காயல்பட்டினம் நகராட்சியில், பேருந்து நிலையம், ஐசிஐசிஐ வங்கி முனை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முனை, தாயிம்பள்ளி முனை, கடற்கரை ஆகிய ஐந்து இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் (ஹைமாஸ் லைட்) நிறுவப்பட்டுள்ளன.
பேருந்து நிலையம் அருகிலுள்ள உயர்கோபுர மின் விளக்குகள் 2001ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், கடற்கரை உயர்கோபுர மின் விளக்கு, அதே ஆண்டில் மார்ச் மாதத்திலும் - தமிழகத்தின் அப்போதைய மீன்வளத்துறை அமைச்சர் எஸ்.ஜெனிஃபர் சந்திரனால் துவக்கி வைக்கப்பட்டது.
இவ்விளக்குகளில் பழுது ஏற்பட்டால், வெளி மாவட்டங்களிலிருந்தே அது தொடர்பான வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு பழுது சரிசெய்யப்படும் நிலை உள்ளது.
கடற்கரையிலுள்ள கோபுர விளக்குகள் சில நாட்களுக்கு முன் எரியாதிருந்தது. அங்கு வரும் மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, போர்க்கால அடிப்படையில் அது சரிசெய்யப்பட்டது.
தாயிம்பள்ளி சந்திப்பு, ஐசிஐசிஐ வங்கி முனை ஆகிய இரு இடங்களிலுள்ள உயர் கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து, நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளன. அவற்றிலுள்ள பழுதைக் கண்டறிவதற்காக, நேற்று (நவம்பர் 30) வல்லுநர்கள் வரழைக்கப்பட்டிருந்தனர். தாயிம்பள்ளி கோபுர விளக்கை மோட்டார் கயிறு கொண்டு இறக்கி சோதித்தபோது, அதில் மழை நீர் புகுந்து ஏராளமாகத் தேங்கி சேதப்படுத்தியிருந்தது. மொத்த பழுதையும் கண்டறிந்த பின், அதற்கான செலவு மதிப்பிடப்பட்டு, முறைப்படி பழுது நீக்கப்படும் என அறியப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி முனையிலும் மோட்டார் கயிறு கொண்டு இறக்கி, பழுதுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அலுவலர்கள் சிலர் மற்றும் பொதுநல அமைப்பினர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
இதர பகுதிகளிலுள்ள உயர்கோபுர மின் விளக்குகளின் பழுதுகளும் விரைவில் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களம் & படங்களில் உதவி:
A.K.இம்ரான்
படங்களில் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |