பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10.00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய எஸ்.ரத்னசூர்யா என்ற மாணவி, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை வளர்ப்பு பாடத்தில், 200க்கு 173 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1200க்கு 1021 ஆகும்.
காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாணவியான இவர் சுயம்புலிங்கம் - மேரி ஆகியோரின் மகளாவார். தந்தை, தாய் இருவருமே கட்டுமானப் பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். மாணவி எஸ்.ரத்னசூர்யாவுக்கு, 3 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 01ஆம் தேதி தேர்வு துவங்கியது. மார்ச் 24ஆம் தேதியன்று இம்மாணவி தேர்வெழுதிக்கொண்டிருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த - கட்டுமானத் தொழில் செய்யும் செல்லத்துரை என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணமாகி மூன்று நாட்கள் கழித்து, மார்ச் 27ஆம் தேதியன்று இவர் உணவு மேலாண்மை மற்றும் குழந்தை வளர்ப்பு பாட தேர்வை எழுதினார்.
தனது சாதனை குறித்து மாணவி எஸ்.ரத்னசூர்யா கூறியதாவது:-
நான் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது தந்தை, தாய் இருவருமே கட்டுமானத் தொழில் செய்து வருகின்றனர். எனக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது.
உணவு மேலாண்மை மற்றும் குழந்தை வளர்ப்பு பாடப்பிரிவை நான் விரும்பித் தேர்ந்தெடுத்து பயின்றேன். இப்பாடத்தில், மாநில அளவில் முதலிடம் பெறுவேன் என்றுதான் துவக்கத்தில் எண்ணியிருந்தேன். ஆனால், திருமணமான பின்னர் அந்த நம்பிக்கை தளர்ந்த நிலையிலேயே தேர்வெழுதினேன். ஆனால், இன்று இப்பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற செய்தி என்னை பெரிதும் மகிழச் செய்துள்ளது.
தொடர்ந்து மேற்படிப்பு படிக்க எனக்கு ஆசையுள்ளது. என்றாலும், எனது குடும்பச் சூழல் அதற்கு இடம் தராததால், அரசு உதவும் பட்சத்தில் தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்.
இவ்வாறு, மாணவி எஸ்.ரத்னசூர்யா கூறினார்.
உணவு மேலாண்மை மற்றும் சத்துணவு பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றதையடுத்து, மாணவி எஸ்.ரத்னசூர்யாவை அப்பகுதி மக்கள் திரண்டு சென்று வாழ்த்தினர். தாயார் மேரி, சாதனை மாணவிக்கு இனிப்பூட்டி, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதே பாடத்தில், கடந்த 2010, 2011 கல்வியாண்டுகளிலும் காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவியர் மாநில அளவில் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |