காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி (இன்று) துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற துவக்க ஆட்டத்தில், கேரள மாநிலம் –- திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோவளம் கால்பந்துக் கழக அணியும், திண்டுக்கல் மாவட்ட கால்பந்துக் கழக அணியும் மோதின.
துவக்கம் முதலே ஆட்டம் விறுவிறுப்புடன் சென்றது. ஆட்டத்தின் முதற்பாதியில், 29ஆவது நிமிடத்தில், திருவனந்தபுரம் அணி வீரர் அனில் முதல் கோலை அடித்து, தனதணியின் கணக்கைத் துவக்கி வைத்தார். இரண்டாவது பாதியில் , 53ஆவது நிமிடத்தில் அதே அணியின் பாலு என்ற வீரர் இரண்டாவது கோலை அடித்தார். 58 மற்றும் 63ஆவது நிமிடங்களில், அதே அணியின் ஸஜித் என்ற வீரர் இரண்டு கோல்களை அடித்து தனதணியின் கோல் கணக்கை நான்காக்கினார்.
ஆட்டம் நிறைவுறும் நேரத்தில், 77ஆவது நிமிடத்தில், திண்டுக்கல் அணி வீரர் ஜேம்ஸ் ராஜன் ஒரு கோல் அடித்தார். நிறைவில், 4-1 என்ற கோல் கணக்கில் திருவனந்தபுரம் அணி வெற்றிபெற்றது.
வெற்றிபெற்ற திருவனந்தபுரம் அணி, இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில், காரைக்கால் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
நேற்றைய போட்டியைக் காண, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். துவக்க நாள் என்பதால், ரசிகர்கள் எண்ணிக்கை முழுமையாக இல்லை.
நேற்றைய துவக்கப் போட்டியை, தமிழ்நாடு மருத்துவ கழகத்தின் செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைவருமான டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் துவக்கி வைத்தார். அவருக்கு, இரு அணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நேற்றைய போட்டி, “புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் – காயல்பட்டணம்.காம்
மற்றும்
A.K.முஹம்மத் இம்ரான் |