நகராட்சியின் நடைபெறாத பிப்ரவரி 26, 2013 சாதாரண கூட்டத்திலும், ஏப்ரல் 29, 2013 அன்று நடைபெற்ற சாதாரண கூட்டத்திலும், நகராட்சி அலுவலர்களால் தாக்கல் செய்யப்பட்ட விபரங்கள்படி, காயல்பட்டினம் நகராட்சியில் 1565 தெருவிளக்குகள் உள்ளன.
அதில் - 1152, 40 வாட்ஸ் குழல் விளக்குகள், 119, 150 வாட்ஸ் சோடியம் விளக்குகள், 150, 250 வாட்ஸ் சோடியம் விளக்குகள், 108, 2*36
வாட்ஸ் சி.எப்.எல். விளக்குகள், 36, 400 வாட்ஸ் உயர்மின் கோபுர விளக்குகள் - அடங்கும்.
நகராட்சியால் வெளியிடப்பட்ட 2009-10 மற்றும் 2010-11 ஆகிய ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட (2009-10 =
1221 விளக்குகள், 2010-11 = 1321 விளக்குகள்), தற்போது வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கை (1565 விளக்குகள்) கூடுதலாக உள்ளது.
(ஆண்டறிக்கைகள் 75 வாட்ஸ் சோடியம் விளக்கு என தெரிவிக்கின்றன. தற்போதைய தீர்மானப்பொருள் 150 வாட்ஸ் சோடியம் விளக்கு என தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது).
இடைப்பட்ட காலத்தில் புதிதாக தெருவிளக்குகள் நிறுவப்பட்டதாக எந்த தீர்மானமும் பதிவில் இல்லை.
இருப்பினும் - தற்போது வெளியிடப்பட்டுள்ள எண்ணிக்கையான 1565 தெருவிளக்குகள் என்பதே உறுதியான, தற்போதைய எண்ணிக்கை என்று
எடுத்துக்கொண்டு, தெருவிளக்கு பராமரிப்பினை தனியார் மயமாக்க நகராட்சியால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் (தீர்மானம் எண் 460)
பொருளாதார விளைவுகளை காணலாம்.
ஏப்ரல் 29, 2013 அன்று தெரு விளக்கு பராமரிப்பை தனியார் மயமாக்க - நகராட்சி அலுவலர்களால், மதிப்பீட்டு தொகை மன்றம் அனுமதிக்காக
வைக்கப்பட்டது (இதே பொருள் பிப்ரவரி மாதம் கூட்ட பொருளில் இணைக்கப்பட்டிருந்தது). அதன்படி 2013-14 ஆம் ஆண்டிற்கு - தெருவிளக்குகளை
பராமரிக்க - மதிப்பீட்டு தொகையாக 20.58 லட்ச ரூபாயும், 2014-15 ஆம் ஆண்டிற்கு மதிப்பீட்டு தொகையாக 22.63 லட்ச ரூபாயும், 2015-16
ஆம் ஆண்டிற்கு மதிப்பீட்டு தொகையாக 24.89 லட்ச ரூபாயும், குறிப்பிடப்பட்டிருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்த தொகையாக 68.10
லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.
நகராட்சி நிர்வாகத்துறை விதிமுறைகள்படி - ஒரு நகராட்சி, எந்த சேவையையும் தனியார் மயமாக்க விரும்பினால் அதற்கான முன் அனுமதியை -
நகராட்சி நிர்வாகத்துறையிடம் பெறவேண்டும். குறிப்பாக - தனியார் மயமாக்கத்தால், நகராட்சி பெறக்கூடிய சேமிப்பு குறித்தும் நகராட்சி
நிர்வாகத்துறைக்கு தெரிவிக்கவேண்டும். இதற்காக - கடந்த மூன்றாண்டுகளில், தெரு விளக்கு பராமரிப்பு வகைக்கு நகராட்சி செலவு செய்த தொகை
விபரத்தையும், முன் அனுமதி கோரும்போது நகராட்சி நிர்வாகத்துறைக்கு வழங்க வேண்டும்.
காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக தெரு விளக்குகள் பராமரிப்பு வகைக்கு செய்யப்பட்ட செலவு தொகை விபரம் - அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆய்வு செய்து பார்த்தால், 2011-12 மற்றும் 2012-13 காலகட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியில் - மின் பொருட்கள், ரூபாய் 4 லட்சத்திற்கும் குறைவாகவே, ஒவ்வொரு ஆண்டும், கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது.
அதற்கு முந்தைய ஆண்டுகளில் - இவ்வகைக்கு, அளவுக்கு அதிகமாக செலவு செய்யப்பட்ட விபரம், காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் காயல்பட்டினம் - the City of lights?! என்ற தலைப்பில் 5 பாக தொடராக வெளிவந்தது நினைவிருக்கலாம்.
தெருவிளக்குகள் பராமரிப்பை தனியார்மயப்படுத்த மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி அல்ல இது. தனியார் மூலம் தெரு விளக்குகளை பராமரிக்க, ஜனவரி 2011 இல் தீர்மானம் ஒன்று காயல்பட்டினம் நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது.
அப்போது - மதிப்பிடப்பட்ட 12 லட்ச ரூபாயை விட தற்போது மதிப்பிடப்பட்டுள்ள 20 லட்ச ரூபாய், 65 சதவீதம் கூடுதலானது என்பது
குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 29 அன்றைய கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த இப்பொருள் குறித்து நகர்மன்றத் தலைவர் தனது ஆட்சேபனையை, தலைவர் குறிப்பு மூலம் பதிவு
செய்திருந்தார்.
அதில் பிற நகராட்சிகளில் இது குறித்து அறிவிக்கப்பட்ட மதிப்பீட்டுகளை விட - காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள
மதிப்பீட்டு தொகை மிகவும் அதிகமாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
இருப்பினும் கூட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு
கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தால் - தெரு விளக்குகள் எரியாது எனவும் சில உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவரிடம் கூட்டத்தில் கூறினர்.
நகர்மன்றத் தலைவர் தெரிவித்தது போல், காயல்பட்டினம் நகராட்சியின் தெரு விளக்குகள் பராமரிப்பு மதிப்பீடு அதிகமா? பிற நகராட்சிகளில் இது
குறித்து எவ்வாறு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டது என்பதை தற்போது பார்ப்போம்.
ஒரு 40 வாட்ஸ் குழல் விளக்கை ஓர் ஆண்டுக்கு பராமரிக்க ...
--- தேவகோட்டை நகராட்சி தொகை - ரூபாய் 320
--- மணப்பாறை நகராட்சி தொகை - ரூபாய் 276
--- மேலூர் நகராட்சி தொகை - ரூபாய் 300
--- பம்மல் நகராட்சி தொகை - ரூபாய் 280
--- திருநெல்வேலி மாநகராட்சி தொகை - ரூபாய் 315
ஒரு 150 வாட்ஸ் சோடியம் விளக்கை ஓர் ஆண்டுக்கு பராமரிக்க ...
--- தேவகோட்டை நகராட்சி தொகை - ரூபாய் 1233
--- மணப்பாறை நகராட்சி தொகை - ரூபாய் ---
--- மேலூர் நகராட்சி தொகை - ரூபாய் 1200
--- பம்மல் நகராட்சி தொகை - ரூபாய் ---
--- திருநெல்வேலி மாநகராட்சி தொகை - ரூபாய் 1220
ஒரு 250 வாட்ஸ் சோடியம் விளக்கை ஓர் ஆண்டுக்கு பராமரிக்க ...
--- தேவகோட்டை நகராட்சி தொகை - ரூபாய் 1495
--- மணப்பாறை நகராட்சி தொகை - ரூபாய் 1900
--- மேலூர் நகராட்சி தொகை - ரூபாய் 1440
--- பம்மல் நகராட்சி தொகை - ரூபாய் 1420
--- திருநெல்வேலி மாநகராட்சி தொகை - ரூபாய் 1440
ஒரு 2*36 வாட்ஸ் சி.எப்.எல். விளக்கை ஓர் ஆண்டுக்கு பராமரிக்க ...
--- தேவகோட்டை நகராட்சி தொகை - ரூபாய் ---
--- மணப்பாறை நகராட்சி தொகை - ரூபாய் ---
--- மேலூர் நகராட்சி தொகை - ரூபாய் 804
--- பம்மல் நகராட்சி தொகை - ரூபாய் ---
--- திருநெல்வேலி மாநகராட்சி தொகை - ரூபாய் ---
ஒரு 400 வாட்ஸ் உயர்மின் கோபுர விளக்கை ஓர் ஆண்டுக்கு பராமரிக்க ...
--- தேவகோட்டை நகராட்சி தொகை - ரூபாய் 2331
--- மணப்பாறை நகராட்சி தொகை - ரூபாய் ---
--- மேலூர் நகராட்சி தொகை - ரூபாய் ---
--- பம்மல் நகராட்சி தொகை - ரூபாய் ---
--- திருநெல்வேலி மாநகராட்சி தொகை - ரூபாய் 2325
தேவகோட்டை நகராட்சி...
மணப்பாறை நகராட்சி...
மேலூர் நகராட்சி...
பம்மல் நகராட்சி...
திருநெல்வேலி மாநகராட்சி...
இங்கே வழங்கப்பட்டுள்ள விபரங்கள் 2010 - 2012 ஆம் ஆண்டு காலத்தவை ஆகும்.
இவற்றை அளவுகோலாக வைத்து, காயல்பட்டினம் நகராட்சியின் தெருவிளக்குகளை பராமரிக்க எவ்வளவு செலவாகும் என காணலாம்.
--- 1152 எண்ணம், 40 வாட்ஸ் குழல் விளக்குகள் = ரூபாய் 3,68,640 (@ ரூபாய் 320)
--- 119 எண்ணம், 150 வாட்ஸ் சோடியம் விளக்குகள் = ரூபாய் 1,46,727 (@ ரூபாய் 1233)
--- 150 எண்ணம், 250 வாட்ஸ் சோடியம் விளக்குகள் = ரூபாய் 2,85,000 (@ ரூபாய் 1900)
--- 108 எண்ணம், 2*36 வாட்ஸ் சி.எப்.எல். விளக்குகள் = ரூபாய் 86,832 (@ ரூபாய் 804)
--- 36 எண்ணம், 400 வாட்ஸ் உயர்மின் கோபுர விளக்குகள் = ரூபாய் 83,916 (@ ரூபாய் 2331)
--------------------------------------- மதிப்பீடு தொகை = ரூபாய் 9,71,115
காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள தெருவிளக்குகளின் எண்ணிக்கை மற்றும் வகைகளை கணக்கில் கொண்டால், ஆண்டு பராமரிப்பு தொகை சுமார் 10 லட்ச ரூபாயே வரவேண்டும். ஆனால் - நகராட்சி அலுவலர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முதல் ஆண்டு மதிப்பீட்டு தொகையோ ரூபாய் 20.28 லட்சம்!
ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட தொகை 10 சதவீதம் அதிகரிக்கப்படவேண்டும் என்றாலும், மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 35 லட்ச ரூபாயே வரவேண்டும். ஆனால் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் மதிப்பீட்டு தொகையோ ரூபாய் 68 லட்சம் ஆகும். பிற நகராட்சிகளோடு ஒப்பிடும்போது 33 லட்ச ரூபாய் அதிகம்!
தற்போது காயல்பட்டினம் நகராட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் (தீர்மானம் எண் 460) அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டால், காயல்பட்டினம் நகராட்சிக்கு ஆண்டொன்றுக்கு குறைந்தது ரூபாய் 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும். இதுவே மூன்றாண்டில் 30 லட்ச ரூபாய் என அதிகரிக்கும்.
[செய்தி திருத்தப்பட்டது @ 7:45pm/11.05.2013] |