நடப்பு கோடை காலத்தை முன்னிட்டு, அன்றாடம் மாலைப் பொழுதில் காயல்பட்டினம் கடற்கரை மக்கள் திரட்சியுடன் காணப்படுகிறது.
ஆண்டுதோறும், கோடை விடுமுறைப் பருவமான ஏப்ரல் பிந்திய பாதி மாதத்திலும், மே மாதம் முழுவதிலும் - உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, அண்டை ஊர்களான ஆறுமுகநேரி, திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம், குரும்பூர், கேம்பலாபாத், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், நெல்லை மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்தும் பொதுமக்கள் காயல்பட்டினம் கடற்கரையில் வந்து குவிவது வாடிக்கை.
கடற்கரைக்கு வருவோர், ஆங்காங்கே நடைபாதை வணிகர்களிடம் தின்பண்டங்களை வாங்கியும், வீடுகளிலிருந்து கொண்டு வந்த உணவுப் பொருட்களையும் இணைந்தமர்ந்து உட்கொள்வர்.
சிறுவர்-சிறுமியர் கடல் மணலில் குழி தோண்டி, ஊற்று நீரெடுத்தும், மணற்கோபுரங்கள் கட்டியும் மாலைப் பொழுதை மகிழ்வுடன் கழிப்பர்.
விடுமுறையிலிருக்கும் மாணவர்கள், கடற்கரையின் தென்புறத்தில் கால்பந்து விளையாடுவர். உள்ளூர் பொதுமக்கள் வட்டமாகக் கூடியமர்ந்து, உரையாடிப் பொழுது போக்குவர்.
குடும்பத்தினருடன் இரவு 08.00 மணிக்கு மேல் கடற்கரைக்கு வரும் உள்ளூர் பொதுமக்கள் பலர் கையில் இரவுணவுடன் வந்து, கடற்கரை மணற்பரப்பில் வட்டமாக அமர்ந்து, உணவுண்டு செல்வதும் வழமை. 29.04.2013 அன்று இதுபோன்று உணவுண்ட பொதுமக்கள், தாங்கள் பயன்படுத்திய காகித தட்டுகளையும், கோப்பைகளையும், எச்சில் உணவுடன் - அமர்ந்த இடத்திலேயே பரத்திவிட்டுச் சென்றுவிட்டனர். மறுநாள் நடைப்பயிற்சிக்காக வந்த உள்ளூர்வாசிகள் இக்காட்சியைக் கண்டதும், அது தொடர்பானவர்களை ‘வாயாரப் புகழ்ந்த’னர்.
இதில் வேடிக்கை என்னவெனில், நகராட்சியின் சார்பில் அண்மையில் நகரெங்கும் வைக்கப்பட்டுள்ள குப்பை சேகரிக்கும் நவீன தொட்டிகள், கடற்கரை நுழைவாயில் அருகிலும் வைக்கப்பட்டிருந்தும், தமது குப்பைகளை சிறிது நேரம் கையில் பாதுகாத்து வைத்து, வீடு திரும்பிச் செல்கையில் குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லுமளவுக்குக் கூட அவர்களுக்கு பொறுமையில்லாது போனதுதான்.
இத்தனையையும் தாண்டி, நடப்பாண்டு விடுமுறைப் பருவமான தற்காலத்தில், பொதுமக்கள் பலரின் நடவடிக்கைகள் நகர்நல விரும்பிகளுக்கு பெரும் கவலையளிப்பதாக உள்ளது.
கடற்கரையில் கால் நனைத்து இன்பம் காண்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமை. ஆனால், சில ஆண்களும், பெண்களும் - உள்ளூர் கலாச்சாரத்தை அறியாமல், சமய பாகுபாடின்றி மாலைப் பொழுதில் கடலில் கூட்டங்கூட்டமாக குளிக்கத் துவங்கியுள்ளனர். குளித்து முடித்துவிட்டு, ஈர உடையுடன் நிற்கும் மகளிரைப் பார்த்து முகம் சுளிக்கும் பொதுமக்கள் ஏராளம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, காயல்பட்டினம் கடற்கரைக்கு மாலைப் பொழுதுகளில் காற்று வாங்குவதற்காக வந்து செல்லும் பொதுமக்கள், பயன்படுத்தி குப்பையாகப் போட்டுச் செல்லும் குடிநீர் உறைகளை (தண்ணீர் பாக்கெட்) சேகரித்து - பழைய பொருட்களை வாங்கும் கடைக்கு விற்பனை செய்யும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கு, தற்போது குடிநீர் உறைகளுடன், மதுபானப் புட்டிகளும் நிறையவே கிடைக்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 15க்கும் மேற்பட்ட மதுபானப் புட்டிகளை அவர் சேகரிக்கிறார்.
கடலில் குளிக்காதீர்!
கடற்கரையில் மது அருந்தாதீர்!
என பல வாசகங்கள் கடற்கரை நுழைவாயிலில் இருக்கின்றபோதிலும், அந்தோ பரிதாபம்! இவர்களின் கண்களில் மட்டும் அது படவேயில்லை. |