துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியின் 14-வது அண்டு விழா துளிர் கேளரங்கத்தில் 23.4.2013 அன்று நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:
காயல்பட்டினத்தில் அறிவுத்திறன் குறை, மூளை முடக்குவாதம் ஆட்புசம் குறைபாடுடைய சிறார்களுக்கு பல்வேறு மறுவாழ்வு பயிற்சிகளை வழங்கி செயல்பட்டு வரும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளியின் 14-வது அண்டு விழா துளிர் கேளரங்கத்தில் 23.4.2013 அன்று மாலை 4.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது.
இவ்விழாவிற்கு துளிர் மறுவாழ்வு திட்டப்பணிகளின் தலைவரும், து.மா.மு.பெ.உத. சங்கத்தின் கௌரவ செயலாளரும் ஆன வஹிதா B.Sc., தலைமை தாங்கினார். துளிரின் பெற்றோர் மன்ற் தலைவி V.S.A. ஆயிஷா சாஹிப் தம்பி, துளிர் ஆதரவாளர்கள் திருமதி நாச்சி தம்பி, S.O.B. ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி, அன்னை ஹாஜரா மேலப்பாளையம் தமிழ்துறை தலைவர் முனைவர் S. சப்ரின் முனீர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். பார்வையற்ற சகோதரர் அல்ஹாபிழ் முஹம்மது உதுமான் B.A. இறைமறையின் வசனங்களை ஓதி விழாவினை துவக்கி வைத்தார்.
துளிரின் செயலர் M.L. சேக்னா லெப்பை வரவேற்புரையாற்றினார். துளிரின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சித்தி ரம்ஜான் 2012-2013 ஆண்டிற்கான அறிக்கையை வாசித்தார். துளிரின் நிறுவனர் வழக்கறிஞர் H.M. அஹமது துளிரின் 13 ஆண்டுகால சேவைகளை நினைவு கூர்ந்ததோடு, அது கடந்து வந்த பாதையில் தனவான்களின் ஒத்துழைப்பு மகத்தானது என்று கூறினார்.
திருமதி சப்ரின் முனீர் தனது உரையில் இயலாநிலை குழந்தைகளை பராமரிப்பதும், பயிற்றுவிப்பதும் மிகவும் சவாலான செயல் என்றும், துளிர் சிறப்பு பள்ளியின் ஆசிரியர்கள் அந்த செயலை அர்ப்பணிப்புடனும், பொறுமையுடனும் செய்து வருவதை பாராட்டினார். மேலும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் குறைகளை கண்ட வருத்தப்படவோ, தாழ்வு மனப்பான்மை அடையவோ கூடாது என்றும் அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவந்து தொடர்ந்து பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இக்குழந்தைகள் சமூகத்தில் ஓர் அங்கம் என்றும் அவர்களை யாரும் புறக்கணிக்க கூடாது என்றும் குறிப்பிட்டார்.
ஆண்டு விழா நிகழ்ச்சியில் துளிர் சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இசை, நடனம், நாடகம், பாடல், பேச்சு, வினாடி வினா, கலந்துரையாடல் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளிலும் துளிர் சிறார் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். துளிரின் சிறார்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது. துளிர் அறங்காவர் H.ராபி நன்றிகூற நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|