காயல்பட்டினம் நகராட்சிக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகளை நிறைவேற்றி முடிக்காததை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்த போவதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்கு மே 17 (வெள்ளிக்கிழமை) அன்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வந்தார். அங்கிருந்த நகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் சிறிது நேரம் சந்தித்து பேசினார். பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
காயல்பட்டினம் நகராட்சிக்கு கடந்த 2012ம் நிதியாண்டில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 சாலை பணிகளுக்காக ரூ.21.50 லட்சம் ஒதுக்கி அனுமதி வழங்கப்பட்டது.
இதில் 3.50 லட்சத்திற்கான பணி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 சாலை பணிகளுக்கு நிர்வாக அனுமதி கொடுத்தும் டெண்டர் விட்டு 9 மாதங்கள் ஆகியும் பணிகள் நடக்கவில்லை. மேலும் மொகதூம் பள்ளி அருகிலும், ஜலாலியா அருகிலும் 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றி வினியோகம் செய்யப்படவில்லை.
நகராட்சியில் எம்எல்ஏ நிதி ஒதுக்கீட்டில் பணிகள் செய்யப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. பணிகளை உடனடியாக செயல்படுத்தாவிட்டால் காயல்பட்டினம் நகராட்சி பகுதி மக்கள், கவுன்சிலர்கள் திரட்டி எனது தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகராட்சி கவுன்சிலர்கள் சாரா உம்மாள், ஹைரிய்யா, ரங்கநாதன் @ சுகு, அஜ்வாது, திமுக மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், நகர இளைஞரணி செயலாளர் அப்துல்காதர் உட்பட பலர் இருந்தனர்.
தகவல்:
www.tutyonline.net
|