காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி (இன்று) துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 16ஆம் தேதி வியாழக்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற போட்டியில், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியும், சென்னை எஸ்.டி.எஸ். அணியும் மோதின.
துவக்கம் முதலே நெல்லை மாவட்ட அணியின் ஆட்டத்தில் நேர்த்தியும், ஊக்கமும் காணப்பட்டது. ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில், அந்த அணியின் சரவண குமாரும், சில நிமிடங்கள் கழித்து ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் அதே அணியின் திலீப் என்ற வீரரும் தலா ஒரு கோல் அடித்தனர்.
பின்னர், இரு அணிகளும் முனைப்புடன் விளையாடின. நெல்லை அணி தடுப்பாட்ட வீரர் ஒருவர் கோல் எல்லைக்குள் செய்த தவறு காரணமாக சென்னை அணிக்கு பெனாலிட்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில், சென்னை அணி வீரர் சத்தீஷ், அந்த வாய்ப்பை நேர்த்தியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார்.
பின்னர் இரு அணிகளும் இறுதி வரை போராடியும் ஆட்ட நிறைவு வரை யாரும் கோல் அடிக்கவில்லை. இதனையடுத்து, நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இன்று மாலையில் நடைபெறும் அடுத்த சுற்றுப் போட்டியில், பெங்களூரு கிக்கர்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது.
இப்போட்டியைக் காண நகரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டினம்.காம்
[செய்தி திருத்தப்பட்டது @ 12:57 / 17.05.2013] |