மந்தமான வானிலையில், மகிழ்ச்சிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகள்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
கருணையுள்ள அல்லாஹ்வின் நல்லருளால் எமது துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி 22.11.2013 வெள்ளிக்கிழமையன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது.
தயக்கத்துடன் முன்னேற்பாடுகள்
ஒரு மாதத்திற்கும் மேலாக - பல்வேறு கலந்தாலோசனைகள் நடத்ததப்பட்டு, பல குழுக்கள் பிரிக்கப்பட்டு, அக்குழுக்களிடம் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டதன் அடிப்படையில், மிகுந்த கவனத்துடன் இந்நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அச்சுறுத்திய வானிலை
கூட்டம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்து அவ்வப்போது மழை பெய்து வந்ததால், பாலைவனத்தில் குளிர்ந்த வானிலை ஒருபுறம் மகிழ்ச்சியையளித்தபோதிலும், நடத்தப்படவுள்ள நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற அச்சம் எழாமலில்லை. இதன் காரணமாக, அமீரகத்தின் வானிலை அறிக்கையை இணையதளத்தில் அடிக்கடி பார்ப்பதும், மழை பெய்தால் செய்யப்பட வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்துக் கொள்வதும் வாடிக்கையாகவே மாறிவிட்டன. மழை குறித்த எமது அச்சம் பணிகளைப் பாதித்து விடக்கூடாது என்று கருதி, “மழை வருவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது” என்று எங்களுக்கு நாங்களே ஆறுதல் கூறிக்கொண்டோம்.
கூட்ட நாளான நவம்பர் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தது... நள்ளிரவு முதல் அதிகாலை வரை பலத்த மழையும் பெய்து ஓய்ந்தது... துபை நகரெங்கும் வீதிகளில் மழை நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடியது... கூட்டத்தை மறு அறிவிப்பு செய்த படி மாற்றிடத்தில்தான் நடத்த வேண்டும் என்று நாங்கள் மனதுக்குள் முடிவெடுக்கத் துவங்கியபோது காலை 08.00 மணி. கதிரவன் கொஞ்சங்கொஞ்சமாக எட்டிப் பார்த்து, எங்கள் மனக் கவலைக்கு மருந்திட்டது. மனதில் திடீரென ஏற்பட்ட ஒரு நம்பிக்கையில், முதலில் அறிவித்த இடத்திலேயே நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆயத்தப்பணிகளும் செய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதே நேரத்தில், அன்று மழை பெய்ய வாய்ப்புகள் அதிகமுள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்ததால், ஏற்கனவே செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி, ஒருவேளை மழை பெய்தால் - தெய்ராவிலுள்ள அஸ்கான் சமூகக் கூடத்தை நிகழ்விடமாக்க தீர்மானிக்கப்பட்டது.
தொலைபேசி விசாரணை
இதற்கிடையே, கூட்ட நிகழ்விடம் குறித்து இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டமையால், வானிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் காயலர்கள், கூட்ட நிகழ்விடம் குறித்து தொலைபேசி வழியே சந்தேகங்களைத் தொடர்ந்து கேட்டவண்ணமும் - அவற்றுக்கு நிர்வாகிகள் சளைக்காமல் விடையளித்தவண்ணமும் இருந்தனர்.
காயலர் வருகை - ஜும்ஆ தொழுகை
எதிர்பார்த்தபடி, காயலர்கள் அன்று நண்பகல் 12.00 மணி வரை சாரிசாரியாக வரத் துவங்கினர். அனைவரும் பெயர் பதிவு செய்யப்பட்ட பின், துவக்கமாக தேனீர் - சிற்றுண்டி பரிமாறப்பட்டது.
நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக்கொண்ட காயலர்கள் பலர் இணைந்து படமெடுத்துக்கொண்டனர். இவ்வாறாக காலைப் பொழுது கழிய - ஜும்ஆ தொழுகைக்கான நேரம் நெருங்கியதும், அருகிலிருந்த பள்ளிவாசலுக்குச் சென்று அனைவரும் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.
சிறுமழை
ஆண்கள் தொழச் சென்றுவிட்ட நேரத்தில், சிறிது நேரம் மழை பெய்யவே, பூங்காவிலிருந்த பெண்கள், சிறுவர் - சிறுமியர், குழந்தைகள் சிறிது அவதியுற்றதை அறிய முடிந்தது. அந்நேரத்தில், பூங்காவிலிருந்த பணிப்பெண்கள் உதவியுடன் - மழை ஓயும் வரை அனைவரும் சில இடங்களில் ஒதுங்கியுள்ளனர்.
பொதுக்குழுக் கூட்டம்
ஜும்ஆ தொழுகை நிறைவுற்றதும், அனைவரும் நிகழ்விடம் திரும்பினர். பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சி முறைப்படி துவங்கியது. சகோதர அமைப்பான அபூதபீ காயல் நல மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ முன்னிலை வகித்தார். ஹாஃபிழ் எச்.என்.டி.ஹஸ்புல்லாஹ் மக்கீ இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
ஹாஜி ராவன்னா அபுல் ஹஸன் வரவேற்புரையாற்றினார். மன்றத் தலைவரின் தலைமையில் மன்றம் நன்முறையில் வழிநடத்திச் செல்லப்படுவதாகவும், புதுப்புதுத் திட்டங்களை அறிமுகம் செய்வதில் இம்மன்றம் முன்னோடியாகத் திகழ்வதாகவும் கூறிய அவர், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அனைத்து காயலர்களையும் வரவேற்று உரையை நிறைவு செய்தார்.
தலைமையுரை
அடுத்து, கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ தலைமையுரையாற்றினார். மன்றத்தின் நகர்நலப் பணிகள் மற்றும் சேவைகளை நினைவுகூர்ந்து உரையாற்றிய அவர், இப்பணிகள் சிறப்புற செய்யப்படுவதற்கு ஒவ்வோர் உறுப்பினரின் பங்களிப்பும் அவசியமென்றும், இச்செயல்பாடுகளுக்கு மூல ஆதாரமாகத் திகழும் சந்தா தொகைகளை உறுப்பினர்கள் நிலுவையின்றி செலுத்தி ஒத்துழைக்குமாறும் கேட்டவாறு அவர் தனதுரையை நிறைவு செய்தார்.
செயலரின் ஆண்டறிக்கை
தொடர்ந்து, மன்றத்தின் ஆண்டறிக்கையை - மன்றச் செயலாளர் ஹாஜி டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் கூட்டத்தில் சமர்ப்பித்தார். கடந்த ஓராண்டில் மன்றம் ஆற்றிய சேவைகள், வழங்கிய உதவித் தொகைகள் பற்றி விபரங்களைப் பட்டியலிட்டு அவர் தொகுப்புரையாற்றினார்.
பொருளாளரின் வரவு-செலவு கணக்கறிக்கை
அவரைத் தொடர்ந்து, மன்றத்தின் நிதிநிலையறிக்கையை மன்றப் பொருளாளர் ஏ.ஜெ.முஹம்மத் யூனுஸ் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
ஒதுங்கச் செய்த வெயில்
மழைக்கு அஞ்சிய நிலையில் கூட்டம் துவக்கி நடத்தப்பட்டது... ஆனால் கதிரவனோ - பெயரளவில் வெளியலடிப்பதை விட்டுவிட்டு, தாக்குதல் வெயிலைத் தொடரவே, சிறிது இடம் மாறி - நிழற்பகுதியில் அமர வேண்டியதாயிற்று.
இயற்கை மருத்துவம் குறித்து விழிப்புணர்வுரை
பின்னர், இயற்கை மருத்துவத்தின் மகத்துவங்கள் பற்றியும், காது - மூக்கு - தொண்டை பற்றிய சிகிச்சை முறைகள் குறித்தும், மன்றத்தின் மருத்துவ உதவிக்குழு உறுப்பினர் டாக்டர் பி.எம்.செய்யித் அஹ்மத் விரிவுரையாற்றினார். உரையைத் தொடர்ந்து உறுப்பினர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார்.
பாரம்பரிய முறைப்படி மதிய உணவு
இதற்கிடையே நேரத்தை சேமிக்கும் வகையில், உணவு ஏற்பாட்டுக் குழுவினர் திறமையான முறையில் மகளிர் மற்றும் சிறாருக்கு உணவு பரிமாறி முடித்திருந்தனர்.
மதிய உணவாக, நமதூர் காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படியான களறி சாப்பாடு, கத்திரிக்காய் - மாங்காய், புளியாணம் ஆகியவற்றுடன் ஒரு மாற்றுக்காக பூசணிக்காய் ஹல்வாவும் பரிமாறப்பட்டது.
மன்றத்தின் வழமையான உணவுப் பதார்த்தமான ஹாலித் பிரியாணி மறக்கப்பட்டு, நம் நகரின் பாரம்பரிய களறி சாப்பாடு - புளியாணத்துடன் பரிமாறப்பட்டதும், அனைவருக்கும் அல்வா கொடுக்கப்பட்டதும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரின் - குறிப்பாக மகளிரின் மனமார்ந்த பாராட்டுக்களைப் பெற்றது.
பல்சுவைப் போட்டிகள்
உண்ட மயக்கம் காரணமாக அனைவருக்கும் சிறிது ஓய்வு தேவைப்படவே, அதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. சிறிது நேரம் சென்ற பின், நிகழ்ச்சி மீண்டும் களைகட்டத் துவங்கியது. பொது அறிவு வினாடி-வினா, ‘தமிழில் பேசு’ ஆகிய போட்டிகளை மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் நடத்தினார்.
