செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இரண்டு ஆண்டுகளை இன்று பூர்த்தி செய்கிறது. இது குறித்து இன்று சட்டசபையில் முதல்வர் உரை நிகழ்த்தினார். அதன் முழு விபரம் வருமாறு:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
“நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால் ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எப்போதும் எல்லா உரிமையும் உண்டு” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் அமுத மொழிக்கேற்ப, மக்கள் நலன் ஒன்றையே மனதில் நிலை நிறுத்தி, அதற்கேற்றாற்போல் சட்டங்களை இயற்றி, திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்து இன்று மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
எனது தலைமையிலான அரசு இந்த ஈராண்டில் நிகழ்த்திய சாதனைகளை, மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களைப் பாராட்டி பல்வேறு சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் இங்கே உரையாற்றி இருக்கிறீர்கள். இந்த அரசை பாராட்ட மனம் இல்லாதவர்கள் வெளியில் இருந்து கொண்டு அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். சிலர் இந்த அரசுக்கு எதிராக பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்கள். இங்கே இந்த அரசின் சாதனைகளை
போற்றியவர்களுக்கும், வெளியில் இருந்து கொண்டு இந்த அரசை தூற்றியவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்களின் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு இருப்பவர்கள் இந்த அரசின் திட்டங்களை, சாதனைகளை நிச்சயம் பாராட்டுவார்கள். அந்த அளவுக்கு மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் இந்த அரசால் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னிலை மாநிலமாக விளங்க வேண்டும்; எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்; உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்; ஒதுக்கப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் பொருளாதார முன்னேற்றத்தில் உரிய பங்கினைப் பெற வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
மனித வள மேம்பாட்டிற்கு, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக விளங்கும் துறைகளான கல்வி, மக்கள் நல்வாழ்வு போன்ற துறைகளுக்கு அதிக நிதிகளை எனது அரசு ஒதுக்கி இருக்கிறது.
கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், பல விதமான உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், சீருடைகள், மடிக் கணினி, மிதி வண்டி, கட்டணமில்லா பேருந்து வசதி, மேல்நிலை வகுப்புகளில் இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பள்ளிகளை தரம் உயர்த்துதல், கல்வியில் தரத்தை மேம்படுத்த இரண்டே ஆண்டுகளில் 60,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படுதல், கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை 2
நிரப்புதல், புதிய பல்கலைக் கழகங்களை உருவாக்குதல், புதிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளை உருவாக்குதல் என கல்வியில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது இந்த அரசு.
இதே போன்று சுகாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், புதிய மருத்துவமனைகளை உருவாக்குதல், நுண்ணணு தொற்றுநோய் ஆய்வகங்களை
தோற்றுவித்தல், மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், இந்திய முறை மருத்துவக் கல்லூரிகளுக்கென, தனி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு, கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில் நுட்பப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமனம் செய்தல், மகப்பேறு நிதி உதவி வழங்குதல், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் விரிவாக்கப்பட்ட முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம், என மருத்துவத் துறையில் ஒரு மறுமலர்ச்சியை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஏழை, எளியோர் நலன் காக்கும் வகையிலும், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விலையில்லா அரிசி, மலிவு விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகிய பொருட்களை வழங்கும் சிறப்புத் திட்டம், சென்னை மாநகராட்சியின் சார்பில் மலிவு விலை உணவகங்கள், வெளிச் சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வண்ணம் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் நீக்கம் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு
எடுத்துள்ளது.
இது மட்டுமல்லாமல், ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம், திறன் வளர் பயிற்சிகள், தொழில் துவங்க கடன் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஏழை, எளிய பெண்களைப் பாதுகாக்கும் வகையில் திருமாங்கல்யத்துடன் கூடிய திருமண உதவித் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் இரட்டிப்பு, தாய்மார்களின் நலன் காக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி, பசுமை வீடுகள் என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயத் துறையை பொறுத்த வரையில், இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடும் வண்ணம் பயிர்க் கடன் வழங்குதல், இந்தியாவிலேயே முதன் முறையாக வறட்சிக்கு நிவாரணம், தானே புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், உற்பத்தியை பெருக்க புதிய உத்திகளை கையாளுதல், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் முதலான நுண்ணீர் பாசன அமைப்புகளை சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் வழங்குதல் என விவசாய உற்பத்தியை பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
வறட்சி நிவாரணத்தைப் பொறுத்த வரையில், டெல்டா மாவட்டங்களுக்காக 524 கோடியே 25 லட்சம் ரூபாயும், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்காக 835 கோடியே 21 லட்சம் ரூபாயும் என மொத்தம் 1,359 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்திற்கென வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2,521 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் இதர வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு உள்ளது. ஆக மொத்தம், 3,881 கோடியே 21 லட்சம் ரூபாய் வறட்சி நிவாரணத்திற்கென அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று
வருகின்றன.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில், இந்த இரண்டு ஆண்டுகளில், 26,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல், மக்களின் தேவைகளை கேட்டறிந்தும், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவிக்கும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் என்னால் நாள்தோறும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களின் நன்மைகளை நன்கு அறிந்த மாமன்ற உறுப்பினர்கள், இந்தத் திட்டங்களின் பயனாளிகள், தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கிப் போகிறது என்பதை அறிந்த நல் உள்ளம் படைத்த பொதுமக்கள் இந்த அரசை, இந்த அரசின் சாதனைகளை மனமுவந்து பாராட்டுகிறார்கள். இந்த அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பயன் அளித்தாலும், தங்களுக்கு பயன் அளிக்காது, தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிவிடும் என்று நினைப்பவர்கள் தான் இந்த அறிவிப்புகளுக்காக அரசை குறை கூறிக் கொண்டு இருக்கிறார்கள், கேலி
செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த அரசின் திட்டங்கள் எல்லாம் நல்லதா. கெட்டதா என்பது காண்பவரின் தன்மையைப் பொறுத்தது.
ஒரு முறை “உலகம் நல்லதா? கெட்டதா?” என்ற கேள்வியை தன் குருவிடம் கேட்டான் ஒரு சிஷ்யன்.
உடனே, “பூனையின் பல் நல்லதா? கெட்டதா?” என்று திருப்பிக் கேட்டார் குரு.
சிஷ்யன் குழம்பினார்.
கேள்விக்குப் பதில், கேள்வி தான் என்பது ஞானிகள் கையாளும் முறை.
சிஷ்யன் சிந்திக்க ஆரம்பித்தான்.
பின்னர் குரு விளக்கினார்.
பூனைக் குட்டியிடம் போய், தாய்ப் பூனையின் பல் நல்லதா? கெட்டதா? என்று கேட்டால், தாய் பூனையின் பல், கருணையின் இருப்பிடம் என்று சொல்லும். ஏனென்றால், பூனைக் குட்டி தனது தாயை முற்றிலும் நம்பியிருக்கிறது. பல சமயங்களில், தாய் பூனை, தன் குட்டியை பல்லால் கவ்விக் கொண்டு போய் பாதுகாப்பான இடத்தில் வைக்கிறது. அதற்குத் தேவையான உணவினை அளிக்கிறது. எனவே, பூனைக் குட்டிக்குப் பூனையின் பல், கருணையின் இருப்பிடமாக விளங்குகிறது.
அதே பூனையின் பல்லைப் பற்றி ஒரு எலியிடம் கேட்டால் அது என்ன சொல்லும் தெரியுமா? கடவுள், பூனைக்கு குத்தூசியைப் போன்ற பற்களைப் படைத்திருக்கிறாரே? என்ன கொடுமை? என்று கவலையோடு சொல்லும்.
அது போல, உலகம் நல்லதா, கெட்டதா என்பதும் உலகத்தைக் காண்பவரின் தன்மையைப் பொறுத்தது என்று கூறினார் குரு. சிஷ்யன் சிந்திக்கத் தொடங்கினான். இது பகவான் ராமகிருஷ்ணர் சொல்லிய விளக்கம்.
தமிழக மக்களை, தமிழ்நாட்டை தாய் போல் அரவணைத்து காப்பாற்றும் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசை தமிழக மக்கள் எல்லோரும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், வயிற்றெரிச்சல் காரணமாக, தங்களுடைய அரசியல் எதிர்காலம் அழிந்து போய் விடுமே என்று அஞ்சி, இந்த அரசின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். விதி 110-ன் கீழ் அறிவிக்கும் திட்டங்களைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள், குறை கூறுகிறார்கள்.
2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய இரண்டாண்டுகளில் சட்டமன்றப் பேரவை விதி 110-இன் கீழ் 63 அறிக்கைகளை இந்த மாமன்றத்தில் நான் சமர்ப்பித்துள்ளேன். இந்த 63 அறிக்கைகளில் 136 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் 127 அறிவிப்புகள் மீது முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கட்டுமானப் பணிகள் தொடர்புடைய பணிகள் நடைபெற்று வருகின்றன; எஞ்சியவை
முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே எடுத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
30.08.2011 அன்று குறைந்த செலவில் நிறைவான சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழக மக்களுக்கு 2.9.2011 முதல் வழங்கும் என்றும், சந்தாதாரர்களிடம் இருந்து 70 ரூபாய் மட்டுமே மாத சந்தாத் தொகையாக வசூலிக்கப்படும் என்றும் நான் அறிவித்திருந்தேன். இதன்படி, 2.9.2011 முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது சேவையை தொடங்கி இன்று 61.63 லட்சம் சந்தாதாரர்கள் அரசு கேபிள் டிவி இணைப்பைப் பெற்றுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
100 அரசு மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும், இதற்கென 900 ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும் என்றும் 12.8.2011 அன்று நான் அறிவித்தேன். அதன்படி, 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
வன விலங்குகளால் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும் என்று 17.8.2011 அன்று நான் அறிவித்ததற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகைகள் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் அளவுக்கு கூடுதல் சேமிப்பு வசதி ஏற்படுத்தும் வகையில் 1166 சேமிப்புக் கிடங்குகள் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் கட்டப்படும் என 25.8.2011 அன்று நான் அறிவித்தேன். இதில் 1141 கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 கிடங்குகள் இன்னும் ஒரு சில நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற விரிவுபடுத்தப்பட்ட புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என 10.9.2011 அன்று இந்த மாமன்றத்தில் அறிவித்தேன். இது நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த நிதி ஆண்டு முடிய 1508 கோடியே 60 லட்சம் ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதே போன்று, மானசரோவர் - முக்திநாத் செல்லும் இந்து பயணிகளுக்கு அரசு மானியம், வருவாய்த் துறையில் 9 புதிய வட்டங்கள், புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பணியிடங்களை நிரப்புதல், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைத் தேர்வு செய்ய தனி வாரியம், சத்துணவு உண்ணும் பள்ளிக் குழந்தைகளுக்கு இணை சீருடைகள் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாகப்பட்டினம் பகுதியில் மீன் வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என 13.9.2011 அன்று நான் அறிவித்ததற்கு இணங்க, தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டு, துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பல்கலைக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை காணொலி காட்சி மூலம் 20.2.2013 அன்று நான் துவக்கி வைத்தேன்.
பொது மக்களிடமிருந்து வரப் பெறும் கோரிக்கைகள், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை ஆராய்ந்து
பார்த்து, மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை வகுத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் நான் நாள்தோறும் புதிய அறிவிப்புகளைத் தொகுத்து, அறிக்கை வெளியிட்டு வருகிறேன். இதற்கு பொதுமக்கள் இடமிருந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் இடமிருந்தும் மிகுந்த வரவேற்பும், பாராட்டும் கிடைத்து வருகிறது.
இதனைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி இவற்றை அறிக்கைகள் வாயிலாகவும், பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும் விமர்சித்து வருகின்றார்.
