காயல்பட்டினம் நகர்மன்றத்தின் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர சாதாரண கூட்டம், 27.09.2013 அன்று துவங்கி, 01.10.2013 தேதி வரை நான்கு அமர்வுகளாக நடத்தி முடிக்கப்பட்டது.
அக்கூட்டத்தில், அரசு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்தை - காயல்பட்டினத்தில் அமைப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 68ஆவது கூட்டப் பொருளுக்கான தீர்மானம் குறித்து, காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் பின்வருமாறு தன்னிலை விளக்கமளித்துள்ளார்:-
நகராட்சித் துணைத்தலைவரின் தன்னிலை விளக்கம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
காயல்பட்டணத்தில், அரசு சான்றிதழ் வழங்கும் அலுவலகம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்த அலுவலகத்திற்குரிய இடம் மற்றும் பணியாளர் சம்பந்தமான தீர்மானம் நகர்மன்றக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்தபோது, நான் சில கருத்துக்களைக் கூறியது உண்மை.
நகர்மன்றத்தில் காலியாகவுள்ள பணியாளர்கள் இடம் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. அதை நிரப்பிவிட்டு, இதைக் கவனியுங்கள் என்பதுதான் என்னுடைய பேச்சின் பொருளாகும். மேலும் இத்தீர்மானத்திற்கெதிராகக் கருத்துத்தெரிவிக்கும்படி எந்த உறுப்பினரின் ஆதரவையும் நான் கேட்கவில்லை.
இந்தத் தீர்மானம் நிறைவேறும் என்றும் எனக்குத் தெரியும். இந்த அலுவலகம் இந்த ஊருக்கு வேண்டாம் என்று சொல்லுமளவுக்கு நான் ஒன்றும் விபரம் தெரியாதவன் இல்லை.
செப்டம்பர் மாதக் கூட்டத்தில் பொருள் எண்: 68ல் உள்ள வாசகத்தில் இதற்குப் பணியாளரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க என்று ஒரு வரி வருகிறது. எனவேதான், ஏற்கனவே உள்ள காலியிடங்களைச் சுட்டிக்காட்ட (இத்தீர்மானம் நிறைவேறும் என்று தெரிந்தும்) ஒப்புக்காக எனது எதிர்ப்பைப் பதிவுசெய்தேன். இதற்கு மத்தியில், கம்ப்யூட்டர் மற்றும் அலுவலகம் போன்றவை மட்டுமே நகராட்சி ஏற்பாடு என்றும், பணியாளருக்கு சம்பளம் வழங்குவது வருவாய்த் துறை என்றும் இப்போது சிலர் கூறுகின்றனர்.
இவ்வாறு கூட்டத்தில் சொல்லப்படவில்லை. இத்தகவல் உண்மையக இருந்து, அப்போதே சொல்லப்பட்டிருக்குமேயானால், எனது அந்த எதிர்ப்பைக் கூட கூட்டத்தில் தெரிவித்திருக்கமாட்டேன்.
ஆக, நகராட்சியின் காலியான இடங்கள் நிரப்பப்படவேண்டும் என்பதே எனது எதிர்ப்பின் நோக்கம். இவ்வாறிருக்க, எதிர்ப்புக்கான காரணத்தையும் சேர்த்து செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.
நகர்மன்றக் கூட்டப் பதிவேட்டிலும், வெறுமனே எதிர்ப்பு என்று பதியாமல் அதற்காக நான் கூறிய காரணத்தையும் சேர்த்தே பதிந்திருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நுற்றுக்கணக்கான தீர்மானங்களை எல்லோருடனும் சேர்ந்து நிறைவேற்ற உதவிய நான், இந்தத் தீர்மானம் கண்டிப்பாக நிறைவேறும் என்று தெரிந்திருந்தும், எனது எதிர்ப்பைப் பதிவு செய்வதனால், தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது.
இந்த ஊருக்கெதிராக எப்போதும் எந்த நிலையிலும் சிந்திக்க மாட்டேன் என்பதை அல்லாஹ் அறிவான்.
இந்த விளக்க அறிக்கையை நமதூரின் எல்லா இணையதளங்களுக்கும் அனுப்பியுள்ளேன். அவர்கள் அனைவரும் இதை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வஸ்ஸலாம்.
இவண்,
மும்பை எஸ்.எம்.முகைதீன்,
துணைத்தலைவர்,
நகராட்சி, காயல்பட்டினம்.
இவ்வாறு, நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்துள்ளது.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர கூட்டத்தின் 4 அமர்வுகளையும், காயல்பட்டணம்.காம் ஒளிப்பதிவு செய்து, இரண்டு செய்திகள் மூலம் முழுமையாக ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
அப்பதிவிலிருந்து. இச்செய்தி தொடர்பான 68ஆவது கூட்டப் பொருள் குறித்த விவாதமும், நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அடங்கிய - 06 நிமிடங்கள்; 54 வினாடிகள் அளவு கொண்ட பகுதி மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு, தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கீழ்க்காணும் படத்தைச் சொடுக்கி அதனைக் காணலாம்.
|