டத்தின் கீழ், 2012ஆம் ஆண்டிற்காக ரூபாய் 25 ஆயிரம் அளிக்க செயற்குழு தீர்மானித்தது.
சிங்கப்பூர் ஜாமிஆவால், 2012 ஏப்ரல் 28 அன்று, சிங்கை பெடோக் விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட மீலாதுன் நபி விழாவில், மன்றம் பங்கேற்றது.
திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியின் - சிங்கப்பூர்வாழ் முன்னாள் மாணவர்களால் நடத்தப்பட்ட தொழில்துறை சார்ந்த கருத்தரங்கில், மன்றத்தின் சார்பில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மே 2012
மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டத்தை சிறப்புற நடத்திடும் பொருட்டு, செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக ஒருவரை நியமிக்கும் திட்டம் இந்த மாதக் கூட்டத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. மன்றப் பணிகளின் பால் அனைத்துறுப்பினர்களுக்கும் ஆர்வமும், அனுபவமும் கொள்ளச் செய்திடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாத செயற்குழுக் கூட்டத்திற்கும், செயற்குழுவில் அங்கம் வகிக்காத ஓர் உறுப்பினர் சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவார்.
இம்மாத செயற்குழுக் கூட்டத்தில், ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி கூஸ் எஸ்.ஏ.டி.முஹம்மத் அபூபக்கர் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார். மன்றப் பணிகள் சிறந்தோங்க - அதன் உறுப்பினர்கள் அனைவருடனும் சரியான தகவல் தொடர்பு இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், நகரிலுள்ள ஏழை-எளியோரின் பல்வேறு தேவைகளுக்காக மன்றத்தின் சார்பில் அனுப்பப்படும் உதவிகள், குறித்த காலத்தில் பயனாளிகளைச் சென்று சேர்ந்தால் மட்டுமே அந்த உதவி முழுப்பலனளிக்கும் என்றும் அவர் தனதுரையில் கூறினார்.
இக்கூட்டத்தில், மருத்துவ உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட 4 மனுக்கள் பரிசீலனைக்குப் பின் ஏற்கப்பட்டு, அவற்றுக்காக ரூபாய் 70 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
இம்மாத கூட்டத்தில் மற்றொரு சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ உரையாற்றுகையில், ஏழைகளுக்கு உதவுவது சிறப்பிற்குரியது என்றாலும், வாய் திறந்து தமது இன்னல்களை வெளிச்சொல்லாத நடுத்தர குடும்பத்தினரையும் ஆய்ந்தறிந்து, மன்றங்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டும் என்று கூறினார்.
2012 மே 11ஆம் தேதியன்று, உறுப்பினர்களின் அனுசரணையுடன் நடைபெறும் - மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டத்தின் கீழ், 52 ஏழைக் குடும்பத்தினருக்கு சமையல் பொருட்கள் வழங்கி உதவப்பட்டது.
ஜூன் 2012
மன்றத்தால், அடுத்து பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க, உறுப்பினர்கள் மஹ்மூத் ரிஃபாய், தைக்கா ஸாஹிப் ஆகியோர் விசாரணைக் குழுவினராக நியமிக்கப்பட்டனர்.
மன்றத்தின் நிதியாதாரத்தைப் பெருக்குவதற்கான திட்டங்களுள் ஒன்றான உண்டியல் நன்கொடை சேகரிப்புத் திட்டத்தின் கீழ், ரூபாய் 1 லட்சத்து 43 ஆயிரம் தொகை நடப்பு பருவ நிதியாக சேகரிக்கப்பட்டது.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சமூக நலப்பணிகளுக்காக ரூபாய் 15 தொகை மன்றத்தின் சார்பில் பங்களிப்பு செய்யப்பட்டது.
இக்ராஃவின், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2012” நிகழ்ச்சி செலவினங்களுக்காக மன்றத்தின் சார்பில் ரூபாய் 10 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்ற 6 மாணவியருக்கு, மன்றத்தின் “ஹாஃபிழ் / ஹாஃபிழாக்கள் ஊக்கத் தொகை வழங்கும் திட்ட”த்தின் கீழ் தலா ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஜூலை 2012
சிங்கப்பூர் பொட்டானிக் கார்டனில், மன்ற உறுப்பினர்கள் குடும்ப சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டது. (8692)
மஹ்ழரா அரபிக் கல்லூரியில் “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டம் பெற்ற காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு மன்றத்தின் “ஹாஃபிழ் / ஹாஃபிழா ஊக்கத்தொகை வழங்கும் திட்ட”த்தின் கீழ் ரூபாய் 2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளியோரின் கல்வி, மருத்துவம் மற்றும் மனிதாபிமானத் தேவைகளுக்காக ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் தொகை நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
மன்ற உறுப்பினர்களிடமிருந்து ஜகாத் நிதி சேகரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு தேவைகளுக்காக மன்றத்திற்கு விண்ணப்பிப்போரில், ஜகாத் நிதியைப் பெறத் தகுதியான ஏழைக் குடும்பத்தினருக்கு அத்தொகையை செலவிட தீர்மானிக்கப்பட்டது.