சட்டமன்ற விதி 110-இன் கீழ் நான் வெளியிடும் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் வருமா? அல்லது இதற்கென தனியாக நிதி ஒதுக்கப்படுமா? என்று கேட்டுவிட்டு, ஏகடியமாக “வெறும் அறிவிப்பு” என்பதின் கீழ் வருமா? முதலமைச்சரை இந்த அறிவிப்புக்காக பேரவையில் பாராட்டுகிறார்களே அவர்களுக்குத் தான் வெளிச்சம் என்று திரு. கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், கோடிக்கணக்கான ரூபாய்க்கான அறிவிப்புகள் அன்றாடம் முதலமைச்சரால் செய்யப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான அறிவிப்புக்களை எல்லாம் நிதிநிலை அறிக்கையிலேயே ஏன் செய்யவில்லை? துறைக்கான அமைச்சர்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில்
அளித்த போது இந்த அறிவிப்புகளை எல்லாம் அமைச்சர்கள் ஏன் செய்யவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐந்து முறை முதலமைச்சராகவும், நான்கு முறை நிதி அமைச்சராவும் பதவி வகித்த திரு. கருணாநிதி, திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறைகள் தெரியாமலேயே அத்தனை ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாரா? நிதி ஒதுக்கம் பற்றி அறியாமலேயே கோப்புகளில் கையெழுத்து இட்டாரா? அல்லது தற்போது வேண்டுமென்றே இவ்வாறு கேட்கிறாரா? என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு நிதியாண்டிலும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் போது, தொடர் திட்டங்களுக்குத் தேவையான நிதி, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். இதே போன்று, பகுதி 2 திட்டங்களின் கீழ், புதிதாக செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வரவு செலவு திட்டத்தில் உள்ள அறிவிப்புகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். செலவு ஏற்படக் கூடும் என்று அனுமானிக்கக் கூடிய இனங்களுக்கு Token Provision ஆக, அடையாள ஒதுக்கீடாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பின் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களுக்கு, திட்ட நிதி தேவை முழுமையாக வரையறுக்கப்படாத நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கம் செய்ய இயலாது. எனவே தான், நிதி ஒதுக்கம் இல்லாத புதிய திட்டங்களுக்கு தனியே அரசாணை பிறப்பிக்கப்பட்டு அவை “புதுப் பணிகளாகவும்”, “புது துணைப் பணிகளாகவும்” கருதப்பட்டு திருத்திய மதிப்பீட்டில் தேவையான நிதி முழுமையாக ஒதுக்கீடு செய்யப்படும். அவசரமாக அப்புதிய திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டிய நிலையில் எதிர்பாரா செலவு நிதி அதாவது Contingency Fund –லிருந்து நிதி வழங்கப்பட்டு செலவு செய்யப்படும்.
பின்னர், இதற்கான நிதி, முதல் துணை மதிப்பீடு மற்றும் இறுதி துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டு சட்டப் பேரவையின் அனுமதி பெறப்படும் என்பதை பேரவைக்கு வராமல் வெளியே இருக்கும் மாண்புமிகு உறுப்பினர் திரு. மு. கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் அறிவிக்கும் அறிவிப்புகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் எந்த விதமான சந்தேகமும் திரு.மு.கருணாநிதிக்கு எழ வேண்டியதில்லை என்பதால் தான், ஏற்கெனவே கடந்த இரண்டாண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். வெறும் அறிவிப்பு என்பது திரு. கருணாநிதிக்கு தான் கை வந்த கலை.
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்ற போது, “தமிழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பண்படுத்தி, நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம்” என்ற தேர்தல் வாக்குறுதி தி.மு.க.வினால் அளிக்கப்பட்டது. அரசின் வசம் மூன்றரை லட்சம் ஏக்கர் தரிசு நிலம் மட்டுமே இருக்கின்ற நிலையில், இந்தத் திட்டம் மக்களை ஏமாற்றுகின்ற திட்டம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போதே நான் எடுத்துக் கூறினேன்.
எனினும், 2006 ஆம் ஆண்டு ஆளுநர் உரை மற்றும் 2006-2007 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆகியவற்றில் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று திமுக அரசால், தெரிவிக்கப்பட்டு இருந்தது. 27.5.2006 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் நான் கலந்து கொண்டு, இது குறித்து விரிவாக நான் எடுத்துரைத்து, இல்லாத நிலத்தை எப்படி வழங்கப் போகிறீர்கள்? எப்படி வழங்க முடியும்? என்று வினவினேன்.
இதற்குப் பதில் அளித்த திரு. கருணாநிதி, கையகல நிலமாக இருந்தாலும், அது ஏழை விவசாயிகளுக்குத் தான் வழங்கப்படும் என்று கூறினார். கடைசி வரை நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பத்திற்கு குறைந்த பட்சம் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை. மாறாக, ஏழைகளிடமும், நில உரிமையாளர்களிடமும் இருந்த நிலங்கள் தி.மு.க.வினரால் அபகரிக்கப்பட்டன. எனவே, வெறும் அறிவிப்பு என்பது திரு. கருணாநிதிக்கு தான்
பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2011-ஆம் ஆண்டு வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காக நான் எடுத்த நடவடிக்கை காரணமாக உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் டன் என்ற
அளவையும் கடந்து சாதனை படைத்தது என்று என்னை நானே பாராட்டிக் கொண்டதாகத் தெரிவித்து, 2011 ஆம் ஆண்டு மே மாதம் வரை திராவிட
முன்னேற்றக் கழக ஆட்சி தான் இருந்தது என்றும், எனவே வேளாண் உற்பத்திப் பெருக்கத்தில் திமுக-விற்கும் பெருமை உண்டு என்றும் திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. ஏப்ரல், மே மாதங்களில் என்ன சாகுபடி செய்து, வேளாண் உற்பத்தியை பெருக்க முடியும்? எனவே, தனக்கு உரிமை இல்லாத பெருமையில் பங்கு கேட்கக் கூடாது என திரு. மு. கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கால்நடை பராமரிப்புத் துறையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எப்போதும் இல்லாத அளவாக 274 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது என்று நான் கூறியதாகவும், ஆனால் 2013-2014 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 115 கோடி ரூபாய் செலவில் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், கால்நடை மருத்துவமனைகளைச் சீரமைக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது என்றும் கூறி, இதிலே எது உண்மை என்று அரசு தான் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
திரு கருணாநிதி. கடந்த இரண்டாண்டு காலத்தில் எனது தலைமையிலான அரசு, கால்நடை பராமரிப்புத் துறை சம்பந்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 274 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 2009-2010 மற்றும் 2010-2011 ஆகிய இரண்டாண்டு திமுக ஆட்சிக் காலத்தில் 12 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.
2013-2014 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள். எனவே, இவை இரண்டுமே உண்மை தான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதே போன்று, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான
சேமிப்புக் கிடங்குகளுக்கு நிதி ஆதாரம் பற்றி திரு. கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இத்திட்டங்களுக்காக நபார்டு மூலம் கடன் பெற்று புதிய திட்டப் பணியாகச் செயல்படுத்தப்படும்.
ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திரு. மு.கருணாநிதி மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த எண்ணியிருந்தால், அவற்றுக்கான அறிவிப்புகளை சட்டமன்றத்திலே தெரிவித்து செயல்படுத்தி இருக்க முடியும். ஆனால், அவ்வாறு மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த அவருக்கு மனம் இல்லை என்பது தான் உண்மை.
