நடப்பு தொடர்மழை காரணமாக, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மேற்கு வராண்டா மேற்கூரை இன்று காலையில் இடிந்து விழுந்தது. அந்நேரத்தில் யாரும் அவ்விடத்தில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப். இங்கு, 87 ஆண்டுகளாக, நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழித் தொகுப்பான அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ கிரந்தம் ஆண்டுதோறும் ரஜப் மாதம் முழுக்க ஓதப்பட்டு - அன்றன்று ஓதப்பட்ட பாடங்களுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர, பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பெறுவதற்காக, 1971ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் பல்லாண்டுகளாக இக்கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இளம் மாணவர்கள் திருமறை குர்ஆனை மனனம் செய்வதற்காக ஹிஃப்ழு மத்ரஸாவும் ஹாமிதிய்யா நிர்வாகத்தால் 1985ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
மேற்குப் பகுதி கட்டிடம், மேற்கு வராண்டா, ஹல்கா, பெண்கள் பகுதி, கிழக்கு வராண்டா ஆகிய முக்கியப் பகுதிகளையும், அலுவலகப் பகுதிகளையும் கொண்ட இக்கட்டிடத்தில், அனைத்துப் பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், 1942ஆம் ஆண்டு - மர்ஹூம் அ.க.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் பொருளுதவியால் கட்டப்பட்ட மேற்குப் பகுதி கட்டிடம் மற்றும் மேற்கு வராண்டா ஆகிய இரண்டு பகுதிகள் மட்டும் பழைய நிலையிலேயே இருந்து வந்தது.
அக்கட்டிடப் பகுதி நாளுக்கு நாள் பழுதடைந்து, மழைக்காலங்களில் அதிக ஒழுக்குடன் காணப்பட்டதால், அதை இடித்தகற்றி, புதிதாகக் கட்டுவதற்காக புகாரி ஷரீஃப் நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டு, அதற்கான முயற்சிகளும் துவக்க நிலையிலுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக - ஏற்கனவே சேதமுற்றிருந்த மேற்கு வராண்டாவின் தென்பகுதியில், இன்று காலை 11.45 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டு, திடீரென இடிந்து விழுந்தது.
எப்போதும் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பது ஒருபுறமிருக்க, நடப்பாண்டின் (ஹிஜ்ரீ 1435) புகாரி ஷரீஃப் 07ஆம் நாள் மார்க்க விளக்கவுரை நிகழ்ச்சி நிறைவுற்று, திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் யாவரும் கலைந்து சென்ற அடுத்த சில நிமிடங்களில் இது நிகழ்ந்துள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்த நேரத்தில் யாரும் அவ்விடத்தில் இல்லாத காரணத்தால், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நம் புனிதமிகு மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளும், பொதுமக்களின் தாராள நன்கொடைகளைக் கொண்டு - எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் வரிசையாக புதுப்பிக்கப்பட்டுவிட்ட நிலையில், மஜ்லிஸின் ஹல்காவைக் கொண்ட மேற்குப் பகுதி கட்டிடம், அதனையொட்டி அமைந்துள்ள மேற்கு வராண்டா ஆகிய இரு பகுதிகளை மட்டும் விரைவில் புதுப்பித்துக் கட்டுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, இன்று மஜ்லிஸ் நிறைவடைந்து அனைவரும் கலைந்து சென்ற பின்னர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேற்கு வராண்டாவின் தென்பகுதி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கருணையுள்ள அல்லாஹ்வின் பெருங்கிருபையால், அந்நேரத்தில் அவ்விடத்தில் யாரும் நடமாடாத நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கட்டிட இடிபாடுகள் விரைவில் அகற்றப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகள் செய்ய நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
மஜ்லிஸின் நடப்பாண்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்ஷாஅல்லாஹ் திட்டமிட்ட படி நடைபெறும் என இதன் மூலம் அன்புடன் அறியத் தருகிறோம்.
மேற்குப் பகுதி கட்டிடம் மற்றும் மேற்கு வராண்டா கட்டிடம் ஆகியவற்றைப் புதுப்பித்துக் கட்டுவதற்கான ஏற்பாட்டுப் பணிகள் நடப்பாண்டு மஜ்லிஸ் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின் துவக்கப்படவுள்ளது என்பதையும் அனைவரின் மேலான கவனத்துக்கும் அறியத் தருகிறோம். அனைவரும் துஆ செய்ய அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வைபவக் கமிட்டி சார்பில்
குளம் M.I.மூஸா நெய்னா
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |