மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து துவக்கப் போட்டியில், திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணி வெற்றிபெற்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, ஐக்கிய விளையாட்டு சங்கத்தால் நேற்று நடத்தப்படவிருந்த மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்தாட்ட துவக்கப் போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. துவக்க விழாவுடன் துவக்கப் போட்டி இன்று மாலை 16.30 மணிக்கு, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெறும் என்றும், நுழைவு அனுமதி இலவசம் என்றும் சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 07ஆம் நாள் (இன்று) மாலையில் துவங்கும் என அறிவிக்கப்பட்டு, போட்டி நிரலும் வெளியிடப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக நகரில் பெய்த தொடர்மழை காரணமாக, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, மே 07ஆம் நாள் நடைபெறவிருந்த துவக்கப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், மழை நீர்த்தேக்கம் முழுமையாக நீங்காததால், இன்றும் (மே 08) அங்கு போட்டியை நடத்தவியலாத நிலையில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில், அந்நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் துவக்கப் போட்டி, இன்று 16.30 மணியளவில் நடைபெற்றது. காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி துவக்கப் போட்டியை முறைப்படி துவக்கி வைத்தார்.
முதல் போட்டியில், காரைக்கால் கோச்சிங் சென்டர் அணியும், திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும் மோதின. முழு ஆட்டமும் மந்தமாகக் கழிந்தபோதிலும், அவ்வப்போது ஆட்டத்தில் விறுவிறுப்பு காணப்பட்டது.
இரண்டாவது பாதியில் 76ஆவது நிமிடத்தில், காரைக்கால் அணி வீரர் கையால் பந்தைத் தடுத்ததையடுத்து, திருவனந்தபுரம் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு நடுவரால் அளிக்கப்பட்டது. அந்த அணி வீரர் அஜீ வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அற்புதமாக கோல் அடித்தார்.
பின்னர், ஆட்டத்தின் நிறைவு வரை ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், 1-0 என்ற கோல் கணக்கில் திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணி வெற்றி பெற்று, காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இன்றைய துவக்க ஆட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும் - காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் தலைவருமான வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கும், போட்டியைத் துவக்கி வைத்த கே.எஸ்.ஸி. செயலாளருக்கும், சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில், ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, செயலாளர் பி.எஸ்.எம்.இல்யாஸ் ஆகியோர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர். பின்னர் அவர்களுக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நிகழ்விடம் திடீர் மாற்றமடைந்ததன் காரணமாக, நுழைவுக் கட்டணம் இன்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட இப்போட்டியில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
ஐக்கிய விளையாட்டு சங்கத்தால் நடத்தப்படும் - மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டி 49 ஆண்டு கால வரலாற்றில், முதன்முறையாக வேறு மைதானத்தில் இன்று போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாளை (மே 09) பெங்களூரு சதர்ன் ப்ளூஸ் அணியும், சென்னை சிட்டி பொலிஸ் அணியும் களம் காணவுள்ளன. இப்போட்டி, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து முதல் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |