திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சித் தலைவர் கருணாநிதி, ஈழத் தமிழர் நலன் காக்க இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கருணாநிதி சென்னை அறிவாலயத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியிட்டார்.
மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டு 100 தலைப்புகளில் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.
நேற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 35 பேர் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க் கிழமை) திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வாசிக்கத் துவங்கிய கருணாநிதி, "திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்று பாரம்பரியம் மிக்க கட்சி. கடந்த 65 ஆண்டுகளாக ஏற்றுத்தாழ்வுகளை நீக்கி, உரிமைகள் நிலைக்கச் செய்து, சமத்துவம் ஓங்க பாடுபட்டு வருகிறது. வற்றாத ஜீவ நதியாக திமுக விளங்கி வருகிறது. மாநில அரசியலில் மட்டும் அல்லாமல் இந்திய அரசியலிலும் ஜனநாயக நெறிமுறைகளை பாதுகாக்க பணியாற்றி வருகிறது திமுக. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என பணியாற்றுகிறது. தி.மு. கழகத்தை பாதுகாத்துவரும் மக்களுக்கு நன்றி" என்று கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:
* திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் பங்கேற்ற காலத்தில் தமிழகத்திற்குக் கிடைத்த திட்டங்கள், நன்மைகள் எதுவுமே இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில், தேர்தல் அறிக்கையின் துவக்கத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் பங்கேற்ற காலத்தில் தமிழகத்திற்காக என்னென்ன திட்டங்கள் கிடைத்தன என்பது விளக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், அந்தந்த மாநில மொழிகளே அலுவல் மொழிகளாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற மொழி உரிமை கோரிக்கை இடம் பெற்றுள்ளது.
* தி.மு. கழகத்தின் அடிப்படை கொள்கைகளான சமூக நீதி, கூட்டாட்சித்தத்துவம், மதச் சார்பின்மை, தாய்மொழியான தமிழுக்கு முதன்மையான இடம், அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம், நாடெங்கிலும் பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள் ஆகியவை குறித்து குறிப்பிட்டுள்ளது.
* மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், அரவாணிகள், முதியோர் - மாணவர்கள் - விவசாயிகள் - மீனவர், நெசவாளர், சிறு வணிகர்கள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர் எனச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் நலன்களைப் பாதுகாப்பது குறித்து தனித்தனியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
* வேலை வாய்ப்பில் தனியார் துறையிலும் கூட இட ஒதுக்கீடு, அகில இந்திய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, பழங்குடியினர் பட்டியலில் மீனவர்களை இணைத்தல், ஆதி திராவிட கிறித்தவர்களுக்கு, ஆதி திராவிடர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குதல் போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
* தூக்கு தண்டனையை ஒழிக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள திமுக நடவடிக்கை எடுக்கும்.
* சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கச்சத்தீவை மீட்கவும், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தவும் திமுக உரிய நடவடிக்கை எடுக்கும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* குளச்சல் துறைமுகம் தரம் உயர்த்தப்படும்.
* கல்விக் கடன்களையும், விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நெல், கரும்பு, கொப்பரைத் தேங்காய் மற்றும் பச்சைத் தேயிலை ஆகியவற்றுக்கு கட்டுப்படியாகக் கூடிய ஆதரவு விலை அறிவிக்கப்பட வேண்டும், அத்தியாவசிய பொருள்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதோடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான விலை கொள்கையில் மாறுதல் காணப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கென வாரியங்களை உருவாக்குதல் போன்ற கோரிக்கைகள் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.
* புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்
-- உள்ளிட்ட அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
புகைப்படம் மற்றும் தகவல்:
தி இந்து |