மலேஷிய நாட்டில் வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து, மலேஷிய காயல் நல மன்றம் - KWAMALAY என்ற பெயரில் புதிதாக அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மலேஷிய காயல் நல மன்றம்:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மலேஷியா நாட்டில் வசிக்கும் காயலர்களை ஒருங்கிணைத்து, “மலேஷிய காயல் நல மன்றம் - KWAMALAY” என்ற பெயரில், மலேஷிய மண்ணில் புதியதோர் அமைப்பு இனிதே உதயமாகியுள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
துவக்கக் கூட்டம்:
முன்னதாக, மலேஷியாவில் வசிக்கும் காயலர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, முறைப்படி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் அடிப்படையில், துவக்கக் கூட்டம் 30.11.2013 சனிக்கிழமையன்று, மலேஷிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ABC Hotel Conference Hallஇல் நடைபெற்றது.
வந்தோருக்கு வரவேற்பு:
இரவு 21.30 மணியளவில் காயலர்கள் நிகழ்விடம் வந்தவண்ணம் இருந்தனர். அவர்களை, கூட்ட ஒருங்கிணைப்பாளர்களான பாளையம் எச்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், குடாக் முஹம்மத் புகாரீ, ஹாஃபிழ் செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ ஆகியோர் வரவேற்றனர். துவக்கமாக, அனைவரது பெயர் மற்றும் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.
கூட்ட நிகழ்வுகள்:
இரவு 22.00 மணிக்கு கூட்டம் துவங்கியது. வணிக நோகத்தில் - காயல்பட்டினத்திலிருந்து மலேஷிய நாட்டிற்கு வந்து செல்லும் - காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த ஹாஜி ஏ.அஹ்மத் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்ததோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். பின்னர், கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைவரும் தங்களை தன்னறிமுகம் செய்துகொண்டனர்.
அறிமுகவுரை:
கூட்ட ஒருங்கிணைப்பாளர் குடாக் எஸ்.எம்.எச்.முஹம்மத் புகாரீ, கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
“அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன் திருநாமம் போற்றி துவக்குகிறேன் யா அல்லாஹ்” என்று கூறி தனதுரையைத் துவக்கிய அவர், மலேஷிய நாட்டில் காயல் நல மன்றம் துவக்குவதற்கான அவசியம் மற்றும் நோக்கங்கள் குறித்து இரத்தினச் சுருக்கமாகப் பேசினார். அவரது உரைச் சுருக்கம்:-
நமதூர் மற்றும் ஊர் மக்கள் நலன், மலேஷியாவில் வசிக்கும் காயலர்கள் நலன் கருதியும்,
நமதூரின் ஏழை - எளிய மக்களுக்கு உதவுவதற்காகவும்,
நமதூர் மக்களின் வணிகம், தொழில்துறை, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த தன் முனைப்பும், பிற முனைப்புகளுக்கு ஒத்துழைப்பும் அளிப்பதற்காகவும் இவ்வமைப்பு அவசியமாகிறது.
நமதூர் மக்களுக்கு தகுந்த வேலைவாய்ப்புகளை இந்நாட்டில் பெற்றுத் தர இப்புதிய அமைப்பு முழு முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
இறையருளால் சிறப்புற இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்துலக காயல் நல மன்றங்களுடன் நல்லதொரு தொடர்பை வைத்துக்கொண்டு, அதன் மூலம் நகர்நலனுக்குத் தேவையான - நம்மாலியன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் நல்கிட வேண்டும். அனைவரும் இணைந்து கைகோர்த்து, நகர்நலனுக்காக கடமையாற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினர்கள்:
மலேஷியாவில் காயல் நல மன்றம் துவக்கப்படவும், செயல்படவும் - காயலர்கள் மட்டுமின்றி, பிற ஊர்களைச் சேர்ந்த அன்பர்கள் பலரும் ஊக்கமும், பேராதரவும் நல்கி வருவதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறோம். அவர்களுள், இராமநாதபுரம் மாவட்டம் - பனைக்குளம் நகரைச் சேர்ந்த சகோதரர் ஹமீத் ராஜா, சகோதரர் முஹம்மத் அஸ்மி, இளையாங்குடியைச் சேர்ந்த சகோதரர் ஜுபைர் ஆகியோரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் சகோதரர் அப்துர்ரஹீம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கும், கூட்டத் தலைவருக்கும் சால்வை அணிவித்து சங்கை செய்யப்பட்டது.
மார்க்க அறிவுரை:
தொடர்ந்து, கூட்ட ஒருங்கிணைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ மார்க்க அறிவுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-
மனிதனை அல்லாஹ் "கலீபா"வாக இவ்வுலகத்தில் படைத்திருக்கிறான். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய பொறுப்புகள் இவ்வுலகில் இருக்கிறது. தன் மீதும், தன் குடும்பத்தின் மீதும் ஒருவருக்கு எப்படி பொறுப்பு இருக்கிறதோ அதுபோல, தன் ஊர், தன் சமூகம் மீதும் அவனுக்கு பொறுப்பு இருக்கிறது.