சிறாருக்கான விளையாட்டுப் போட்டிகள்
இந்நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது திடீரென அங்கு திரண்டு வந்த சிறுவர்கள் - மேடையிலிருந்த அவர்களது ‘கேம் அங்கிளை’ அலேக்காக தங்கள் பக்கம் இழுத்துச் சென்று, அவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தப் பணித்தனர். அவர்களது அன்புக் கட்டளையை மறுக்க முடியாமல் இசைவு தெரிவித்த அவர், பலூன் உடைக்கும் போட்டி, ஓட்டப் பந்தயம், இசை நாற்காலி, எலுமிச்சை தாங்கி கரண்டி, அப் அன்ட் டவுன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்த, அதில் பங்கேற்ற மழலையர் மற்றும் சிறாரும், பார்வையாளர்களும் மனம் மகிழ அவற்றை அனுபவித்தனர்.
சிறப்பு விருந்தினருக்கு சங்கை
இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் விளக்கு பஷீர் அவர்களுக்கு மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.
மாலை 16.00 மணியளவில் தேனீர், முவ்வகை மின சமோஸா ஆகியன அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசு
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, முற்பகல் 11.00 மணிக்கு முன்பாக நிகழ்விடம் வருவோருக்கான தங்க நாணய குலுக்கல் பரிசுத் திட்டம், மழையைக் கருத்திற்கொண்டு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. குலுக்கலில் 2 பேர் பரிசுக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு, நமதூர் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஜமீல் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தார் அனுசரணையில் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.
அது தவிர, எல்.சி.டி. எமர்ஜன்ஸி லைட், டார்ச் லைட், சுவர்க்கடிகாரம், சமையலறை பயன்பாட்டுப் பொருட்கள், தண்ணீர் குவளை செட் என பலவகை கண்கவர் பரிசுகளும் - குலுக்கல் முறையில் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள்
நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர் - சிறுமியருக்கும், வினாடி-வினா போட்டியில் வெற்றிபெற்ற பெரியவர்களுக்கும் மன்றத்தின் மூத்த உறுப்பினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன.
அனைத்து சிறாருக்கும் பரிசுப் பொருட்கள்
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிறார் மற்றும் மழலையர் சுமார் 100 பேருக்கு, வழமை போல மன்றத்தின் சார்பில் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன. சில்வர் தண்ணீர் குடுவை, விளையாட்டுப் பொருட்கள், கல்வி பயன்பாட்டுப் பொருட்கள் என வயதுவாரியான பல்வகை பரிசுப் பொருட்கள் அதில் உள்ளடக்கம்.
இவ்வாறாக பொதுக்குழு மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகள் - நேரம் கழிவதே தெரியாத அளவுக்கு அனைவர் மனமும் கவரப்பட்ட நிலையில் நடத்தி முடிக்கப்பட்டன.
மறவா நினைவுகளுடன் பிரிவு
இவ்வளவு சிறப்பான முறையில் இந்நிகழ்ச்சிகளுக்காக நேர்த்தியான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அயராது உழைத்த துணைக் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும், நிகழ்ச்சிகளில் திரளாகப் பங்கேற்ற அனைத்து காயலர்களுக்கும், நிகழ்ச்சி நடத்த அனுமதியளித்த பூங்கா நிர்வாகத்தினருக்கும் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டு, துஆ கஃப்பாராவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
சிறப்பம்சங்கள்
நிகழ்ச்சிகள் அனைத்திலும் சுமார் 300 காயலர்கள் பங்கேற்றனர். இதமான வானிலை, நீண்ட நாட்களுக்குப் பின் காயலர் சங்கமம், மணம் - சுவையுடன் கூடிய தாயக பாரம்பரிய உணவு, நண்பர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்த மகிழ்ச்சியில் நீண்ட அரட்டை, மகிழ்ச்சியின் தாக்கத்தால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்கள், மனமகிழ் பொழுதுபோக்கு அம்சங்கள் என என்றும் மனதில் மாறாமல் நிலைத்து நிற்கும் நினைவுகளுடன் - கூட்டத்தின் துவக்கம் முதல் நிறைவு வரை மழை பெய்யாமல் காத்த அல்லாஹ்வுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவித்தவர்களாக அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
நிகழ்வுகளின்போது பதிவு செய்யப்பட்ட படங்கள் அனைத்தையும், கீழ்க்காணும் இணைப்புகளில் சொடுக்கி தொகுப்பாகக் காணலாம்:-
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
இவ்வாறு, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
ஃபாயிஸ் ஹுமாயூன்
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் |