காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி (இன்று) துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) மாலையில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில், திருச்சி கஸ்டம்ஸ் அணியும், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியும் மோதின.
இப்போட்டியில், நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், விளையாட தகுதி பெற்றுள்ளது.
காலிறுதிப் போட்டி வரை முன்னேறும் அணிகளுக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசும், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் பணப்பரிசும், இறுதிப் போட்டியில் இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூபாய் 25 ஆயிரம் பணப்பரிசும், இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூபாய் 35 ஆயிரம் பணப்பரிசும் அளிக்க நடப்பாண்டு சுற்றுப்போட்டிக் குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், காலிறுதிப் போட்டி வரை முன்னேறியமைக்காக, திருச்சி கஸ்டம்ஸ் அணிக்கு இன்று இரவு 07.00 மணியளவில், சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது. காயல்பட்டினம் ஜீ-ஸ்நாக்ஸ் நிறுவத்தின் அனுசரணையிலான இப்பரிசை, ஹாஜி எஸ்.எம்.பி.ஹல்லாஜி, திருச்சி அணி தலைவரிடம் வழங்கினார்.
ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், சுற்றுப்போட்டிக் குழு செயலாளர் பி.எஸ்.அப்துல் காதிர் நெய்னா, துணைச் செயலாளர் ஏ.எஸ்.புகாரீ, ஐக்கிய விளையாட்டு சங்கம் மற்றும் சுற்றுப்போட்டிக் குழு பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், கலாமீ யாஸர் அரஃபாத் ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். |