ஒருவன் தனித்து இயங்குவதை விட ஒரு கூட்டமாக இயங்குவது மிகவும் சக்தி வாய்ந்தது. அனைவரும் ஓரணியில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பது அல்குர்ஆனில் அல்லாஹ் இட்ட கட்டளை. அதனடிப்படையில், விருப்பு - வெறுப்புகளுக்கப்பாற்பட்டு செயலாற்றுவதன் மூலம், பல சவால்களை வெற்றிகரமாக நிறைவேற்றி சாதித்துக் காட்ட இயலும்.
“இறைவழியில் செலவு செய்வது மறுமை வாழ்விற்கான முதலீடு” என்பதை மனதிற்கொண்டு செயலாற்றி, இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்க்கைக்கான வெற்றியைத் தேடிப் பெற்றுக்கொள்ள நாம் அனைவரும் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மன்ற உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். உரைகளைத் தொடர்ந்து, உறுப்பினர் கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. மன்றத்திற்கு பொருத்தமான பெயரிடல், தற்காலிக செயற்குழுவைத் தேர்ந்தெடுத்தல், மாதச் சந்தா தொகையை நிர்ணயித்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதில் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
தீர்மானங்கள்:
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அமைப்பின் பெயர்:
காயலர்களை ஒருங்கிணைத்து, புதிதாகத் துவக்கப்படும் இவ்வமைப்பிற்கு “மலேஷிய காயல் நல மன்றம் - MALAYSIAN KAYAL WELFARE ASSOCIATION (KWAMALAY)” என்று பெயர் சூட்ட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - தற்காலிக செயற்குழு:
“மலேஷிய காயல் நல மன்றம்” அமைப்பிற்கு பின்வருமாறு தற்காலிக செயற்குழு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது:-
தலைவர்:
ஹாஜி ஏ.அஹ்மத்
செயலாளர்:
ஜனாப் குடாக் எஸ்.எம்.எச்.முஹம்மத் புகாரீ
பொருளாளர்:
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.செய்யித் இப்றாஹீம் அல்புகாரீ
செயற்குழு உறுப்பினர்கள்:
1. ஜனாப் எஸ்.ஏ.ஸர்ஃபராஸ்
2. ஜனாப் குடாக் எஸ்.எம்.எச்.முஹம்மத் புகாரீ
3. ஜனாப் பாளையம் எச்.எம்.முஹம்மத் இஸ்மாஈல்
4. ஜனாப் எஸ்.ஏ.அப்துல் காதிர்
5. ஜனாப் முஹம்மத் ரஃபீக்
சிறப்பு ஆலோசனைக் குழுவினர்:
1. ஜனாப் ஆஸ்மி
2. ஜனாப் ஹமீத் ராஜா
3. ஜனாப் ஜுபைர்
4. ஜனாப் எஸ்.ஏ.ஸர்ஃபராஸ்
5, ஜனாப் அஸ்ஹாப்
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
>> கூட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அன்பான அழைப்பையேற்று கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த காயலர்கள்
>> கூட்ட நிகழ்விடத்தை விட்டும் பல மணி நேரம் பயணம் மேற்கொள்ளும்படியான நீண்ட தொலைவிலிருப்பதால், கூட்டத்தில் பங்கேற்க இயலாமை - கடமையுணர்வுடன் தெரிவித்த காயலர்கள்
>> சிறப்பு விருந்தினர்களாக இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்தோர் - குறிப்பாக, மறுநாள் அதிகாலையில் பயணம் செய்ய வேண்டியிருந்தும், அழைத்த மறுகணமே சிரமம் பாராமல் வந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்த ஜனாப் ஸர்ஃபராஸ் (எல்.கே.எஸ்.)
>> புதிய மன்றம் சிறந்தோங்க தொலைபேசி வழியே வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்கள்
உள்ளிட்ட அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இறையச்சத்துடனும், உளத்தூய்மையுடனும் நகர்நலப் பணிகளாற்றிட இருகரம் ஏந்தி இறைவனிடத்தில் துஆ செய்த நிலையில் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இரவுணவு விருந்துபசரிப்பு:
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஹோட்டலில் பல்சுவை உணவுப் பதார்த்தங்களுடன் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
மலேஷிய தொப்பி அன்பளிப்பு:
இக்கூட்டத்தில் கலந்துகொண்டோர், சிறப்பு விருந்தினர்கள், இரவுணவுக்கு அனுசரணையளித்த சகோதரர் ஆஸ்மி ஆகிய அனைவருக்கும், கூட்டம் துவங்குகையில் சகோதரர் பனைக்குளம் ஹமீத் ராஜா அவர்களால் மலேஷிய பாரம்பரிய தொப்பி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அந்நாட்டுப் பாரம்பரியத்தைப் பறைசாற்றுமுகமாக, கூட்டத்தின் துவக்கம் முதல் நிறைவு வரை அனைவரும் அத்தொப்பியுடனேயே கலந்துகொண்டனர்.
வருகை தந்த அனைத்து உறுப்பினர்களும், கூட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தவர்களாக, மகிழ்ச்சியுடன் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு, மலேஷிய காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |