பெரிய நெசவு தெரு, ஐ.ஒ.பி. வங்கி சந்திப்பு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை மார்க்கத்தில் நிலுவையில் உள்ள சாலைப்பணியினை வரும் வாரம் துவக்க
திட்டமிட்டிருப்பதாக - இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள நாகூர் மீராசா, காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவித்தார்.
தற்போது மழைக்காலமாக இருப்பதால் பணி தாமதமாவதாகவும், இப்பணிகளை துவக்க தான் சில நாட்களுக்கு முன்னரே - பணி
நடைபெறவேண்டிய இடத்திற்கு வாகனங்களை கொண்டு வந்துவிட்டதாக மேலும் அவர் தெரிவித்தார்.
சாலையை தோண்டும் பணி 2 - 3 நாட்கள் நடைபெறும் என்றும், அந்த நேரத்தில் மழை இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர்
முதல் அடுக்கு விரிக்க 7 நாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த முக்கிய காலகட்டத்தில் மழை பெய்யாமலோ, குறைந்து பெய்தாலோ
தோதுவாக இருக்கும் என தெரிவித்த அவர், முழு பணியும் முடிய சுமார் 1.5 மாதம் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.
இச்சாலைப் பணிகள் சம்பந்தமாக முதல் அழைப்பு பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது.
ஒப்பந்ததாரர்கள் யாரும் இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்காததால், இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீண்டும் மார்ச் 4 அன்று கோரப்பட்டு விளம்பரம் வெளியிடப்பட்டது. ஒப்பந்தப்புள்ளிகளும் மார்ச் 21 வரை பெறப்பட்டன.
இருப்பினும் - நகர்மன்றத் தலைவர் மீது உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் சமர்ப்பித்து, அதற்குரிய கூட்டம் - ஏப்ரல் 5, 2013 அன்று
நடைபெற இருந்ததால், மார்ச் மாதம் நகர்மன்றக்கூட்டம் நடைபெறவில்லை. அதனால் ஒப்பந்தப்புள்ளிகளும் அம்மாதம் பரிசீலனை
செய்யப்படவில்லை.
பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்ட விளம்பரத்திலும், மார்ச் 4 அன்று வெளியிடப்பட்ட விளம்பரத்திலும் - பணியின் மதிப்பீடு 28.5 லட்ச ரூபாய்
என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 1, 2013 உடன் புதிய நிதியாண்டு பிறந்தது. நகர்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, ஏப்ரல் 3 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடையும் விதித்தது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 29 அன்று நகரமன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் - ஒருவழிப்பாதை சாலை பணிக்கான மார்ச் 21 அன்று வரை பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் பரிசீலிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர் நாகூர்
மீராசாவிற்கு ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்ததாரர் மதிப்பீட்டு தொகையான 28.5 லட்ச ரூபாய்க்கு, 0.003% சதவீதத்திற்கு
குறைவாக இப்பணியினை செய்ய முன்வந்தார்.
இப்பணிக்கான வேலை ஆணை கொடுக்கும் தருவாயில், திருநெல்வேலியில் உள்ள நகராட்சிகளின் மண்டல அலுவலகத்தை சார்ந்த மண்டல
பொறியாளர் (REGIONAL ENGINEER), 25 லட்ச ரூபாய் அல்லது அதற்கான மேலான பணிகளுக்கான தொழில்நுட்ப முன் அனுமதி, மண்டல அலுவலகத்தில் - காயல்பட்டினம்
நகராட்சி பொறியாளர்களால் பெறப்படவில்லை எனக்கூறி, இந்த பணிக்கான ஒப்புதலை தர மறுத்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் - பெரிய நெசவு தெரு சாலையை சார்ந்த சிலர், சாலையை தோண்டியே போடவேண்டும் என்று கோரிக்கை வைக்கவே, இந்த இரு
காரணங்களுக்காக முந்தைய தீர்மானம் (தீர்மானம் எண் 383) ரத்து செய்யப்பட்டு, புதிய மதிப்பீடான 29.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்
ஒப்பந்தப்புள்ளிகள் கோர மே 31 அன்று நடந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
நகராட்சி அலுவலர்களால் 28.5 லட்சம் என முந்தைய நிதியாண்டின் Schedule of Rates படி தயாரிக்கப்பட்ட மதிப்பீடு, புதிய நிதியாண்டில் மாற்றப்பட்டு - 2013-14 Schedule of Rates படி தயாரிக்கப்படாமலேயே - நகராட்சியின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனால், புதிய ஒப்பந்தப்புள்ளிகள் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதியன்று கோரப்பட்டதில், ஒப்பந்ததாரர் ஆர்.நாகூர் மீராசா - மதிப்பீட்டு தொகையைவிட 15.04% கூடுதலாகவும் (33.93 லட்ச ரூபாய்), மாடசாமி என்பவர் - மதிப்பீட்டு தொகையைவிட 20.89% கூடுதலாகவும் (35.66 லட்ச ரூபாய்) ஒப்பந்தப்புள்ளிகள் கோரியிருந்தனர்.
2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசு ஆணையின் ஒப்புதல் பெற்ற நகர்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான பொறியியல் கையேடு (ENGINEERING MANUAL FOR URBAN LOCAL BODIES) -
மதிப்பீட்டில் இருந்து 5 சதவீதம் வரை கூடுதலான ஒப்பந்தப்புள்ளிகளை நகர்மன்றக்கூட்டத்திலேயே ஏற்றுக்கொள்ளலாம் என்றும், 5% - 10%
வரையிலான ஒப்பந்தப்புள்ளிகளை, நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் மற்றும் மண்டல பொறியாளர் ஆகியோர் கொண்ட குழுவின்
ஒப்புதலோடு ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறது.
10 சதவீதத்திற்கும் மேலான ஒப்பந்தப்புள்ளிகளை, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர், நகராட்சி நிர்வாகத்துறை அலுவலக பொறியாளர், சென்னை
குடிநீர் வாரியத்தின் பொறியியல் இயக்குனர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொறியியல் இயக்குனர், நெடுஞ்சாலைத் துறையின் தலைமை
பொறியாளர், பொதுப்பணி துறையின் தலைமை பொறியாளர், நகராட்சி நிர்வாகத்துறையின் நிதி அலுவலர், சம்பந்தப்பட்ட நகராட்சியின் ஆணையர்
மற்றும் நகராட்சி பொறியாளர் அடங்கிய குழுவே - பரிசீலித்து, ஒப்புதல் வழங்கவேண்டும்.
சென்னையில் 8 பேர் கொண்ட குழுவிடம் இருந்து ஒப்புதல் வாங்க காலதாமதம் ஆகலாம் என்பதால், 2013-14 ஆண்டிற்கான அட்டவணை
அடிப்படையில், புதிதாக 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் தயார் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 16
அன்று நடைபெறவிருந்த நகர்மன்ற கூட்டத்தில் கூட்டப்பொருள் 39 ஆக வைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் (2013) மாத சாதாரண கூட்டத்தில் இருந்து
பெருவாரியான உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த காரணத்தால், இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் - அக்கூட்டத்தின்
முடிவில் புதிய மதிப்பீட்டு தொகைக்கு - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் முன் அனுமதி வழங்கினார்.
ஆகஸ்ட் 27 அன்று கற்புடையார் பள்ளி வட்ட தொகுப்பு வீடு சம்பந்தமாக காயல்பட்டினம் நகர்மன்றத்தில்
அவசரக்கூட்டம் நடைபெற்றது. அப்போது - ஒரு வழிப்பாதை குறித்த மதிப்பீட்டு தொகையும் (35 லட்ச ரூபாய்) மேஜை பொருளாக பரிசீலனை
செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து - செப்டம்பர் 12 அன்று ஒரு வழிப்பாதையில் சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, நாளிதழ்களில் விளம்பரம்
வெளியிடப்பட்டு, அக்டோபர் 4, 2013 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் அக்டோபர் 11 அன்று நடந்த நகரமன்றத்தின் அவசர கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு - மதிப்பீட்டு தொகையை விட 4.85% சதவீதம்
கூடுதலாக (36.7 லட்ச ரூபாய்) கோரியிருந்த ஒப்பந்ததாரர் நாகூர் மீராசாவிற்கு பணி வழங்கப்பட்டது. அக்டோபர் 16 அன்று காயல்பட்டினத்தில் மழை பெய்ய துவங்கியது. அக்டோபர் 21 அன்று வடக்கிழக்கு பருவமழை துவங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
29.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்பந்ததாரர் கோரியிருந்த 33.93 லட்ச ரூபாய் தொகைக்கும், கடைசியாக அறிவிக்கப்பட்ட 35 லட்ச
ரூபாய் மதிப்பீட்டின் அடிப்படையில் அதே ஒப்பந்ததாரர் கோரியிருந்த 36.70 லட்ச ரூபாய் தொகைக்கும் ஏன் வித்தியாசம் என காயல்பட்டணம்.காம்
- வினவியதில், 29.5 லட்ச ரூபாய் மதிப்பீடு, முந்தைய ஆண்டிற்கான அரசின் Schedule of Rates படி தயாரிக்கப்பட்டது என்றும், 35 லட்ச ரூபாய் மதிப்பீடு அரசின்
2013-14 ஆண்டுக்கான Schedule of Rates படி தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் - செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில், இதே பணிக்காக முன்னர் மூன்று முறை வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி
கோரிக்கைகளில் இடம்பெறாத அம்சங்கள் இணைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 9:00 am / 1.12.2013]
|