தமிழ்நாட்டில், இம்மாதம் 15, 16 தேதிகளில் (நேற்றும், இன்றும்) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை புதுப்பேட்டையிலுள்ள JAQH மர்கஸில் நேற்று பெருநாள் தொழுகை நடைபெற்றது. இத்தொழுகையில் காயலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து அனுப்பித் தரப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை (15-10-2013) ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பினர் ஏற்பாட்டில் புனித ஹ்ஜ்ஜுப்பெருநாள் தொழுகை சென்னை புதுப்பேட்டையில் உள்ள JAQH மர்கஸில் காலை 08.00 மணிக்கு நடைபெற்றது. முதலில் பெருநாள் தொழுகையை ஹாஃபிழ் காரீ அப்துஷ்ஷுக்கூர் வழி நடத்தினார். தொடர்ந்து ஃகுத்பா பிரசங்கத்தை மவ்லவி இக்பால் ஃபிர்தவ்ஸி நிகழ்த்தினார்.
மவ்லவி அவர்கள் பேசுகையில் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகங்கள் அனைத்தும் இறையச்சத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன என்றும் அதுபோல நமது செயல்களும் இறையச்சத்தை முன்னிலைப்படுத்தியே அமைய வேண்டும் எனவும் கூறினார். மேலும் குர்பானி கொடுக்கும் போது அவற்றின் மாமிசமோ அல்லது இரத்தமோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை; மாறாக உங்களின் இறையச்சமே (தக்வா) அவனைச் சென்றடைகிறது என்றும் சூரா ஹஜ்ஜில் இடம்பெறும் இறைவசனத்தை மேற்கோள்காட்டினார். அவ்வாறு இறைவனை அஞ்சும் போது சமூகத்தில் உள்ள வேற்றுமைகள் கலையப்பட்டு சகோதரத்துவம் தழைத்தோங்கும் என்றும் அதைத்தான் உலகின் எல்லா திசைகளிலிருந்தும் சென்றுள்ள லட்சக்கணக்கான ஹாஜிகள் ஒரே வெந்நிர ஆடையோடும் ஒரே குரலில் தல்பிய்யாவை மொழிவது கொண்டும் பரைசாற்றுகின்றனர் எனவும் கூறினார்.
பள்ளியில் அமர்ந்து கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்துவிட்டு வெளியில் சென்றபின் வழமையான அதே வாழ்க்கை வாழ்வதுகொண்டு மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்து விடாது; மாறாக மாற்றத்தை நம்மூலம் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
உலகில் இன்று பாதிப்பில் ஆழ்ந்துள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களுக்காகவும் குறிப்பாக சிரியா, பர்மா மற்றும் நம்நாட்டிலேயே முஸஃப்ஃபர் நகரில் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட உயிர்சேதம் பொருட்சேதம் உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்காகவும் இங்கு வந்துள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் மனமுருகிப் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரையில், சென்னை வாழ் காயல்வாசிகள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சென்னை நகரிலிருந்து...
செய்தி & படங்கள்:
S.K.ஷமீமுல் இஸ்லாம் |