பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குவைத் நாட்டிற்குச் சென்ற - காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீக்கு, குவைத் காயல் நல மன்றம் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-Tic) ஏற்பாட்டில் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள் இம்மாதம் 22, 23, 24 நாட்களில் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ குவைத் வருகை தந்திருந்தார்.
குவைத் ஃகைத்தான் பகுதியிலுள்ள தமிழ் குத்பா பள்ளியில் இம்மாதம் 23ஆம் நாள் வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளி இரவு அவர் சிறப்புரையாற்றினார். மறுநாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், “இஸ்லாமில் குடும்ப நெறிமுறை” எனும் தலைப்பில் அவர் உரையாற்றினார்.
ஆலிம் அவர்களின் வருகையை முன்னிட்டு குவைத் காயல் நல மன்றம் சார்பில் – மன்றத் தலைவர் எஸ்.எம்.ஹஸன் மவ்லானா, நிர்வாகி எஸ்.எம்.எம்.அபூதாஹிர் ஆகியோர் முன்னிலையில், அன்று 17.30 மணியளவில் குவைத் ஃபாஹிலில் உள்ள உர்தூ குத்பா பள்ளியில் அவரை வரவேற்று சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஹாஃபிழ் முஹம்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். வழமையான கூட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து, மன்றத்தின் நகர்நலப் பணிகளை ஊக்கப்படுத்தி ஆலிம் அவர்கள் சிறிய வாழ்த்துரை வழங்கினார்.
அன்றிரவு மஃரிப் தொழுகைக்குப் பின் மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தினார். இஷா தொழுகை நேரம் வந்ததும், தொழுகையை அவரே வழிநடத்தி, பின்னர் உரையைத் தொடர்ந்தார்.
மறுநாள் மே 24 அன்று குவைத் மிர்காப் / ஷர்க் பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் ஆமிர் பள்ளியில் மிஃராஜ் விளக்க சொற்பொழிவாற்றினார். துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் இறையருளால் இனிதே நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் எம் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தபர்ருக் வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
L.T.அஹ்மத் முஹ்யித்தீன்
படங்கள்:
M.K.T.முஹ்யித்தீன் இப்றாஹீம் ஸாஹிப்
P.S.சாமு ஷிஹாபுத்தீன்
குவைத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 23:08 / 26.05.2014] |