இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் கீழ் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் இம்மாதம் 10ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. அப்பட்டியலின் படி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
மார்ச் 10 அன்று 21.30 மணியளவில், கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை அலுவலகமான - சென்னை மண்ணடியிலுள்ள காயிதேமில்லத் மன்ஸிலில், கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் காதர் மொகிதீனை அவர் - தன் தந்தையும், திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளருமான என்.பெரியசாமியுடன் நேரில் சென்று, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில துணைத்தலைவர் மவ்லவீ தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான், மாநில செயலாளர்களான திருப்பூர் சத்தார், காயல் மகபூப், வெ.ஜீவகிரிதரன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் |