காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை வளாகத்தில் இயங்கி வரும் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் புதிய முதல்வராக, மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா தெரிவித்துள்ளதாவது:-
நமது மஹ்ழரா அரபிக் கல்லூரியில், 40 ஆண்டு காலம் கல்விச் சேவையாற்றிய கண்ணியத்திற்குரிய முதல்வர் மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ அவர்கள், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதியன்று, அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க, தாருல் ஃபனாவை (அழியும் உலகை) விட்டும், தாருல் பகா (எஞ்சிய உலகம்) அளவில் சேர்ந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (நிச்சயமாக நாம் யாவரும் அல்லாஹ்வுக்காகவே உள்ளவர்கள். மேலும் நிச்சயமாக நாம் அவனிடமே மீள வேண்டியவர்கள்.)
முதல்வர் பெருந்தகை அவர்களின் மறைவைத் தொடர்ந்து, புதிய முதல்வரை நியமிப்பதற்கான - மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 16ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 04.30 மணியளவில், மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை வளாகத்தில், அதன் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் புதிய முதல்வராக, மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ அவர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், நாளது தேதி முதல், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் முதல்வராக மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ அவர்கள் செயல்பாடுவார்கள் என இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, மஹ்ழத்துல் காதிரிய்யா சபையின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா தெரிவித்துள்ளார். |