தமிழக அரசு வழங்கும் ஏழை பெண்களுக்கான உதவித்தொகை பெற - குடும்ப வருவாய் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
பெண் கல்வி நாட்டில் எந்த அளவுக்கு உயருகிறதோ அந்த அளவுக்கு நாடு மேம்பாடு அடையும். பெண்களுக்கு முறையான கல்வி அறிவு கிடைத்தால் சமுதாயம்
உயர்வதற்கும் சந்ததிகள் வாழ்க்கை சீர்பெறுவதற்கும் மெத்தப் பயனுடையதாக இருக்கும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமையை நிலைநாட்டும் வகையிலும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், திருமண நிதியுதவித் திட்டங்கள், பெண்களுக்கென சுகாதார வளாகங்கள், சுயஉதவிக் குழுக்கள் என பெண்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகின்றது.
ஏழை பெற்றோர்களின் பெண்கள், கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள் ஆகியோருக்கு உதவிடும் வகையில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என பெண்கள் நலனுக்காக 5 விதமான திருமண நிதியுதவித் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டங்களில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் அன்னை தெரசா ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. ஏனைய திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு குறைவாக உள்ளதால், அதிக அளவில் ஏழை எளிய மக்களால் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற இயலவில்லை.
இதனைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அரசு திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் நிதி உதவி
பெற தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை 24,000 ரூபாயிலிருந்து 72,000 ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டுள்ளார்கள்.
இதன்படி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மற்றும் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு 24,000 ரூபாயிலிருந்து 72,000 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்படுகின்றது.
பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவினை வழங்கி, அதன் மூலம் ஊட்டச்சத்து குறைவினை அகற்றுதல், பள்ளி செல்லும் குழந்தைகளின் விகிதத்தினை அதிகரித்தல், இடைநிற்றல் அகற்றல் ஆகிய நோக்கங்களை எய்தும் பொருட்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், காலத்திற்கு ஏற்பவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், புதிய வகை உணவுகளை சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தை நல மையங்களில் அறிமுகப்படுத்துவதற்கு ஆணையிட்டார்கள். இந்த உணவு வகைகளை தயாரிக்க இம்மையங்களில் பணிபுரிபவர்களுக்கு செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இந்த உணவுகளை தரமாகவும், உரியநேரத்திலும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு கலவை இயந்திரம் (மிக்சி) வழங்க ஏற்கெனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும், இந்த மையங்களில் புதிய உணவு வகைகளை தயாரிக்க தேவையான சமையல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 32 முன்னோடி வட்டாரங்களில் உள்ள 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு தலா ஒரு (எவர்சில்வர்) கரண்டி 66 ரூபாய் விலையிலும், ஒரு (இண்டோலியம்) கடாய் 495 ரூபாய் விலையிலும் என மொத்தம் 561 ரூபாய் வீதம் 3,963 குழந்தைகள் நல மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் 22 லட்சத்து 23 ஆயிரத்து 243 ரூபாய் செலவில் வாங்கி வழங்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
|