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட - காயல்பட்டினம் நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கான வருடாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் சிங்கை காயல் நல மன்றமும் பங்கேற்பதென தீர்மானிக்கப்பட்டது.
அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்திலுள்ள 55 ஏழைக் குடும்பத்தினருககு ரூபாய் 1 லட்சத்து 21 ஆயிரம் தொகை மதிப்பீட்டில் சமையல் பொருட்கள் வழங்கியுதவப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு அவர்களின் இல்லம் தேடிச் சென்று, சமையல் பொருட்களை மன்றத்தின் சார்பில் வழங்கிய மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரை மன்றம் நன்றியுடன் நினைவுகூர்கிறது.
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் இணை அனுசரணையுடன், பழுதடைந்த வீடு புனரமைப்புப் பணியை மன்றத்தின் சார்பில் செய்திட தீர்மானிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2012
சிங்கை துணை பிரதமர் டியோ ச்சி ஹீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள - சிங்கப்பூர் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் மன்றமும் பங்கேற்றது.
மன்றத்தின், “பயன்படுத்தப்பட்ட நல்லாடை சேகரிப்பு திட்ட”த்தின் கீழ், மன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்கள்தம் குடும்பத்தினரிடமிருந்து 200 கிலோ கிராம் எடையளவுக்கு நல்லாடைகள் சேகரிக்கப்பட்டது. கடல் வழி கார்கோ மூலம் அவற்றை காயல்பட்டினத்திற்கு அனுப்பி வைத்து, தேவையுடையோருக்கு வழங்கிட தீர்மானிக்கப்பட்டது. இவ்வகைக்காக ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம், மன்ற உறுப்பினர்களிடமும், பயனாளிகளிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்களால் ரமழானில் ஒருநாளன்று தராவீஹ் தொழுகை வழிநடத்தப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து, ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மன்ற உறுப்பினர்கள் பங்கேற்க - பெருநாள் சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அனைத்துறுப்பினர்களும் தமக்கிடையில் பெருநாள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
செப்டம்பர் 2012
பல்வேறு தேவைகளுக்காக காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளியோரிடமிருந்து மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள், அவை குறித்த விசாரணை அறிக்கை ஆகியன மன்றத்தின் விண்ணப்பங்கள் ஒப்புதல் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, மன்றத்தின் நிதிநிலை அடிப்படையில் பயனாளிகள் இறுதி முடிவு செய்யப்பட்டனர்.
பல்வேறு தேவைகளுக்காக உதவிகள் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்கப்பட்டவற்றுக்கு, ரூபாய் 4 லட்சத்து 35 ஆயிரம் தொகை நிதியோதுக்கீடு செய்யப்பட்டது.
ஹீமோஃபிலியா நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் மருத்துவத் தேவைக்காக சிறப்புதவியாக ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் தொகை மன்றத்தின் சார்பில் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. இவ்வகைக்காக, கேட்டவுடன் உதவிய அனைத்துறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃ கல்விச் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக முன்வருமாறு அனைத்துறுப்பினர்களுகு்கும் செயற்குழுவின் சார்பில் ஊக்கமளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் அமைப்பின் துணைச் செயலாளராக, சிங்கை காயல் நல மன்றத்தின் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் நியமிக்கப்பட்டார்.
மருத்துவத் துறையில் உலக காயல் நல மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காக விவாதிக்கப்பட்டு வரும் “ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்” குறித்த தகவல்களை, மன்றப் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை முன்வைத்தார்.
பொறியியல் பயிலும் மாணவர் ஒருவருக்கு முழுச் செலவினத்திற்கும் பொறுப்பேற்பது குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.
ப்ளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற காயல்பட்டினம் மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், மன்ற செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டார். அவருக்கு மன்றத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ரமழான் மாததின்போது, ஜகாத் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்க நிதி வழங்கிய மன்ற உறுப்பினர்களுக்கு, செயற்குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நடப்பாண்டு ஜகாத் நிதியாக எதிர்பார்க்கப்பட்ட தொகை பெறப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்களது திருக்குர்ஆன் மனனத்தை வலுப்படுத்தும் நோக்குடன், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த தீர்மானிக்கப்பட்டு, முதல் வகுப்பு துவக்கப்பட்டது.
அக்டோபர் 2012
மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சி, சிங்கப்பூர் Sea View Chalet 3இல் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதால், உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், “ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டம்”, “ஜகாத் நிதி” திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நிதி சேகரிக்கப்பட்டது. இத்திட்டங்களின் கீழ் பெறப்பட்ட நிதி, மன்றத்தின் நிதியாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
“முதியோர் சமூக நலத்திட்டம்” மன்ற செயற்குழுவால் முன்வைக்கப்பட்டது. உழைக்கவியலாத அளவுக்கு வயது முதிர்ந்த - ஆதரவற்ற ஏழை முதியோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் அவசியம் அனைவராலும் உணரப்பட்டு, அதனடிப்படையில் இதுகுறித்து விரிவான விவாதமும் நடைபெற்றது. இத்திட்டத்தின் நடைமுறை சாத்தியம் குறித்து ஆய்ந்தறிந்து, மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவில் முறைப்படி இத்திட்டத்தை அறிமுகப்படுத்த செயற்குழு தீர்மானித்தது.
பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாத செயற்குழுவில் பரிசீலிக்கப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, ரூபாய் 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 தொகை நிதியோதுக்கீடு செய்யப்பட்டது.
இம்மாத செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாக, ஹாஜி முஹம்மத் ஸதக், ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டு, தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
மன்றத்திற்கான இலச்சினையை தயாரிக்க, மன்ற உறுப்பினர் செய்யித் இஸ்மாஈல் பொறுப்பளிக்கப்பட்டார்.
மன்றத்தால் உதவித்தொகை வழங்கப்படும் பயனாளிகளின் தரவுகளை (Data)ப் பதிவு செய்திட, மென்பொருள் ஒன்றை மன்றத்திற்காக தயாரித்தளிக்க, துணைக்குழு உறுப்பினர் எம்.எல்.எஸ்.மொகுதூம் அப்துல் காதிர் இசைவு தெரிவித்தார்.
மன்றத்தின் “அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்ட”த்தின் கீழ், ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினத்திலுள்ள 60 ஏழைக் குடும்பத்தினருக்கு சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.
நவம்பர் 2012
ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி மன்றத்தால் நடத்தப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். இந்த ஒன்றுகூடலின்போது, நகர்நலனுக்காக ரூபாய் 1 லட்சம் தொகை உறுப்பினர்களால் வழங்கப்பட்டு, மன்றத்தின் களஞ்சியத்தில் அது சேர்க்கப்பட்டது.
இம்மாத செயற்குழுக் கூட்டத்தில், துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ, ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மன்றத்தின் புதிய உறுப்பினர் அபுல் காஸிம் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
செயற்குழுக் கூட்டத்தின்போது, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமானுடன் தொலைபேசி வழியே உரையாடப்பட்டது. மன்றத்தால் அண்மையில் செய்து முடிக்கப்பட்ட - “அத்தியாவசியசமையல் பொருளுதவி வழங்கும் திட்டம்”, “பயன்படுத்தப்பட்ட நல்லாடைகள் சேகரிக்கும் திட்டம்” உள்ளிட்ட நலத்திட்டங்கள் நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்து அவர் செயற்குழுவினருக்கு விவரித்தார்.
டிசம்பர் 2012
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மனுவின் வாசகங்களை, சிங்கப்பூர் நடைமுறைப்படி மாற்றியமைத்து, பின்னர் அதை சிங்கப்பூர் நாட்டின் இந்திய தூதரகத்தில் சமர்ப்பித்திட தீர்மானிக்கப்பட்டது.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், தம் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகளைப் பெற்றிடுவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வதற்கு மன்றத்தின் சார்பில் ஊக்கமளிக்கவும், சென்னையில் வேலைவாய்ப்புகளைத் தேடவும், கல்வி கற்கவும் வரும் காயல்பட்டினம் இளைஞர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்கவும் மன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது. அதன் துவக்கமாக, தகுந்த வேலைவாய்ப்பைக் கருத்திற்கொண்டு கணனி பயில வரும் 5 மாணவர்களுக்கு உணவு - தங்குமிடம் வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
மன்றத்தின் “உண்டியல் நன்கொடை சேகரிப்பு திட்ட”த்தின் கீழ், உண்டியல், இம்மாத செயற்குழுக் கூட்டத்தில் உண்டியல் திறக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட - சென்னையிலிருந்து வந்திருந்த ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், காயல்பட்டினத்திலிருந்து வந்திருந்த அப்துல் லத்தீஃப், ஹாங்காங்கிலிருந்து வந்திருந்த ஹாஃபிழ் மஹ்மூத் ஹஸன் ஆகியோர் உண்டியல்களைத் திறந்தனர். இந்திய ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான சிங்கப்பூர் டாலர் இதன்மூலம் சேகரிக்கப்பட்டு, மன்றக் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டது.
மன்ற உறுப்பினர்கள் குடும்ப சங்கம நிகழ்ச்சி, சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடத்தப்பட்டது. முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
மன்றத்தின் நகர்நலப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும், செயற்குழுவினராகிய எங்களுடன் தோளோடு தோள் கொடுத்து உதவியும், ஒத்துழைப்பும், ஆதரவும் நல்கிய மன்றத்தின் அனைத்துறுப்பினர்களுக்கும், உள்ளூர் பிரதிநிதி மற்றும் அவ்வப்போது ஒத்துழைப்புகளை நல்கிய சமூக ஆர்வலர்களுக்கும் இச்செயற்குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தவண்ணம் விடைபெறுகிறது. நன்றி, ஜஸாக்குமுல்லாஹு கைரா. கருணையுள்ள அல்லாஹ் உங்கள் யாவருக்கும் ஈருலக நற்பேறுகளை நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் 2012ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்கை அமைந்திருந்தது. |