உறுப்பினர்களின் திரளான பங்கேற்புடன் சஊதி அரபிய்யா – ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியாக நடைபெற்றுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சஊதி அரபிய்யா ஜித்தா - காயல் நற்பணி மன்றத்தின் 30ஆவது பொதுக்குழு மற்றும் நோன்பு பெருநாள் சந்திப்பு ஜித்தா - ஷரஃபிய்யாவில் அமைந்துள்ள இம்பாலா நியூ கார்டன் பூங்காவனத்தில், இம்மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணியளவில் நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள்:
மன்றத் தலைவர் சகோதரர் குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மன்றத்தின் யான்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோதரர் முஹம்மத் ஆதம் சுல்தான், மன்ற துணைத்தலைவர் மருத்துவர் எம்.ஏ.முஹம்மத் ஜியாத், முன்னாள் செயலாளர் பொறியாளர் கே.எம்.கமால் ஹாதீ, தாயகம் காயல்பட்டினத்திலிருந்து வந்துள்ள சகோதரர் எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் (எஸ்.ஜே.எம்.மெடிக்கல்ஸ்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சகோதரர் எஸ்.ஐ.செய்யித் நூஹ் அப்துல் பாஸித் இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்ற துணைப் பொருளாளர் சகோதரர் எம்.எம்.எஸ்.ஷெய்கு அப்துல் காதிர் வந்திருந்த அனைவரையும் மனமகிழ்வோடு வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் சகோதரர் குளம்,எம்.ஏ.அஹமத் முஹ்யித்தீன் தலைமையுரையாற்றினார்.
மன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையான - தன்னலமற்ற செயல்பாடுகளுக்கு மன்ற நிர்வாகத்தின் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் மனதார தெரிவித்த அவர், உலக காயல் நல மன்றங்களின் ஒருமித்த கருத்தோடு இந்த நோன்பு பெருநாளையொட்டி உதயமான காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ கூட்டமைப்பான "ஷிஃபா"வின் துவக்கத்திற்குப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறி, தனதுரையை நிறைவு செய்தார்.
செயற்குழுக் கூட்டங்களின் தொகுப்பறிக்கை:
அடுத்து, மன்றத்தின் இணைச் செயலாளர் சகோதரர் சட்னி எஸ்.ஏ.கே.செய்யித் மீரான் உரையாற்றினார்.
>> முந்தைய பொதுக்குழுக் கூட்டத்தையடுத்து, கடந்த ஆறு மாதங்களில் நடைபெற்ற நான்கு செயற்குழுக் கூட்டங்களின் அறிக்கை
[கூட்டம் 1 - 73ஆவது செயற்குழுக் கூட்டம்]
[கூட்டம் 2 - 72ஆவது செயற்குழுக் கூட்டம்]
[கூட்டம் 3 - 71ஆவது செயற்குழுக் கூட்டம்]
[கூட்டம் 4 - 70ஆவது செயற்குழுக் கூட்டம்]
>> கல்வி - மருத்துவத் தேவைளுக்காக உதவிகள் வேண்டி வந்த பயானளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகைகளின் முழு விபரம்
>> கடந்த ரமழானில் இஃப்தார் நிகழ்வோடு நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் மனமுவந்து தாராளமாக தந்துதவிய நன்கொடை தொகைகளின் மூலமாக "ஷிஃபா"விற்கு துவக்க கால மற்றும் ஓராண்டுக்கான நிர்வாகச் செலவிற்கு ரூபாய் ஐம்பதினாயிரம் (ரூ.50,000) வழங்கியமை
>> தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் முன் முயற்சியில் - தாயகம் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாயில்களின் இமாம்கள், முஅத்தின்களுக்கான நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்காக மன்றத்தின் சார்பில் ரூபாய் இருபத்தி ஏழாயிரம் (ரூ.27,000) கையளிக்கப்பட்டமை
>> மேற்படி நான்கு செயற்குழுக் கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் மீதான மன்றத்தின் நடவடிக்கைகள்
உள்ளிட்ட விவரங்களை நன்றிப் பெருக்குடன் நயமுற அவர் எடுத்துரைத்தார்.
அண்மைச் செயல்பாடுகள்:
மன்றத்தின் அண்மைச் செயல்பாடுகள், நிறைவேற்றப்பட்ட நகர்நலத் திட்டங்கள் குறித்து, மன்றத்தின் இணைச் செயலாளர் சகோதரர் எம்.ஏ.செய்யித் இப்ராஹீம் விளக்கிப் பேசினார்.
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களாக தங்களை இணைத்து கொண்டவர்களுக்கும், பொதுக்குழு உறுப்பினர்களாக தொடர இசைவு தெரிவித்த உறுப்பினர்களுக்கும், மன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கும் மன்றத்தின் சார்பில் அவர் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.
