DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது DCW தொழிற்சாலை. 1958 ஆம் ஆண்டு இப்பகுதியில் துவக்கப்பட்ட இத்தொழிற்சாலையினால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக புகார்கள் உள்ளன.
இதற்கிடையே, இத்தொழிற்சாலை - தனது உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசின் - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் (MINISTRY OF ENVIRONMENT AND FORESTS) - 2010ம் ஆண்டில் - விண்ணப்பித்திருந்தது.
அதன்படி - அந்நிறுவனத்தின் Poly Vinyl Chloride (PVC) உற்பத்தி ஆண்டுக்கு 90,000 டன் அளவில் இருந்து 1,50,000 டன் என உயர்த்தப்படும். Tri Chloro Ethylene (TCE) உற்பத்தி ஆண்டுக்கு 7,200 டன் அளவில் இருந்து 15,480 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்படும். புதிதாக ஆண்டுக்கு 14,400 டன் கொள்ளளவில் Chlorinated PVC (CPVC) என்ற பொருள் உற்பத்தி செய்யப்படும். மேலும் - நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தி, தற்போதைய 58 MW அளவில் இருந்து, 108 MW அளவிற்கு உயர்த்தப்படும்.
இந்த விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து, காயல்பட்டினம் மக்கள் சார்பாக - 2011ம் ஆண்டு நடந்த மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் உட்பட பல தருணங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் - மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இவ்வாண்டு பிப்ரவரி 24 அன்று - DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் (ENVIRONMENTAL CLEARANCE) வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், ஏப்ரல் 16 அன்று அத்தொழிற்சாலையின் PVC பிரிவின் விரிவாக்கத் திட்டங்களுக்கு Consent To Establish (CTE) என்ற முதல் கட்ட அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வழங்கியுள்ள ஒப்புதலை எதிர்த்து - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION - KEPA) சார்பாக, சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் (NATIONAL GREEN
TRIBUNAL) தெற்கு கிளையில் (SOUTHERN BENCH) வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவ்வழக்கு (APPEAL NO.37/2014 [SZ]) இன்று அனுமதிக்காக - நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தீர்ப்பாணையம், வழக்கை அனுமதித்து, எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் வழக்கை ஜூலை 10, 2014 தேதிக்கு ஒத்திவைத்தது. (இடைப்பட்ட காலம் பசுமைத் தீர்ப்பாணையத்தின் விடுமுறை நாட்களாகும்.)
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பாக - மூத்த வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் அவர்களின் குழும வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர்.
இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக - மத்திய அரசு (அதன் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக செயலாளர்), தமிழக அரசு (அதன் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர்), DCW தொழிற்சாலை (அதன் நிர்வாக இயக்குனர்), தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (அதன் உறுப்பினர் - செயலாளர்), இத்திட்டத்திற்கு - DCW தொழிற்சாலை சார்பில் ஆவணங்கள் தயாரித்த PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED மற்றும் CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:50 pm / 26.05.2014] |