சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தன் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஹாஃபிழ் எம்.ஜெ.செய்யித் அப்துர் ரஹ்மான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைவர் உரை:
மன்றத்தின் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வருடத்திற்கு மூன்று முறை மன்றம் மூலம் வழங்கப்பட்டு வரும் நலிந்தோருக்கான அத்தியாவசிய சமையல் பொருளுதவி, கடந்த முறையும் சிறப்புற செய்து முடிக்கப்பட்டமைக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த அவர், உள்ளூரில் அதற்காக களப்பணியாற்றிய பொறுப்பாளர்களையும் பாராட்டிப் பேசினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் பாதுஷா இக்கூட்டத்தை ஒருங்கிணைக்கையில் பெற்ற தனது அனுபவங்களை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார். மன்றத்தின் நகர்நலப் பணிகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், வேலைவாய்ப்பு தேடி சிங்கைக்கு வருவோருக்கு மன்றத்தினர் வழங்கும் ஆதரவைப் பாராட்டியதோடு, இதுபோன்ற செயல்பாடுகளால் இம்மன்றம் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் கூறினார்.
துணைச்செயலாளர் உரை:
அடுத்து பேசிய மன்றத்தின் துணைச்செயலாளர் ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல், கடந்த பொதுக்குழுக் கூட்டம் மற்றும் ஒன்றுகூடல் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும். உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு நாள் ஊதிய நன்கொடை மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்கக் கூறியதோடு, நமதூரின் ஏழை-எளிய மக்களுக்காக வழங்கப்படும் நலத்திட்டங்களுக்கு தமது ஊதியத்தில் ஒரு பங்கை மனமுவந்து செலுத்தும் உறுப்பினர்களின் உயர்ந்த உள்ளத்தைப் பாராட்டினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் தவிர்க்க இயலாத காரணத்தால் கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதனால், மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றத்தின் துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றதுடன், திட்டங்களுக்காக செய்யப்பட்டுள்ள நிதியொதுக்கீடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார். உறுப்பினர் காலாண்டுச் சந்தா தொகையை இதுவரை செலுத்தாதவர்கள் விரைவாக செலுத்தியுதவுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
உதவி கோரும் விண்ணப்பங்கள் மீதான விசாரணையறிக்கை:
உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும், அதற்கென நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் குழுவால் விசாரணை செய்து முடிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை நடப்பு கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
நிதியொதுக்கீடு:
ஷிஃபா மருத்துவ உதவி அமைப்பு மூலம் மருத்துவ உதவி, அவசர கால நிதி, வருடாந்திர நிர்வாகச் செலவினத்திற்கான தொகை – 110,000.00
இக்ராஃ அமைப்பின் மூலம் கல்விக்கான ஊக்கத்தொகை (3 மாணவர்களுக்கு 2ஆம் ஆண்டுக்காக) – 15,000.00
கல்வி மற்றும் மனிதாபிமான உதவி நிதிக்கான தொகை – 40,000.00 என,
மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்ய இக்கூட்டத்தில் ஒப்புதலளிக்கப்பட்டது.
ஆலோசகர் உரை:
தொடர்ந்து, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் பேசினார். மன்றம் நடத்தி வரும் மார்க்க சம்பந்தமான போட்டிகள், அறிவுத்திறன் போட்டிகள் குறித்த அலோசனைகளில் பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளதாகவும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை இன்னும் சிறப்பாக நடத்த மன்றம் ஆயத்தமாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நலிவுற்றோருக்கான அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
வருடம் மும்முறை வழங்கப்பட்டு வரும் நலிவுற்றோருக்கான அத்தியாவசிய சமையல் பொருளுதவி கடந்த முறை வினியோகம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மன்றத்தின் உறுப்பினர்கள் தலா ஒரு பயனாளிக்கு பரிந்துரை செய்யலாம் எனவும், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்குப் பரிந்துரை செய்யும் உறுப்பினர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கான தொகைக்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பயனாளிகளின் விபரங்களைப் பதிவு செய்ய 01.06.2014 அன்று கடைசி நாள் என்றும், பொருட்கள் 25.06.2014 அன்று வினியோகிக்கப்படும் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
துணைத்தலைவர் உரை:
தொடர்ந்து பேசிய மன்றத்தின் துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான், கடந்த மாதம் ஏப்ரல் 18ஆம் நாளன்று நடைபெற்ற ஷிஃபா மருத்துவ உதவி அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் டெலி கான்ஃபிரன்ஸ் மூலம் தாம் பங்கெடுத்த நிகழ்வுகளை விளக்கிப் பேசினார். ஷிஃபா மூலம் பெறப்படும் மருத்துவ உதவிக்கான மனுக்கள், அவை பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கும் விதம் குறித்து ஷிஃபா செயலாளர் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் அளித்த விளக்கத்தையும் அவர் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார்.
ஏப்ரல் 18ஆம் நாள் வரை மருத்துவ உதவி கோரி 88 மனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனைக்குப் பின் 63 மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய விண்ணப்பங்கள் - அமைப்பால் நியமிக்கப்பட்ட மருத்துவர்களின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறை கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் மூலம் நடப்பாண்டு (ஏப்ரல் 18ஆம் நாள் வரை) 17 லட்சத்து 55 ஆயிரத்து 571 ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்த பேருதவியை ஷிஃபா அமைப்பு மூலம் ஒன்றிணைந்து வழங்கிய அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
பல்வேறு பொதுநல அமைப்புகள் கோரிய உதவிகள், மருத்துவ அறக்கட்டளைகளுக்கான உபகரணங்கள் வழங்குவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனைகளும், விவாதங்களும் நடைபெற்றன.
புதிய காயலர் அறிமுகம்:
அண்மையில் வேலைவாய்ப்புத் தேடி சிங்கை வந்துள்ள எஸ்.எச்.ஹுமாயூன் கபீர் மகன் எச்.கே.வஸீர் அஹ்மத் - தனது கல்வித்தகுதி, அனுபவம், எதிர்பார்க்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விபரங்களுடன் தன்னை மன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்துகொண்டார். அவருக்குத் தேவையான வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை மன்ற உறுப்பினர்கள் வழங்குமாறு ஆலோசகர் பாளையம் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கேட்டுக்கொண்டார்.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், 21.40 மணிக்கு - ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல்காஸிம் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். நிறைவில் அனைவருக்கும் சுவையான சிக்கன் முர்த்தபா இரவுணவாகப் பரிமாறப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தித்தொடர்பாளர்
காயல் நல மன்றம் - சிங்கப்பூர்
சிங்கை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 17:32 / 27.05.2014] |