காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் அறமார்க்க விழாக்கள் இம்மாதம் 04, 05, 06 தேதிகளில் நடைபெற்றன.
மே 04ஆம் தேதியன்று முதற்கட்ட நகர்வலத்துடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கின. அதன் தொடர்ச்சியாக, அன்று காலை வேளையில், மத்ரஸா உள்ளரங்கிலும், மாலை, இரவு வேளைகளில் மத்ரஸா வெளியரங்கிலும் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.
இரண்டாம்கட்ட நகர்வலம்:
இரண்டாம் நாளான மே 05ஆம் தேதியன்று அதிகாலை 06.20 மணியளவில், மஜ்லிஸ் மைதானத்தில் கொடியேற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக காலை 07.00 மணியளவில் மத்ரஸா மாணவர்களின் இரண்டாம் கட்ட பேரணி நகர்வலமாகக் கிளம்பியது.
நஹ்வீ அப்பா திடலில் வரவேற்பு:
காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை, நெசவுத் தெரு, கே.டி.எம். தெரு, அலியார் தெரு, பரிமார் தெரு, அப்பா பள்ளி தெரு, மரைக்கார் பள்ளித் தெரு, கொச்சியார் தெரு வழியாகச் சென்ற பேரணி, சொளுக்கார் தெருவில், நஹ்வீ அப்பா திடலில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியுடன் நிறைவுற்றது.
நஹ்வீ அப்பா திடலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது, மத்ரஸா நல நிதியாக ரூபாய் 15 ஆயிரம் தொகை, அப்பகுதி மக்கள் சார்பில் நன்கொடையளிக்கப்பட்டது.
சன்மார்க்கப் போட்டிகள்:
பின்னர், அன்று காலையில் மத்ரஸா உள்ளரங்கில் மாணவர் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.
மாலை நிகழ்ச்சிகள்:
மாலை 04.30 மணியளவில், மத்ரஸா வெளியரங்க மைதானத்தில், கண்ணைக் கவரும் வகையில் மாணவர் அணிவகுப்பு மற்றும் தஃப்ஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஹாமிதிய்யா ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப் கிராஅத் ஓதி தஃப்ஸ் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ வரவேற்புரையாற்றினார்.
நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்த தஃப்ஸ் நிகழ்ச்சியில், இருதய நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் மஹ்பூப் சுப்ஹானீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர் கொடியேற்ற, அதனைத் தொடர்ந்து, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மாணவர் உடற்பயிற்சி மற்றும் தஃப்ஸ் நிகழ்ச்சி:
பின்னர், மாணவர் உடற்பயிற்சி, வண்ணமயத்துடன் கண்களைக் கவர்ந்த தஃப்ஸ் நிகழ்ச்சி, மாணவர் அணித் தலைவர்களின் அணிவகுப்பு ஆகிய நிகழ்ச்சிகள், பொதுமக்களின் பார்வைக்கு விருந்தளிப்பதாய் அமைந்திருந்தன.
தஃப்ஸ் நிகழ்ச்சியின்போது, மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா, ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப், பாடகர் எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன் ஆகியோர் பாடல்களைப் பாட, அதற்கேற்ப மாணவர்கள் தஃப்ஸ் முழங்கி, மைதானத்தையே தன்வயப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினர் உரை:
பின்னர், மாணவர் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டு, சிறப்புரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் வாழ்த்துரை வழங்கினார்.
காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் துஆவுடுன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்த தஃப்ஸ் மற்றும் மாணவர் அணிவகுப்பு நிகழ்ச்சிகளை, மத்ரஸா ஆசிரியர்களான ‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ், ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
சொற்பொழிவு:
மஃரிப் தொழுகைக்குப் பின், மத்ரஸாவின் பெயருக்குரிய மஹான் அல்லாமா ஹாமித் லெப்பை வலிய்யுல்லாஹ் அவர்களின் வரலாற்று சொற்பொழிவு நடைபெற்றது. ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ சொற்பொழிவை நிகழ்த்தினார்.
சன்மார்க்கப் போட்டிகள் தொடர்ச்சி:
பின்னர், பைத், ஹிஃப்ழு, பேச்சுப் போட்டி உள்ளிட்ட மாணவர் சன்மார்க்கப் போட்டிகள் வெளியரங்கில் நடைபெற்றன.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகரப் பிரமுகர்கள், மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திராளகக் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
ஃபாஸில் ஸ்டூடியோ |