கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் புதிய தலைவராக, எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 17ஆவது பொதுக்குழுக் கூட்டம் கடந்த இம்மாதம் 03ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில், தோஹா மியூஸியம் பூங்காவில் கூடியது.
கூட்ட நிகழ்வுகள்:
மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.முஹம்மத் ஸாலிஹ் உமரீ இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். இந்தக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை முஹம்மத் ராஃபி ஏற்க, மயக்கும் மாலையில் வனப்பு மிகு வரவேற்புரையாற்றினார் செய்யித் முஹ்யித்தீன்.
கூட்ட நெறியாளர் உரை:
கூட்டத்தை நெறிப்படுத்திய ‘கவிமகன்’ காதர், நிகழ் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்கு தலைவர் பொறுப்பில் தொடர வேண்டியது அவசியமென்று கூறி, அதற்கேற்ப செயற்குழுவின் தீர்மான முன்வடிவை அறிவிக்க, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தக்பீர் முழங்கி, அதற்கு ஒப்புதலளித்தனர்.
துணைத்தலைவர் உரை:
தொடர்ந்து உரையாற்றிய துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ், புதிதாக உருவாக்கப்படவுள்ள ஷிஃபா மருத்துவ கூட்டமைப்பு குறித்தும், அதில் கத்தர் காயல் நல மன்றம் இணைந்து செயலாற்ற இருப்பதையும், அதற்கான அவசியத்தையும் விளக்கிக் கூறினார். இப்படி ஓர் அருமையான திட்டம் உருவாகக் காரணாமான சர்வதேச மன்றங்களின் அனைத்து நல்லிதயங்களுக்கும், கத்தர் மன்றத்தின் சார்பில் நன்றி நிறை வாழ்த்துக்களைப் பதிவு செய்தார்.
‘ஷிஃபா’வின் நிர்வாகச் செலவிற்காக மன்றத்தின் வகையில் ஆண்டுக்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்க முடிவு செய்திருப்பதையும், இன்ஷாஅல்லாஹ், வி.எம்.டி.அப்துல்லாஹ் நமது மன்றத்தின் ஷிஃபாவிற்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட ஒப்புதல் தந்திருப்பதையும் மகிழ்வுடன் அறிவித்தார்.
தலைவர் உரை:
மஃரிப் தொழுகைக்கான இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடர்ந்த அமர்வில், மன்றத்தின் நடப்பு மற்றும் புதிய தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் உரையாற்றினார்.
நம்பிக்கை வைத்தமைக்கு நன்றி:
தன் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தலைமைப் பொறுப்பை சுமத்தியுள்ள மன்றத்திற்கு நன்றி கூறிய அவர், ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர அனைவரது ஒத்துழைப்பையும் தொடர்ந்து நாடுவதாக தனது எண்ணத்தை வெளிப்படுத்தி, இந்த ஆண்டுக்கான மன்றத்தின் நகர்நலத் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
நகர்நலத் திட்டங்கள்:
இக்ராவுடன் இணைந்து பள்ளிச் சீருடை இலவச வினியோகத் திட்டம்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து, கே.எம்.டி.மருத்துவமனை ஒத்துழைப்புடன், திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் மூலம், இம்மாதம் 19ஆம் தேதியன்று நடத்தப்படவுள்ள புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்,
இக்ரா மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் விரைவில் நடத்தவிருக்கும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சியையொட்டி, அவ்வமைப்புகளுடன் இணைந்து கத்தர் காயல் நல மன்றம் நடத்தும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டி
மற்றும் ஆலோசனையிலுள்ள அனைத்து நலத்திட்டப் பணிகளும் இறையருளால் இனிதே நடைபெற, மன்ற உறுப்பினர்கள் அனைவரும் உழைக்க வேண்டியதும் - ஒத்துழைக்க வேண்டியதும் மிகவும் அவசியமென்று அவர் தனதுரையில் கூறினார்.
கல்வி உதவித்தொகை:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம், உயர் கல்விக்கான உதவித் தொகை ஆறு ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டு முதல் இரண்டு மாணவர்கள் அதிகரிக்கப்பட்டு எட்டு பேருக்கான உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்து, தனதுரையை நிறைவு செய்தார்.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
அவரைத் தொடர்ந்து, ஹாஜி கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் விடுத்த வேண்டுகோளையேற்று, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும், எதிர்வரும் ரமழானில் இறையருளால் தங்களது ஒருநாள் ஊதியத்தை நலத் திட்ட நிதியாக மன்றத்திற்கு வழங்கிட மனப்பூர்வமாக இசைவு தெரிவித்தனர்.
கூட்ட நிறைவு:
செய்யித் மீரான் நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் ‘முத்துச்சுடர்’ எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
சிற்றுண்டியுபசரிப்பு:
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும், மன்ற உறுப்பினர் ‘வங்காளம்’ உமர் அனஸ் தயாரிப்பில் உருவான சுவைமிகு காயல் கறிகஞ்சி, சமோஸா சிற்றுண்டியாகப் பரிமாறப்பட்டது.
கூட்ட ஏற்பாடுகளை, எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் (மம்மி) தலைமையில், காயல் நண்பர்கள் குழு சிறப்புற செய்திருந்தது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்றத்தின் செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
S.K.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம் |