ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் ஏற்பாட்டில், “காயலர் தினம் - 2014” எனும் தலைப்பில், காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 28ஆம் நாளன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள - அமீரகம் வாழ் காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
பேரன்பிற்குரிய துபை காயல் நல மன்ற உறுப்பினர்கள் மற்றும் அமீரகம் வாழ் காயலர்கள் அனைவருக்கும் எமது அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
நமது துபை காயல் நல மன்றத்தின் - இவ்வாண்டிற்கான சாதாரண பொதுக்குழுக் கூட்டத்தை, “காயலர் தினம் - 2014” எனும் தலைப்பில், வழமை போல குதூகலமாகக் கொண்டாடிட, இம்மாதம் 07ஆம் நாளன்று நடைபெற்ற நம் மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல், நம் மன்றத்தின் சாதாரண பொதுக்குழுக் கூட்டம் - காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக அல்ஸஃபா பூங்காவில் நடைபெவுள்ளது.
இந்நிகழ்ச்சி “காயலர் தினம் - 2014” என்ற தலைப்பில் நடத்தப்படுவதால், காயலர் ஒன்றுகூடல், விருந்து ஏற்பாடுகள், பெரியோர் - சிறாருக்கான விளையாட்டுப் போட்டிகள், கேளிக்கைகள் உள்ளிட்டவை மட்டுமே நடைபெறும்.
மன்ற உறுப்பினர்களும், அமீரகம் வாழ் அனைத்து காயலர்களும் தங்கள் குடும்பத்தினருடன் குறித்த நேரத்தில் தவறாமல் வந்து கலந்து சிறப்பிப்பதோடு, நம் நல மன்றம் நகர்நலப் பணிகளில் மென்மேலும் சாதனைகள் பல புரிந்திட உங்கள் யாவரின் மேலான நல்லாலோசனைகளைவும், ஒத்துழைப்புகளையும் உளமார வழங்கிடுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டி வரவேற்கிறோம்.
காயலர்களுள் ஒருவர் கூட இந்நிகழ்ச்சியில் பங்கேற்கத் தவறக் கூடாது எனும் நோக்கத்திலும், நல்லார்வத்திலுமே - நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை முற்கூட்டியே அறியத் தந்துள்ளோம்.
நிகழ்வில் பங்கேற்க வருகை தரும் அனைவரையும் வரவேற்கவும், உணவு ஏற்பாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை வருடம் முழுக்க மறக்காத அளவுக்கு சிறப்புற நடத்திடவும், தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட சகோதரர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, ஆர்வமுள்ள சகோதரர்கள் தாமாகவே முன்வந்து, நம் மன்றத்தின் பொதுத் தொடர்பாளர் சகோதரர் எம்.ஏ.ஈஸா அவர்களை, 055-4063711 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு உங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ், நமதூர் நன்மையை நாடி நாம் செய்து வரும் - செய்யவிருக்கும் அனைத்து நற்காரியங்களையும் ஏற்று, அவற்றுக்கான நற்கூலிகளை நமக்கு நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, துபை காயல் நல மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ தனதறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தகவல்:
துபை காயல் நல மன்றம் சார்பாக...
சாளை ஷேக் ஸலீம்
(துணைத்தலைவர்) |