காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி (இன்று) துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 14ஆம் தேதி திங்கட்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில், ஊட்டி மாவட்ட கால்பந்து கழக அணியும், சென்னை சிட்டி பொலிஸ் அணியும் மோதின.
துவக்கம் முதலே சாதாரணமாகச் சென்றுகொண்டிருந்த ஆட்டத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. ஊட்டி அணியின் தடுப்பாட்ட வீரர் சென்னை வீரரை கோல் காப்பு எல்லைக்குள் தள்ளிவிட, நடுவர் உடனடியாக சென்னை அணிக்கு ஃப்ரீ கிக் பெனாலிட்டி வாய்ப்பளித்தார். அதை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட சென்னை அணி வீரர் அண்ணாமலை, ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்து, தனதணியின் கணக்கைத் துவக்கி வைத்தார்.
அடுத்த நான்கு நிமிடங்களில், ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில், அதே அணி வீரர் பரத் கிங்ஸ்லி மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் ஊட்டி வீரர் அலெக்ஸ் கூட்டன் ஒரு கோல் அடித்து தனதணியின் கணக்கைத் துவக்கினார்.
65ஆவது நிமிடத்தில், மீண்டும் சென்னை அணி வீரர் ஜெரால்ட் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் நிறைவில், சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறும் முதலாவது காலிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
நகரின் பல பகுதிகளிலிருந்தும், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டியைக் கண்டுகளித்தனர்.
இன்று (மே 15) முதலாவது காலிறுதிப்போட்டி நடைபெறுகிறது. காரைக்கால் கோச்சிங் சென்டர் அணியும், நேற்றைய போட்டியில் வெற்றிபெற்ற சென்னை சிட்டி பொலிஸ் அணியும் மோதுகின்றன.
படங்களில் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |