தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இன்று (மே 9) காயல்பட்டினம் குடிநீர் திட்டம் உட்பட பல நகராட்சி நிர்வாகத்துறை திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அடிக்கல்நட்டி துவக்கி வைத்தார்.
அவ்வேளையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.முனுசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் IAS, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் கே. பனிந்திர ரெட்டி IAS , நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே IAS, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஏகாம்பரம் IAS ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்வின் வீடியோ தொகுப்பை காண இங்கு அழுத்தவும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (9.5.2013) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருநெல்வேலி மாநகராட்சியில் 22 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் மேம்பாட்டுப் பணிகளை காணொலிக் காட்சி (VIDEO CONFERENCING) மூலமாக திறந்து வைத்தார்கள். மேலும், 265 கோடியே 26 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 29 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களை துவக்கி வைத்தார்கள்.
நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும், பெருகி வரும் நகர்ப்புற மக்கட்தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை நிறைவேற்றிடவும், அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருநெல்வேலி மாநகராட்சியில் 78,600 மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 22 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் மேம்பாட்டுத் திட்டம்; சேலம் மாநகரத்தில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகக் கட்டடம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவாக்குடியில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம்; நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டடம்; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துப்புரவு பணியாளர் குடியிருப்பு
கட்டடம்; காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகர் நகராட்சியில் 1.5 ஏக்கர் பரப்பளவில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்; வேலுhர் மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரி எரிவாயுக் கூடம், என மொத்தம் 27 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள்
இன்று துவக்கி வைத்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகராட்சியில் 76 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பாதாள சாக்கடைத் திட்டம்; தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம்; தேனி மாவட்டம் - கம்பம், சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி; திருப்பூர் மாவட்டம் - தாராபுரம்; திருவண்ணாமலை மாவட்டம் - வந்தவாசி; நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு; சேலம் மாவட்டம் - ஆத்தூர் ஆகிய 8 நகராட்சிகளில் 189 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள், என மொத்தம் 265 கோடியே
26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்கள்.
மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், கரூர் மாவட்டம், புஞ்சைபுகளூர் பேரூராட்சியில் 20,300 மக்கள் பயனடையும் வகையில் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நாமக்கல் நகராட்சியில் 22 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம் ஆகியவற்றை மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9. |