உலக காயல் நல மன்றங்களின் ஒருமித்த எண்ணங்களோடு உருவாகி, இறையருளால் கல்வி நலப்பணியாற்றி வரும் இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ், நடப்பாண்டு நிர்வாகத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்றுள்ள நமது ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் அது சீரிய வளர்ச்சிகளைப் பெற்றிட வாழ்த்திப் பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.
பெருநாள் விடுமுறையாக அண்மையில் தான் தாயகத்திலிருந்தபோது, உலக காயல் நல மன்றங்களின் நன்முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த மருத்துவக் கூட்டமைப்பான "ஷிஃபா"வின் பணிகள் குறித்தும், அதற்காகப் பாடுபட்ட ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள், உலகளாவிய அனைத்து மன்றங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார் அவர்.
ஜித்தா காயல் நற்பணி மன்றம் உள்ளிட்ட அனைத்து நகர்நல அமைப்புகளும், தாயகம் காயல்பட்டினத்தின் வளர்ச்சிக்காக பல சேவைகளைச் செய்து, சுத்தமான - சுகாதரமான - முன்னேறிய காயலை உருவாக்குவதில் அனைவரும் இணைந்து முனைப்புடன் செயல்படுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தவராக தனதுரையை அவர் நிறைவு செய்தார்.
நிதிநிலையறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான நிதிநிலையறிக்கையை மன்றப் பொருளாளர் சகோதரர் எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் சமர்பித்து,
>> தற்போதைய இருப்பு
>> சந்தா நிலுவைத் தொகை
>> கடந்த ரமழானில் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைத் தொகை
உள்ளிட்டவை குறித்து விரிவுற விளக்கிப் பேசினார்.
மன்றத்தின் பத்தாண்டுகால சேவைகளுக்காக செலவிடப்பட்ட விபரங்கள் அடங்கிய முழு நிதிநிலையறிக்கையின் நகல் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரை:
பின்னர் மன்ற அங்கத்தினர் கருத்துரைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. துவக்கமாக, மன்றத்தின் யான்பு மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோதரர் முஹம்மத் ஆதம் சுல்தான் பேசினார்.
யான்பு நகருக்கு வர மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு:
உறுப்பினர்களின் ஒற்றுமை உணர்வையும், மன்றம் செய்து கொண்டிருக்கும் மகத்தான மக்கள் நலப்பணிகளையும் வெகுவாகப் பாராட்டிய அவர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சென்ற ஆண்டு வருகை தந்தது போல் மீண்டும் இவ்வருடமும் யான்புவிற்கு வருகை தந்து, அங்குள்ள சகோதரர்களை சந்தித்து - கலந்துரையாடி, மன்றப் பணிகளில் அவர்களுக்கும் நல்லதோர் ஆவர்வத்தையும் தொடர்பையும் ஏற்படுத்தும் படி கேட்டுக் கொண்டார்.
‘ஷிஃபா’ குறித்து விளக்கவுரை:
அடுத்து, உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த மருத்துவத்துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’ குறித்து, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் சீனா எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் பேசினார்.
‘ஷிஃபா’வின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்களான
>> வருமுன் காப்போம்
>> விழிப்புணர்வு முகாம்
>> மத்திய - மாநில அரசுகள் வழங்கும் நல உதவிகளைப் பயனாளிகளுக்குப் பெற்றுத் தரல்
>> மருத்துவ முகாம்கள்
குறித்து அவர் விளக்கிப் பேசியதுடன், இனி வருங்காலங்களில் மன்றத்தின் மருத்துவ உதவித் திட்டங்கள், முகாம்கள் அனைத்தும் ஷிஃபாவைச் சார்ந்தே நமது மன்றமும், அது போல ஏனைய சகோதர மன்றங்களும் செய்யும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
"ஷிஃபா" அமைப்பு கருவாக உருவாக ஒத்துழைத்தவர்கள், உதவிகள் வழங்கியவர்கள், உயர் ஆலோசனைகள் அளித்தவர்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும், இதற்காக நமது மன்றத்தோடு ஒருமித்த கருத்தோடு பயணித்து பலன் பெற உதவியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார் அவர்.
காயல் ஹாஜிகளுக்கு மக்காவில் சேவை:
கடந்தாண்டு போல இவ்வாண்டும் - இந்திய ஹஜ் கமிட்டி, தமிழக குழு மூலம் புனித ஹஜ் பயணம் செய்ய நாடி வருகை தரும் நமதூர் ஹாஜிகளுக்கு, நமது மன்றத்தின் மக்கா - காயல் ஹஜ் வழிகாட்டு மற்றும் சேவை அமைப்பின் மூலம் இறைவன் உதவியால் சேவைகள் செய்திட நாடி இருப்பதாவும் தனதுரையில் குறிப்பிட்டார்.
