காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி (இன்று) துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) மாலையில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில், திருச்சி கஸ்டம்ஸ் அணியும், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியும் மோதின.
ஆட்டத்தின் துவக்கம் முதலே நெல்லை அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதற்பாதியிலேயே அந்த அணி இரண்டு கோல் அடித்தது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாதியில் ஈரணிகளுக்கிடையிலும் கடும் போட்டி நிலவியது. எனினும், ஆட்ட நிறைவு வரை ஈரணிகளும் கோல் அடிக்காததால், நிறைவில் நெல்லை மாவட்ட அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இம்மாதம் 29ஆம் தேதியன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில விளையாட தகுதி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியைக் காண நகரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
இன்றைய போட்டியில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கொங்கன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆட்டத்தின் இடைவேளையின்போது அவருக்கு, ஐக்கிய விளையாட்டு சங்க துணைச் செயலாளர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். பின்னர், அவருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்கு சிற்றுண்டி உபசரிப்பு செய்யப்பட்டது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |