காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் 5ஆம் மாத கலந்துரையாடல் நிகழ்ச்சி, இம்மாதம் 11ஆம் தேதி சனிக்கிழமை மாலை 05.40 மணியளவில், காயல்பட்டினம் ரிஸ்வான் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
துவக்கமாக, அமைப்பாளர் ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் எழுதிய அறிக்கையை கவிஞர் ஷேய்க் வாசித்தார். அதன் பின், அனைவரையும் வரவேற்றுப் பேசிய அமைப்பாளர், நடப்பு கூட்டத்திற்கு இட அனுமதி பெற்றுத் தந்தமைக்காக, நூலகர் அ.முஜீபுக்கு நன்றி கூறினார்.
அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியன்று, திருச்செந்தூர் அரசு நூலகத்தில் நடைபெற்ற - “என்னை செதுக்கிய புத்தகங்கள்” என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில், காயல்பட்டினம் அரசு நூலகத்தின் சார்பில் கலந்துகொண்டு - இரண்டாம் பரிசு வென்ற காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசியரும், எழுத்தாளருமான மவ்லவீ சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீக்கு, அமைப்பாளர் ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ், எழுத்தாணிகள் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய பரிசை வழங்கினார்.
பின்னர், மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற எம்.ஜெமேஷா மதார், “அணுசக்தி என்றால் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அடுத்து, அரசராக வாழ்ந்து - பின்னர் ஸூஃபீயாக மாறிய இப்றாஹீம் பின் அத்ஹம் அவர்கள் குறித்துப் பேசியதுடன், பொது அறிவு தொடர்பான பத்து தகவல்களைக் கூறினார்.
அடுத்து, இணையதள செய்தி சேகரிப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், இந்திரா காந்தி ஆட்சியில் இந்திய விஞ்ஞானத்தில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து பேசினார்.
இக்கூட்டத்தில், அருணாச்சலபுரம் க.வில்சன், தேசபிதாமகன் சேவா சங்கத்தின் அமைப்பாளர் வி.எம்.பாலமுருகன், அரசு நூலகரும் - காயல் இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்றத்தின் கவுரவ ஆலோசகருமான அ.முஜீப் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இனி வருங்காலங்களில் நடைபெறும் கூட்டங்களுக்கான அழைப்பை அஞ்சலட்டையில் அனுப்புவதைத் தவிர்த்து, அனைவரது கைபேசி எண்களுக்கும் தொடர்புகொண்டு அழைக்கப்படும் என கூட்டத்தின் நிறைவில் தெரிவிக்கப்பட்டது. |