காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி (இன்று) துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 17ஆம் தேதி சனிக்கிழமை (இன்று) மாலையில் நடைபெற்ற போட்டியில், திருச்சி கஸ்டம்ஸ் அணியும், திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும் மோதின.
ஆட்டத்தின் துவக்கம் முதலே ஈரணிகளும் உற்சாகத்துடன் விளையாடியபோதிலும், திருவனந்தபுரம் அணியினரின் ஆட்டம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. எனினும், ஆட்டத்தின் 5ஆவது நிமிடத்தில், திருச்சி வீரர் மனோகர் தனக்கு நேரே வந்த பந்தை தலையால் முட்டி, நேர்த்தியாக கோலாக்கினார். அதன் பிறகு, ஆட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது.
ஆட்டத்தின் இடைவேளை நிறைவுற்ற பின்னர், 46ஆவது நிமிடத்திலும், 50ஆவது நிமிடத்திலும், திருச்சி அணியின் செல்வ தினேஷ் என்ற வீரர் தொடர்ந்து இருமுறை தவறிழைத்த காரணத்தால், மஞ்சள் அட்டை நடுவரால் காண்பிக்கப்பட்டது. இரு முறையும் ஒரே வீரருக்கு மஞ்சள் எச்சரிக்கை அட்டை காண்பிக்கப்பட்டதால், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர், திருவனந்தபுரம் அணி அற்புதமாக ஆடி, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது. எனினும், ஆட்ட இறுதி வரை கோல் எதுவும் அடிக்காததால், திருச்சி கஸ்டம்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், இம்மாதம் 19ஆம் தேதியன்று (நாளை) நடைபெறவுள்ள இரண்டாவது காலிறுதிப் போட்டியில், திருச்சி கஸ்டம்ஸ் அணி, நேற்றைய போட்டியில் வென்ற நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக அணியுடன் விளையாட தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியைக் காண நகரின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |