தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளை, நெல்லை - பாளையங்கோட்டை ட்ரூ தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து, இம்மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவ இலவச முகாம் நடத்தின.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். தமுமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.எச்.நவாஸ், மனித நேய மக்கள் கட்சி (மமக) தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, சார்லி பல் மருத்துவமனை நிறுவனரும், ட்ரூ தொண்டு நிறுவன இயக்குநருமான டாக்டர் எம்.சார்லஸ் ப்ரேம்குமார் முகாம் குறித்த அறிமுகவுரையாற்றினார்.
முன்னதாக, தமுமுக நகர தலைவர் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் கிராஅத் ஓதி முகாம் துவக்க நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
பின்னர், சென்னை எல்.கே.எஸ்.ஜுவல்லர்ஸ் அதிபர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் முகாமை துவக்கி வைத்தார்.
இம்முகாமில், டாக்டர் சோனா ஸ்விலிங் ஷோபா தலைமையிலான - நெல்லை உதவும் கரங்கள் அமைப்பினர் புற்றுநோய் விழிப்புணர்வு முகாமையும், நெல்லை சார்லி பல் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எம்.சார்லஸ் ப்ரேம்குமார் தலைமையிலான குழுவினர் பல் மருத்துவ முகாமையும், பாளையங்கோட்டை அன்னை வேளாங்கன்னி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரான்ஸிஸ் ராய் தலைமையிலான மருத்துவக் குழுவினர் எலும்பு மருத்துவ பரிசோதனையையும், டாக்டர் ஜெபின்த் ப்ரெய்ன் தலைமையிலான - நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கண் மருத்துவ பரிசோதனையையும், நெல்லை கம்யூனிட்டி வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்பின் டாக்டர் ஏ.மீனா தலைமையிலான குழுவினர் பொது மருத்துவ பரிசோதனையையும் செய்தனர்.
முகாமின் அனைத்துப் பிரிவுகளிலும் சுமார் 700 பேர் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, தமுமுக தூத்துக்குடி மாவட்ட மருத்துவ சேவையணி செயலாளர் நூர் ஜோதி, தமுமுக காயல்பட்டினம் நகர மருத்துவ சேவையணி செயலாளர் எம்.ஏ.முஜீபுர்ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
A.K.இம்ரான் |