காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, ஐக்கிய விளையாட்டு சங்கத்தால் நடத்தப்படவிருந்த மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்தாட்ட துவக்கப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 07ஆம் நாள் (இன்று) மாலையில் துவங்கும் என அறிவிக்கப்பட்டு, போட்டி நிரலும் வெளியிடப்பட்டிருந்தது. நிரலின் படி, இன்று நடைபெறவிருந்த துவக்கப் போட்டியில், காரைக்கால் கோச்சிங் சென்டர் அணியும், திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும் களம் காணவிருந்தன.
இந்நிலையில், இம்மாதம் 04ஆம் நாள் முதல் தொடர்ந்து மழை பெய்து வருவது ஒருபுறமிருக்க, இன்று (மே 07) காலை முழுக்க கனமழை பெய்து 14.00 மணியளவில் ஓய்ந்துள்ளது.
இதன் காரணமாக, போட்டி நடைபெறும் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானம் முழுக்க மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
போர்க்கால அடிப்படையில் - மைதானத்தின் நான்கு திசைகளிலும் மழை நீர் வழிந்தோட வசதியாக வெட்டி விடப்பட்டுள்ளது. தேங்கிய நீர் வேகமாகப் பாய்ந்தோடும் நிலையிலும், மழை தொடர்ந்து பெய்ததால் மைதானம் தண்ணீர் தேக்கத்துடனேயே காணப்படுகிறது.
இவ்வாறிருக்க, நகரின் உட்பகுதியிலும் - நகருக்கு வெளியிலும் உள்ள சில மைதானங்களில் போட்டியை நடத்த பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு, அவ்விடங்களிலும்ம் மழை நீர்த்தேக்கம் காணப்படுவதால் அம்முயற்சி கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இன்று 13.30 மணியளவில் - ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்தால் பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-
அன்பார்ந்த கால்பந்தாட்ட ரசிகப் பெருமக்களுக்கு, உங்கள் யாவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.
காயல்பட்டினம் நகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த துவக்கப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வானிலைச் சூழல் ஒத்துழைத்தால், இன்ஷாஅல்லாஹ் நாளை (மே 08) போட்டிகள் துவங்கும் என அன்போடு அறியத் தருகிறோம். இத்தகவலை, கைபேசி குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகள் வாயிலாக நகரின் கால்பந்து ஆர்வலர்கள் அனைவருக்கும் தெரிவித்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, ஐக்கிய விளையாட்டு சங்க ஒலிபெருக்கி மூலம் - சுற்றுப்போட்டிக் குழுவால் அறிவிப்புச் செய்யப்பட்டது.
படங்களுள் உதவி:
ஷேக்னா (PHM)
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |