மின் உற்பத்தி பற்றாக்குறையைக் காரணங்காட்டி, தமிழகமெங்கும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் தற்காலத்தில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களிலும், இரவு 23.00 மணி முதல் 00.00 மணி வரையிலும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
வழமை போல, நேற்றிரவு (ஏப்ரல் 25) 23.00 மணிக்கு மின்தடை செய்யப்பட்டு, நள்ளிரவு 00.00 (ஏப்ரல் 26) மணியளவில் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது. அடுத்த சில வினாடிகளில் மீண்டும் மின் வினியோகம் தடைபட்டது.
இதுகுறித்து, விசாரிப்பதற்காக ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, 00.00 மணி முதல் மின் வினியோகம் செய்யப்படுவதாகவும், உள்ளூரில் ஏற்பட்ட பழுது காரணமாக காயல்பட்டினத்தில் மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என்றும், காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டறியுமாறும் கூறப்பட்டது.
அதனடிப்படையில், இன்று நள்ளிரவு
00.10 மணியளவில் இரண்டு முறையும்,
00.11 மணியளவில் இரண்டு முறையும்,
00.15 மணியளவில் இரண்டு முறையும்,
00.16 மணியளவில் ஒரு முறையும்,
00.23 மணியளவில் ஒரு முறையும்,
00.27 மணியளவில் ஒரு முறையும்,
00.30 மணியளவில் ஒரு முறையும்
காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்தின் தரைவழி தொலைபேசி எண்ணிற்கு காயல்பட்டணம்.காம் செய்தியாளர் தொடர்புகொண்டார். எனினும், தொடர்ந்து ‘பிஸி’யாகவே இருந்தது. 00.30 மணிக்கு மின் வினியோகமும் வந்தது. தரைவழி தொலைபேசி மணியும் ஒலித்தது. ஆனால், மின் வாரிய அலுவலகத்திலிருந்து யாரும் தொலைபேசியைத் தொடவேயில்லை. இதனால், 00.00 மணிக்குப் பிறகான மின் தடைக்கு கடைசி வரை காரணம் அறியவே முடியாமல் போயிற்று.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 21:29 / 26.04.2013] |