காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் அறமார்க்க விழாக்கள் இம்மாதம் 04, 05, 06 தேதிகளில் நடைபெற்றன.
முதல் நாள் நிகழ்ச்சிகள்:
மே 04ஆம் தேதியன்று முதற்கட்ட நகர்வலத்துடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. அதன் தொடர்ச்சியாக, அன்று காலை வேளையில், மத்ரஸா உள்ளரங்கிலும், மாலை, இரவு வேளைகளில் மத்ரஸா வெளியரங்கிலும் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்:
இரண்டாம் நாளான மே 05ஆம் தேதியன்று அதிகாலையில் இரண்டாம் கட்ட நகர்வலமும், அதனைத் தொடர்ந்து, மத்ரஸா உள்ளரங்கில் சன்மார்க்கப் போட்டிகளும் நடைபெற்றன. மாலையில், மாணவர் உடற்பயிற்சி மற்றும் கண்கவர் தஃப்ஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றைத் தொடர்ந்து, இரவில் சன்மார்க்கப் போட்டிகள் வெளியரங்கில் நடைபெற்றன.
‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா:
மூன்றாம் நாளான மே 06ஆம் தேதியன்று காலை 09.30 மணிக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவில் (ஹிஃப்ழு மத்ரஸாவில்) பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த 11 மாணவர்களுக்கு ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டச் சான்றிதழ் இரு பிரிவாக வழங்கப்பட்டது.
திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்து, நிர்ணயிக்கப்பட்ட 3 தவ்ர் (மீள்பார்வை) ஒப்புவித்த மாணவர்களுக்கு தனியாகவும், 35 முறை மீள்பார்வை (தவ்ர்) ஒப்புவித்த 2 மாணவர்களுக்கு சிறப்புச் சீருடையுடன் தனியாகவும் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், தூத்துக்குடி மன்பஉஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் இம்தாதுல்லாஹ் பாக்கவீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
பட்டமளிப்பு விழா, மதியம் 01.30 மணியளவில் நிறைவுற்றது. பின்னர், பட்டம் பெற்ற மாணவர்களுடன் பார்வையாளர்கள் கட்டித் தழுவி, கைலாகு செய்து, வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
மார்க்க சொற்பொழிவு:
மாலையில், சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, மத்ரஸா பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ சொற்பொழிவாற்றினார்.
மார்க்க கலை நிகழ்ச்சிகள்:
அதனைத் தொடர்ந்து, பேச்சு, பாடல், உரையாடல், நாடகம் உள்ளிட்ட கலையம்சங்களை உள்ளடக்கி, மாணவர் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஹாஃபிழ்கள் அறிமுகம்:
அடுத்து, காலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது பெற்ற மாணவர்கள் வெளியரங்க மேடையில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர் உரை:
பின்னர், சிறப்பு விருந்தினர் மவ்லவீ ஹாஃபிழ் இம்தாதுல்லாஹ் பாக்கவீ சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
பரிசளிப்பு:
அதன் தொடர்ச்சியாக, மத்ரஸா மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு சன்மார்க்கப் போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கண்கவர் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை, நகரப் பிரமுகர்கள் மற்றும் மேடையில் முன்னிலை வகித்தோர் - சிறப்பு விருந்தினர் ஆகியோர் வழங்கினர்.
பரிசு பெற்றோர் விபரம்:
பரிசுகளைப் பெற்ற மாணவர்களின் விபரப் பட்டியல் வருமாறு:-
முதல்வருக்கு முன்னாள் மாணவர்களின் பரிசு:
பரிசளிப்பு விழாவின்போது, இந்த மத்ரஸாவிற்காக தன் வாழ்வையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மத்ரஸாவின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களை கவுரவிக்கும் முகமாக, இருசக்கர ஹோண்டா மோட்டார் சைக்கிள் வாகனம் ஒன்றை முன்னாள் மாணவர்கள் சார்பில் அன்பளிப்பாக அளிப்பதாகவும், மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுமாறும் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ கூறினார்.
அதனைத் தொடர்ந்து, மத்ரஸாவின் கவுரவ பேராசிரியர் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, வாகனத்தின் மாதிரி சாவியை மத்ரஸா முதல்வரிடம் அளிக்க, அனைவரின் பலத்த தக்பீர் முழக்கத்திற்கிடையில், முதல்வர் அதனைப் பெற்றுக்கொண்டு ஏற்புரை வழங்கினார்.
பைத் பயிற்சியாளருக்கு பரிசு:
பின்னர், ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியராக மட்டுமின்றி, மத்ரஸாவின் அனைத்து மாணவர்களுக்கும் பைத் பயிற்சியை தொடர்ச்சியாக அளித்து வரும் ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிபுக்கு, மத்ரஸா நிர்வாகத்தின் சார்பில் பணப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவாக, மத்ரஸா ஆசிரியர் கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் ஜெ.ஏ.தாவூத் மாஹின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், நகரப் பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஹாஃபிழ்கள் நகர்வலமாக இல்லம் சேர்ப்பு:
மறுநாள் - மே 07ஆம் தேதியன்று மாலை 05.00 மணியளவில், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற மாணவர்கள், தஃப்ஸ் அணிவகுப்புடன் பைத் பாடி, நகர்வலமாக அவரவர் இல்லங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அன்றிரவு 08.00 மணிக்கு, பொதுநல அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஹாஃபிழ் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சந்தாதாரர் உபசரிப்பு நிகழ்ச்சி:
மறுநாள், மே 08ஆம் தேதியன்று மாலை 05.00 மணியளவில், மத்ரஸாவிற்கு மாதாந்திர சந்தா தொகையை நன்கொடையாக அளித்து வருவோரை கண்ணியப்படுத்தும் வகையில், ‘சந்தாதாரர்கள் உபசரிப்பு நிகழ்ச்சி’ நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அனைத்து சந்தாதாரர்களுக்கும் சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டதோடு, நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இவ்வாறாக, மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் அறமார்க்க விழாக்கள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தன.
படங்களில் உதவி:
ஃபாஸில் ஸ்டூடியோ |