காயல்பட்டினம் கடற்கரையில், தின்பண்ட வணிகர்கள் காகிதக் கோப்பைகளிலும், ப்ளாஸ்டிக் பைகளிலும் தின்பண்டங்களைப் போட்டு விற்க, அவற்றை உட்கொள்ளும் வாடிக்கையாளர்களோ, வெற்றுக் கோப்பைகளை கடற்கரை மணலிலேயே போட்டுச் செல்வது நாள்தோறும் வாடிக்கையாகிப் போனது.
இதன் காரணமாக, காகிதக் குப்பைகள் மற்றும் ப்ளாஸ்டிக் பைகளும் நிறைந்து, கடற்கரை மணற்பரப்பு குப்பைக் காடாகக் காட்சியளிப்பது பழகிப்போன ஒன்றாகிவிட்டது. குப்பைகளைக் காணும் பொதுமக்கள் நகராட்சியின் பணிகளைக் குறை கூற, நகராட்சி நிர்வாகமோ பொதுமக்களின் ஒத்துழைப்பின்மையைக் காரணம் காட்டும் நிலையுள்ளது.
கடற்கரையில் குப்பைகள் சேராமல் தவிர்ப்பதற்காக, காகிதக் கோப்பைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று துவக்கமாக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்கரையின் உட்பகுதி மணற்பரப்பில் கடை நடத்திக் கொண்டிருந்த அவர்கள் நுழைவாயிலுக்கு தற்காலிகமாக மாற்றியனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களுக்கென - நகர்மன்றத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி கடைகள் கட்டிக் கொடுக்கவும், அதுவரை அவர்கள் வணிகம் செய்வதற்கு, கடற்கரையின் வட - தென் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களைச் சுற்றி அல்லது கடற்கரையிலுள்ள முதலாவது வட்டு (ரவுண்டானா)-வைத் துப்புரவு செய்து, அதில் கடைகளை தற்காலிகமாக அமைக்கச் செய்வது தொடர்பாக, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜுடன், நேற்று (மே 05 திங்கட்கிழமை) வருகை தந்து ஆய்வு செய்தார். நகராட்சி அலுவலர் அந்தோணியும் உடனிருந்தார்.
காயல்பட்டினம் கடற்கரை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |