காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் 25ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா, மே 31, ஜூன் 01 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.
31ஆம் நாள் சனிக்கிழமை 09.30 மணி முதல் 22.00 மணி வரை, கல்லூரியின் தீனிய்யாத் பிரிவு மாணவியர், மூன்றாமாண்டு மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகள், திருமண பயிலரங்கம், மூன்றாமாண்டு மாணவியரால் நடத்தப்படும் இஸ்லாமிய கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
ஜூன் 01 ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணி முதல் 13.00 மணி வரை, ‘ஆலிமா ஸித்தீக்கிய்யா’ மற்றும் தீனிய்யாத் பட்டம் பெறும் மாணவியரின் சிறப்புரைகள் இடம்பெறுகின்றன.
அன்று 17.00 மணி முதல் 18.00 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில், கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவியர் தொகுப்பில் உருவான நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து, பட்டமளிப்பு உரையும் நடைபெறுகிறது. திருச்சி மஸ்ஜிதுத் தக்வா பள்ளியின் இமாம் மவ்லவீ அலீ அக்பர் உமரீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டமளிப்புப் பேருரையாற்றுகிறார்.
19.00 மணி முதல் 20.00 மணி வரை, கல்லூரியின் முதல்வரும் - அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீபுமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, பட்டம் பெறும் மாணவியரின் பெயர்களை வாசிக்க, பெண்கள் பகுதியில், மாணவியருக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரது சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.
இவ்விழாவில், கல்லூரியில் மூன்றாண்டு கல்வித்திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவியருக்கு, ‘ஆலிமா ஸித்தீக்கிய்யா’ பட்டமும், கல்லூரியில் ஓராண்டு கல்வி திட்டத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற இல்லத்தரசிகளுக்கு சான்றிதழும், 8 வருட பாடத்திட்டத்தைக் கொண்ட தீனிய்யாத் பிரிவில் பயின்று முடித்த மாணவியருக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சிகள் அனைத்திலும், ஆண்கள் – பெண்களுக்கு தனித்தனி இடவசதி செய்யப்பட்டுள்ளதெனவும், அனைவரும் கலந்துகொள்ளுமாறும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் சார்பில் கடந்தாண்டு (2013) ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா அறிவிப்பு தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |