காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் “மத்ரஸத்துல் அஸ்ஹர் லி தஹ்ஃபீழில் குர்ஆனில் கரீம்” - அல்அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனக் கல்வியகம், மூன்றாண்டு கல்வித் திட்டத்தின் அடிப்படையில், 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த திருக்குர்ஆன் மனனக் கல்வியகத்தில், மாணவர்கள் - 3 ஆண்டுகளுக்குள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்யவும், பள்ளிக் கல்வியில் 8ஆம் வகுப்பு அரசுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, 9ஆம் வகுப்பில் இணைந்து பயிலவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
துவங்கி 12 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து, 13ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டும், திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டச் சான்றிதழ் வழங்குவதற்காகவும், வருடாந்திர நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு நிகழ்ச்சி இம்மாதம் 01ஆம் தேதியன்று, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் உட்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அன்று காலை முதல் மாலை வரை, மாணவர்கள் பங்கேற்பில் - கிராஅத் போட்டி, துஆக்கள் மனனப் போட்டி, திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு) போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.
மஃரிப் தொழுகைக்குப் பின், இரவு 07.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெறும் மாணவர் ஹாஃபிழ் டி.எஸ்.முஹம்மத் ஜியாத் கிராஅத் ஓத, பட்டம் பெறும் மற்றொரு மாணவர் ஹாஃபிழ் ஆர்.யாஸர் அரஃபாத் அதன் தமிழாக்கத்தை வாசித்து, நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தனர். பின்னர், பட்டம் பெறும் மற்றொரு மாணவர் பி.எம்.செய்யித் இஸ்ஹாக் சிற்றுரையாற்றினார்.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ உரையாற்றினார்.
பின்னர், அல்அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனக் கல்வியகத்தில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள,
(1) ஹாஃபிழ் பி.எம்.செய்யித் இஸ்ஹாக்
(த.பெ. எஸ்.ஐ.பரக்கத் முஹம்மத்
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம்)
(2) ஹாஃபிழ் டி.எஸ்.முஹம்மத் ஜியாத்
(த.பெ. தைக்கா ஸாஹிப்
புதுக்கடைத் தெரு, காயல்பட்டினம்)
(3) ஹாஃபிழ் ஆர்.யாஸர் அரஃபாத்
(த.பெ. ரஃபீக் முஹம்மத்
ஆறாம்பள்ளித் தெரு, காயல்பட்டினம்)
ஆகிய மாணவர்களுக்கு, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டச் சான்றிதழ்) வழங்கப்பட்டது. பட்டச் சான்றிதழ்களை, மத்ரஸா ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இம்ரான் உமரீ, ஹாஃபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத், நிகழ்ச்சித் தலைவர், சிறப்பு விருந்தினர் மற்றும் கத்தீப் ஆகியோரிணைந்து மாணவர்களுக்கு வழங்கினர்.
பின்னர், பட்டம் பெற்ற மாணவர்கள் சார்பில், ஹாஃபிழ் டி.எஸ்.முஹம்மத் ஜியாத் ஏற்புரை நிகழ்த்தினார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - சென்னையில் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்து வரும் மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் உமரீ பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ‘ஹாஃபிழ்கள் ஊக்கத் தொகை வழங்கும் திட்ட’த்தின் கீழ், அம்மன்றத்தின் சார்பில் அதன் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், பட்டம் பெற்ற ஹாஃபிழ் மாணவர்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரத்து ஐநூறு தொகையை வழங்கினார்.
பின்னர், காலை முதல் மாலை வரை நடைபெற்ற பல்சுவைப் போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆண்டிறுதித் தேர்வில் சிறப்பிடம் பெற்றமைக்காக,
ஹாஃபிழ் மாணவர் பிரிவில், பி.எம்.செய்யித் இஸ்ஹாக்,
இளநிலை மாணவர் பிரிவில், எஸ்.ஏ.என்.அஹ்மத் அம்மார், எஸ்.ஏ.என்.முஹம்மத் அலீ,
நடுநிலை மாணவர் பிரிவில், எஸ்.நூஹ் நுஃபைஸ், பி.முஹம்மத் ஹாரிஸ்,
உயர்நிலை மாணவர் பிரிவில், ஏ.எஸ்.சுவைலிம் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஐ.ஐ.எம். தீனிய்யாத் பிரிவில் சிறப்பிடங்களைப் பெற்றமைக்காக, முதல் பிரிவைச் சேர்ந்த
எஸ்.ஏ.என்.முஹம்மத் அலீ, எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா,
இரண்டாவது பிரிவில், எம்.என்.அஸ்லாம், எஸ்.முஹம்மத் உஸாமா,
மூன்றாம் பிரிவில், ஆர்.யாஸர் அரஃபாத், கே.எம்.ஃபாரூக் அப்துல்லாஹ் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஹிஃப்ழு பிரிவில், இவ்வாண்டின் சிறந்த மாணவருக்கான பரிசு எஸ்.எச்.ழியாவுத்தீன் அமீன் என்ற மாணவருக்கு வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஹிஃப்ழுப் போட்டி 8 ஜுஸ்வு பிரிவில் சிறப்பிடங்களைப் பெற்றமைக்காக, எஸ்.ஏ.என்.முஹம்மத் அலீ, எஸ்.ஏ.என்.அஹ்மத் அம்மார் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், பேச்சுப் போட்டி முதல் பிரிவில் வெற்றி பெற்ற எம்.யாஸிர், எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகிய மாணவர்களுக்கும், இரண்டாவது பிரிவில் வெற்றி பெற்ற கே.எம்.ஃபாரூக் அப்துல்லாஹ், எம்.எஃப்.இப்றாஹீம் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அடுத்து, துஆ மனனப் போட்டியில் வென்றமைக்காக, டி.எஸ்.முஹம்மத் ஜியாத், ஏ.எஸ்.சுவைலிம், ஆர்.யாஸர் அரஃபாத் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், வினாடி-வினா போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக, பி.எம்.இஸ்ஹாக், எம்.ஏ.முஹம்மத் நூஹ், எஸ்.ஏ.என்.அஹ்மத் அம்மார், எஸ்.எச்.ரோஷன் ஆகியோருக்கும்,
இரண்டாமிடம் பெற்றமைக்காக, ஃபாஸில், எஸ்.கிழுறு மஃபாஸ், யாஸர் அரஃபாத் ஆகிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், இந்நிகழ்ச்சியில் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவு ஆசிரியர்களுக்கு, நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவாக, ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நன்றி கூற, துஆ கஃப்பாராவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத், பிலால் ஏ.எச்.லுக்மான், ஒளிப்பதிவாளர் எம்.ஏ.அப்துல் ஜப்பார், ஐ.ஐ.எம். டிவி இயக்குநர் எஸ்.அப்துல் வாஹித் மற்றும் பலர் செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |