காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் சார்பில், மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டிகள், இம்மாதம் 12ஆம் தேதி துவங்கி, 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மே 13ஆம் தேதி திங்கட்கிழமை (இன்று) மாலையில் நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில், கேரள மாநிலம் –- திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோவளம் கால்பந்துக் கழக அணியும், காரைக்கால் கோச்சிங் சென்டர் அகடமி அணியும் மோதின.
ஆட்டம் துவங்கியது முதல் ஈரணிகளும் சமபலத்துடன் விளையாடின. எனினும், திருவனந்தபுரம் அணியிடம் கூடுதல் நேர்த்தி காணப்பட்டது.
ஆட்டம் துவங்கிய 5ஆவது நிமிடத்தில், காரைக்கால் வீரர் கபிலன் ஒரு கோல் அடித்தார். அதனையடுத்து, ஆட்டத்தின் வேகம் கூடியது. எப்படியும் கோல் அடித்தாக வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடிய திருவனந்தபுரம் அணி, 55ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தது. அந்த அணி வீரர் பெய்ஜூ அந்த கோலை அடித்தார். இதன் மூலம் ஈரணிகளும் சமநிலை பெற்றன.
ஆட்ட நிறைவு வரை ஈரணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையிலிருந்ததால், சமனுடைப்பு முறை அறிவிக்கப்பட்டது.
அதில், காரைக்கால் அணியின் சார்பில், விக்னேஷ், அஷ்வின், ராஜா, ராமச்சந்திரன் ஆகிய வீரர்களும், திருவனந்தபுரம் அணியின் சார்பில், ஸஜீத், பெனிஸ்டன் ஆகிய வீரர்களும் கோல் அடித்தனர். திருவனந்தபுரம் அணியின் ஒரு வீரர் அடித்த பந்து கோல் கம்பத்தில் மோதி வெளிச்சென்றது. மற்றொரு வீரர் அடித்த பந்தை, காரைக்கால் கோல் கீப்பர் அற்புதமாக தடுத்தார். இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் காரைக்கால் அணி வெற்றிபெற்று, இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறும் முதலாவது காலிறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
நகரின் பல பகுதிகளிலிருந்தும், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டியைக் கண்டுகளித்தனர்.
நாளை (மே 14) நடைபெறும் போட்டியில், ஊட்டி மாவட்ட கால்பந்து கழக அணியும், சென்னை சிட்டி பொலிஸ் அணியும் மோதவுள்ளன.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 09:43 / 14.05.2013] |