நாசரேத்தில் நடைபெற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி இறுதிப்போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
நாசரேத் கிறிஸ்துவ வாலிபர் ஐக்கிய சங்கம் சார்பில், ஐவர் கால்பந்து மின்னொளி போட்டி இம்மாதம் 10, 11 தேதிகளில் நடைபெற்றது.
இப்போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (யு.எஸ்.ஸி.), காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.), பிள்ளையான்மனை, தூத்துக்குடி, பாளையங்கோட்டை, வி.கே.புரம், நாசரேத் மற்றும் நாகர்கோவில் அணிகள் பங்கேற்றன.
முதல் சுற்று ஆட்டத்தில், பிள்ளையான்மனை அணியை டை ப்ரேக்கர் முறையில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
அரையிறுதிப் போட்டியில், வி.கே.புரம் அணியை எதிர்த்தாடிய ஐக்கிய விளையாட்டு சங்க அணி, டை ப்ரேக்கர் முறையில் வெற்றிபெற்றது.
மே 11ஆம் தேதியன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், நாகர்கோவில் அணியுடன் - காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி மோதியது. இப்போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் அபூபக்கர் என்ற வீரர் 2 கோல்களும், ஜமால், அமீர் ஆகிய வீரர்கள் தலா ஒரு கோலும் அடித்து, தமதணியை வெற்றிபெறச் செய்தனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு வெற்றிக்கோப்பை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும், இரண்டாமிடம் பெற்ற நாகர்கோவில் அணிக்கு 7 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
சிறந்த ஆட்டக்காரர்களுக்கான பரிசாக, ஐக்கிய விளையாட்டு சங்க அணியைச் சேர்ந்த வீரர்களான அபூபக்கர், அமீர் ஆகியோருக்கு - முறையே ரூபாய் 4 ஆயிரம், 3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்று வரும் மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டியின் நேற்றைய துவக்கப்போட்டி இடைவேளையின்போது, நாசரேத்தில் பெற்ற வெற்றியைப் பாராட்டி, ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது.
தகவல்:
S.B.B.புகாரீ |