காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் கைப்பந்து விளையாட்டு வீரரும், தப்லீக் ஜமாஅத்தின் பொறுப்பாளரும், மாணிக்க வணிகருமான முஹம்மத் லெப்பை, இம்மாதம் 04ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 23.30 மணியளவில், இலங்கை கல்முனை - நிண்டவூரில் காலமானார். அவருக்கு வயது 43.
அன்னாரின் ஜனாஸா, இலங்கை - கல்முனையில் ரூஹுல்லாஹ் ஆசிரியர் இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்று (மே 05) மஃரிப் தொழுகைக்குப் பின், 19.00 மணியளவில், இலங்கை - கல்முனை மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. காயல்பட்டினத்தைச் சேர்ந்தவரும், இலங்கை தாருல் ஹதீஸ் நிறுவனத்தின் இயக்குநரமான மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ தொழுகையை வழிநடத்தினார். பின்னர், அப்பள்ளியின் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, ஹாஜி ஏ.டி.முஹம்மத் அப்துல் காதிர் தலைமையில், ஹிட்லர் மஹ்மூத் லெப்பை, ஸ்டார் முஹம்மத் சுலைமான், அப்துல் காதிர், செய்யித் அஹ்மத், ஹாஃபிழ் செய்யித் அஹ்மத், எம்.எஸ்.செய்யித் அஹ்மத், எஸ்.ஓ.செய்யித் அஹ்மத், எம்.என்.மிஸ்கீன் ஸாஹிப் உள்ளிட்ட காயலர்கள் வாகனத்திலும், இலங்கை - பேருவளை நகரில் மாணிக்க வணிகம் செய்யும் காயலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அங்கிருந்தும், இலங்கை - கண்டியிலிருந்து எஸ்.கே.எஸ்.இப்றாஹீம் அன் ப்ரதர்ஸ் ஜுவல்லர்ஸ் குடும்ப அங்கத்தினரும் கல்முனை புறப்பட்டுச் சென்று ஜனாஸா - நல்லடக்கத்தில் பங்கேற்றனர். கல்முனை நகரின் முஸ்லிம் ஜமாஅத்தினர் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
நல்லடக்க ஏற்பாடுகளை, மறைந்த முஹம்மத் லெப்பை அவர்களின் நண்பர் ஆசிரியர் ரூஹுல்லாஹ் தலைமையில், கல்முனை ஜமாஅத்தார் முழுப்பொறுப்பேற்று செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
இலங்கையிலிருந்து...
S.I.ஹைதர் அலீ (HYLEE) (கொழும்பு)
முஹம்மத் லெப்பை மறைவை முன்னிட்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இரங்கல் தெரிவிப்பதற்கு வசதியாக, இன்று (மே 06 செவ்வாய்க்கிழமை) காலை 09.00 மணிக்கு, காயல்பட்டினம் குத்துக்கல் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் ஸலாம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டது @ 13:00 / 06.05.2014] |