காயல்பட்டினத்தில் இன்று மாலையில் திடீரென பலத்த சூறாவளியுடன் கனமழை பெய்தது. கடற்கரையில் மஃரிப் தொழுகை மாலை 18.10 மணியளவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திடீரென பலத்த காற்று வீசியது.
இன்று நள்ளிரவு பெய்த மழையில் கடற்கரை மணற்பரப்பு நனைந்திருந்த நிலையிலும், காற்று மணலை அள்ளி வீசியது. அதனைத் தொடர்ந்து பெரிய துளிகளுடன் திடீரென மழை பெய்யத் துவங்கியது.
பலத்த சூறாவளிக் காற்று காரணமாக, கடற்கரை தொழுமிடத்தில் - இயலாநிலை பொதுமக்களுக்காக வைக்கப்பட்டிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. தொழுகை விரிப்புகள் தரையை விட்டும் உயர்ந்து பறந்தன.
ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி உள்ளூர் - வெளியூர்களிலிருந்து திரண்டு வந்திருந்த பொதுமக்கள் - திடீரென வீசிய காற்று, பெய்த மழை காரணமாக கடற்கரையில் ஒதுங்குமிடம் தேடியலைந்தனர். வடக்கு திசையிலிருந்து தென் திசை நோக்கி பக்கவாட்டில் பெய்த மழையால், கடற்கரையின் இரு புறங்களிலுமுள்ள மண்டபமும் முற்றிலுமாக நனைந்துவிட்டதால், அது ஒதுங்கத் தகுதியற்றுப் போனது.
பின்னர், கடற்கரை நுழைவாயில் அருகில் கட்டப்பட்டு வரும் கடை கட்டிடத்திற்குள் நுழைந்த பொதுமக்கள், ஓரளவுக்கு மழை குறைந்ததையடுத்து, வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். இரவு 20.30 மணியளவில் மழை ஓய்ந்தது.
முந்தைய மழைச் செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |