இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலை முன்னிட்டு, பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் தலைமையில், மாவட்ட தேர்தல் நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஓரம்சமாக, தேர்தல் நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவு செய்திட தகுதியான இளைஞர்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வருமாறு:-
2014 பொதுத் தேர்தல் அன்று (24.04.2014) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுகளை (காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) மடிக்கணினியில் பதிவு செய்வதற்குத் தகுதியான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தேவை. நமது நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய ஜனநாயக முறையிலான தேர்தலை வாக்குச்சாவடியிலிருந்தவாறு நேரடியாகக் காண இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இப்பணியில் பங்கேற்பவர்களுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் மதிப்பூதியமும் வழங்கப்படும்.
விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் குறித்த விவரங்களை, electionwebcasting@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலாகவோ அல்லது 9498 00 2589 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. |