அடுத்து, மன்ற ஆலோசகர் எம்.எம்.மூஸா ஸாஹிப் கருத்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் அறிமுகம்:
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருக்கும் கீழக்கரையைச் சேர்ந்த பொறியாளர். ஜனாப். கமாலுத்தீன் அவர்களை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், சிறப்பு விருந்தினர் அவர்கள் தான் தலைமையேற்று வழிநடத்திக் கொண்டிருக்கும் மெப்கோ அமைப்பு மூலம் ஆற்றி வரும் கல்விப் பணி குறித்தும், அதன் நலத்திட்டங்கள் மூலம் - மற்ற ஊர்களை போல் நமதூர் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்றும் அவர் பேசினார்.
அடுத்து, மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் சகோதரர் எஸ்.எச். ஹுமாயூன் கபீர் பேசினார்.
சந்தா தொகையின் அவசியம்:
மன்றத்தால் பல லட்ச ரூபாய் தொகை கணக்கில் செய்யப்பட்டு வரும் நகர்நலப் பணிகள் - உதவித் திட்டங்கள் அனைத்தும், உறுப்பினர்களின் சந்தா தொகையையே மூலதனமாகக் கொண்டு செய்யப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இதனைக் கருத்திற்கொண்டு உறுப்பினர்கள் தமது சந்தாக்களை தொய்வின்றி - குறித்த காலத்தில் ஆர்வத்துடன் செலுத்தி ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
நகர மக்களுக்கு விழிப்புணர்வு:
தொடர்ந்து கருத்துரை வழங்கிய மன்றத்தின் துணைத் தலைவர் மருத்துவர் எம்.ஏ.முஹம்மத் ஜியாத், மூத்த உறுப்பினர் சகோதரர் ஏ.எம்.அப்துல் நசீர், நடப்பு கூட்டத்தில் மன்றத்தின் புதிய செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர் ஏ.எம்.செய்யித் அஹ்மத் ஆகியோர் - நமதூர் மக்கள் எதிர்நோக்கி இருக்கும் சுகாதார சீர்கேடுகள், உயிர் கொல்லி நோய்களின் பாதிப்புகள் - அது விஷயத்தில் மக்களிடம் இருக்க வேண்டிய விழிப்புணர்வுகள் குறித்தும், மன்றச் செயல்பாடுகள், சேவைகளைப் புகழ்ந்துரைத்தும் தமது கருத்துகளை மிக ஆழமாகவும், அழகாகவும் பதிவு செய்தனர்.
சிறப்பு விருந்தினர் உரை:
அடுத்து, மன்றத்தின் அழைப்பை ஏற்று இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தமிழ்நாடு முஸ்லிம் மாணவர்களுக்கு உயர் கல்விக்கென உதவித்தொகை வழங்கும் உன்னத அமைப்பாக ஜித்தாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் மெப்கோவின் தலைவரும், நம் தொப்புள் கொடி உறவான கீழக்கரையைச் சார்ந்தவருமான பொறியாளர் சகோதரர் கமாலுத்தீன் பேசினார்.
காயல்பட்டினம் - கீழக்கரை இடையிலான தொடர்புகள்...
காயல்பட்டினத்திற்கும், அவர் பிறந்து வளர்ந்த கீழக்கரைக்கும் பன்னெடுங்காலமாக உள்ள கலாசார - பாரம்பரிய - ஆன்மிக உறவுகள், தொடர்புகள் குறித்து அழகுற எடுத்துரைத்தார்.
நகர்நலப் பணிகளுக்கு பாராட்டு...
ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஆற்றி வரும் நற்சேவைகள் குறித்து வெகுவாகப் பாராட்டிப் பேசிய அவர், இக்ராஃ, ஷிஃபா போன்ற அமைப்புகளின் துவக்கம், அவற்றின் தொலைநோக்கு சிந்தனை, அவற்றின் மக்கள் நல செயல்பாட்டிற்கும் தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
எப்போதும் தொடர்புகொள்ளலாம்...
நகர்நலனுக்காக, அனைத்து காயல் நல மன்றங்களும் ஒன்றிணைந்து புரியும் நற்சேவை தன்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதாகவும், இந்த நற்சேவைக்கு தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும், ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புகள் மற்றும் ஆலோசனைகளையும் அளிப்பதாகவும், இவ்வகைக்காக தன்னை எப்பொழும் தொடர்புகொள்ளலாம் எனவும் பெருமிதத்துடன் கூறி, இக்கூட்டத்தில் தன்னை சிறப்பு விருந்தினராக அழைத்து உரையாற்றச் செய்தமைக்காக நன்றி தெரிவித்து தனதுரையை நிறைவு செய்தார்.
