காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி (இன்று) துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 15ஆம் தேதி புதன்கிழமை (இன்று) மாலையில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில், காரைக்கால் கோச்சிங் சென்டர் அணியும், சென்னை சிட்டி பொலிஸ் அணியும் மோதின.
ஆட்டம் துவங்கிய 16ஆவது நிமிடத்தில், எதிர்பாராத விதமாக சென்னை அணி வீரர் ஜெரால்ட் ஃபாப்லிஸ், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஒரு கோல் அடித்தார்.
பின்னர், இரு அணியினரும் சம வலிமையுடன் மோதினர். துவக்கத்தில் சுறுசுறுப்பாகவும், பின்னர் சற்று மந்தமாகவும் ஆட்டம் சென்றது.
ஆட்டத்தின் பிற்பாதியில், காரைக்கால் அணி வீரர்கள் எப்படியும் ஒரு கோல் அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆடியபோதிலும், அதற்கான வாய்ப்பு ஆட்டம் முடியும் வரை கிட்டவேயில்லை.
இதனையடுத்து, சென்னை சிட்டி பொலிஸ் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில், விளையாட தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியைக் காண நகரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
இன்று ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் திடீரென மைதானத்திற்கு வந்தார். அவருடன், திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன், காயல்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரி மைக்கேல் ராஜ் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் சிறிது நேரம் பேசிய அவர், சுற்றுப்போட்டி குறித்த விபரங்களைக் கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடங்கள் மைதானத்தைப் பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் திரும்பிச் சென்றார்.
நாளை நடைபெறும் போட்டியில், தமிழ்நாடு பொலிஸ் - சென்னை அணியும், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியும் மோதவுள்ளன.
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |