தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
இலங்கை மற்றும் தமிழகக் கடல்பகுதியில் சனிக்கிழமை உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை அதேஇடத்தில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இது வலுப்பெறும்வாய்ப்புள்ளதாலும் மேற்கு நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மேற்கு நோக்கி நகர்ந்து வந்தால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமைகாலை உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாழ்வுநிலை மேற்குநோக்கி நகரக்கூடும் என்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கன மழை பெய்யும். அடுத்த 48 மணிநேரங்களுக்கு மழை நீடிக்கும்.
தற்போது தமிழகத்தின் அருகே வங்கக்கடலில் 2 காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியிருப்பதாலும் அவை மேற்கு நோக்கி நகர்ந்துவரும்பட்சத்தில் தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
வானிலை முன்னறிவிப்பு:
தமிழகம் மற்றும் புதுவையின் பல இடங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 வரையிலான 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டர்): திருச்செந்தூர் - 110, ராமநாதபுரம் - 60, சாத்தான்குளம் - 50, மகாபலிபுரம் - 40, ஏற்காடு - 30, கல்பாக்கம், உத்திரமேரூர், - 20, சிதம்பரம், மாதவரம், நெய்வேலி, திருவையாறு, பரங்கிப்பேட்டை, சிவகங்கை, எண்ணூர், மயிலாடுதுறை, ஓமலூர் - 10.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தகவல்:
தினமணி
முந்தைய மழைச் செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |