காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் முறைக்கேடுகள் நடைபெறுவதாக பெறப்பட்ட புகாரினை தொடர்ந்து - நவம்பர் 27 புதன்கிழமையன்று, வட்ட வழங்கல் அலுவலர் (TSO) ரகு மற்றும் பறக்கும்படை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் உடனிருந்தார்.
இந்த பரிசோதனையின் போது முறைக்கேடுகள் ஊர்ஜிதம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து காயல்பட்டணம்.காம், தாலுகா விநியோக அலுவலர் ரகுவிடம் வினவியதற்கு, அவர் இது குறித்த விசாரணையை பறக்கும்படை அலுவலர்கள் மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் தங்கள் அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கியவுடன், அதன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இது குறித்த விசாரணையின் தற்போதைய நிலை குறித்து காயல்பட்டணம்.காம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தது. அப்போது - முறைக்கேடு தொகை சுமார் 32,000 ரூபாய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முறைகேடு, இருப்பு பராமரிப்பிலும், கணக்கு எழுதிவைப்பதிலும் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
5,000 ரூபாய்க்கு மேலான முறைக்கேடுகளுக்கு - சம்பந்தப்பட்ட நபர், கண்டிப்பாக சஸ்பெண்ட் செய்யப்படவேண்டும் என்று விதிமுறைகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. முறைக்கேடு தொகை, அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் - சஸ்பெண்ட் செய்யப்படும் காலம், இதர தண்டனைகள் குறித்து - மாவட்ட ஆட்சியரே முடிவெடுக்கவேண்டும் என்றும், இது குறித்து அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புகைப்படம் உதவி:
ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி
|