எனவே தான், மக்களுக்காக எனது தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ள திட்டங்களை குறை கூறும் முகத்தான், காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இது போன்ற அபத்தமான கேள்விகளை எழுப்பி வருகிறார். “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்ற புறநானூற்று வரிகளை திரு. கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
சட்டமன்றத்திலே அந்தந்த துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் முடிந்ததும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே இந்த அறிவிப்புகளை ஏன் செய்யவில்லை என்று திரு. கருணாநிதி கேட்டுள்ளார். இந்தப் புதிய அறிவிப்புகள் அறிவிப்பாகச் செய்யப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்படுபவை அல்ல. மானியக் கோரிக்கை மீதான விவாதங்களின் போது, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்துச் சொல்லும் ஆலோசனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை நிதித் துறையுடனும், உயர் அதிகாரிகளுடனும், அமைச்சர் பெருமக்களுடனும் கலந்தாலோசித்து அதன் பிறகே
அறிவிப்புகள் வெளியிட இயலும். அந்த அடிப்படையில் தான், பல அறிவிப்புகள் இந்தப் பேரவையில் என்னால் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக, பல்வேறு குடிநீர் திட்டங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் திட்டம் போன்ற பல்வேறு அறிவிப்புகள் இந்த அடிப்படையில் தான் என்னால் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அரசை குறை சொல்வதோடு திமுக-வினர் நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த சட்டப் பேரவையில் அறிவிக்கப்படும் திட்டங்களை பாராட்டும் சட்டமன்ற உறுப்பினர்களையும் கேலி செய்கிறார்கள். மாண்புமிகு உறுப்பினர் திரு. துரைமுருகன், ஒரு பொதுக் கூட்டத்திலே “இது 110 சர்க்கார். நாள் தவறினாலும் சரி, 110 படிக்காமல் இருப்பதில்லை. அந்த 110 படித்து முடித்தவுடன், சட்டமன்றத்திலே சிறு குறு விவசாயிகள் இருக்காங்க அந்த ஒரத்திலே, ஒரு எம்.எல்.ஏ., இரண்டு எம்.எல்.ஏ., அரை எம்.எல்.ஏ., இவங்க பூராவும் எழுந்துகிறாங்க. உடனே, பாராட்டு பாராட்டு, பாராட்டு.” என்று பேசியுள்ளார். இவ்வாறு பேசி உள்ளதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் திரு. துரைமுருகன் அவமானப்படுத்தவில்லை. சிறு, குறு விவசாயிகளையும் இழுக்காகப் பேசி அவமானப்படுத்தி உள்ளார். தங்களது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு செய்ய இயலாத நன்மையை எல்லாம் எனது தலைமையிலான அரசு செய்து வருகிறதே என்கிற ஆதங்கத்தில் பொறாமையில், கோபத்தில், வெறுப்பில், வார்த்தைகளை உதிர்த்து
இருப்பது தி.மு.க.வினர் விரக்தியின் விளிம்பில் இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
யார் என்ன சொன்னாலும், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதற்கேற்ப, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கவும், தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டவும், இழந்த உரிமைகளை மீட்கவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். இந்த அரசின் சாதனைகளை பாராட்டி, வாழ்த்தி பேசியவர்களின் பொன்மொழிகள் எனக்கு மேலும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளன. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சட்டமன்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் இந்த அரசின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் பாராட்டி, வாழ்த்தி பேசியதற்கு எனது இதயம்
கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது வாழ்க்கையில், போராட்டங்கள் நிறைந்த வாழ்கையில், எத்தனையோ பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால் கிடைத்தற்கரிய பெரிய பேறாக நான் கருதுவது எல்லோரும் வாய் நிறைய “அம்மா” என்று அழைப்பதுதான். வயது என்னவாக இருந்தாலும்,
அனைவரும், பெரியவர்கள், இளையவர்கள், குழந்தைகள் அனைவருமே என்னை அம்மா என்று அழைப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். எல்லோருக்கும் நல்ல அம்மாவாக இருந்து கடமை ஆற்று வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அம்மாவின் அன்பு தன்னலமற்ற அன்பு, சுயநலம் இல்லாத அன்பு. தமிழக மக்கள் நலனே என் நலன் என்று கூறி, தமிழக மக்களுக்கும், இந்த மாமன்ற உறுப்பினர்களுக்கும் எனது
நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.
இவ்வாறு முதல்வர் உரை நிகழ்த்தினார். |