கூட்ட நிகழ்வுகளுக்கிடையில், சகோதரர் எம்.ஓ.முஹம்மத் நூஹ் என்ற நூஹு ஹாஜி தனதினிய குரலால் இஸ்லாமிய இன்னிசை ஒன்றைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
கூட்ட நிகழ்வுகள் அனைத்தையும் சகோதரர் ஓய்.எம்.முஹம்மத் ஸாலிஹ் அழகுற ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார்.
காயல் ஹஜ் பயணியர் பங்கேற்பு:
புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற தனியார் நிறுவனம் மூலம் தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள சகோதரர் எல்.டி,எம்.எம்.முஹம்மத் தாரிக், சகோதரர் எல்.கே.கே.எஸ்.ஏ.காழி அலாவுத்தீன் ஆகியோர் இக்கூட்டத்தில் தம் குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டனர்.
கூட்ட நிறைவு:
கூட்டத்தில் கலந்துகொண்ட – கூட்ட ஏற்பாடுகளை சிறப்புற செய்த - ஏற்பாடுகளுக்கு உதவிய அனைவருக்கும் சகோதரர் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரியா நெஞ்சார நன்றி கூற, சகோதரர் எஸ்.எஸ்.ஜாஃபர் ஸாதிக் துஆவைத் தொடர்ந்து, கஃப்பாரா ஓதப்பட்டு, நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானங்கள்:
தீர்மானம் 1 - ‘ஷிஃபா’வுக்கு வாழ்த்தும், உழைத்தோருக்கு பாராட்டும்:
உலக காயல் நல மன்றங்கள் மற்றும் அமைப்புகளின் நல்லாதரவோடும், ஒத்துழைப்போடும், ஒருமித்த கருத்தோடும் உதயமாகியிருக்கும் உலக காயல் நல மன்றங்களின் ஒன்றிணைந்த மருத்துவத் துறை கூட்டமைப்பான "ஷிஃபா"விற்கு இக்கூட்டம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அதற்காக முழு வீச்சில் பாடுபட்ட அனைத்து நல மன்றங்களுக்கும், உன்னதமாக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - ‘ஷிஃபா’ மூலம் மருத்துவ உதவி:
‘ஷிஃபா’வின் வளர்ச்சிக்கும், அதன் அனைத்து ஆக்கப்பூர்வமான பணிகளுக்கும் ஜித்தா காயல் நற்பணி மன்றம் அதன் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கும் என்றும், தனது எல்லா மருத்துவ நல உதவித் திட்டங்களையும் ‘ஷிஃபா’வின் மூலமும், அதைச் சார்ந்துமே செய்யும் என்றும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. இதையே ‘ஷிஃபா’வின் அனைத்து உறுப்பு மன்றங்களும் மேற்கொள்ளும் என்றும் இக்கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
தீர்மானம் 3 - உள்ளூர் பிரதிநிதிக்கு செயற்குழுவில் சங்கை:
மன்றத்தின் 74ஆவது செயற்குழு கூட்டத்தை 25.10.2013 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணியளவில் புனித மக்காவிலுள்ள சகோதரர் சீனா எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் இல்லத்தில் நடத்துவதென்றும், அக்கூட்டத்தில் - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியும், மன்றத்தின் முன்னாள் மூத்த உறுப்பினருமான ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் அவர்களை அழைத்து சங்கை செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இரவுணவு விருந்துபசரிப்பு:
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
துள்ளி விளையாடிய வெள்ளைப் புறாக்கள்...
ஜித்தா மற்றும் மக்காவைச் சேர்ந்த உறுப்பினர்கள், தம் குடும்ப சகிதமாக வந்து கூட்டத்தில் கலந்துகொண்டதும், அவர்களின் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கூட்ட நிகழ்விடத்தில் துள்ளிக் குதித்து, ஓடியாடி இன்பமாய்ப் பொழுது போக்கியதும், இதுபோன்ற நிகழ்வை இன்னொரு நாளிலும் எதிர்பார்த்தவர்களாக அனைவரும் விடைபெற்றுச் சென்றதும் குறிப்பிடத்தக்கவை.
ஏற்பாடு:
கூட்ட ஏற்பாடுகளை, சகோதரர் சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மத் உமர், சகோதரர் பொறியாளர் ஜி.எம்.முஹம்மத் சுலைமான் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.
இவ்வாறு, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சட்னி S.A.K.செய்யித் மீரான்
மற்றும்
Y.M.ஸாலிஹ்
[செய்தியில் சிறு திருத்தமத் செய்யப்பட்டது @ 14:44 / 28.09.2013] |