தூத்துக்குடியில் நேற்று (மே 28) நடைபெற்ற - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், இந்தியாவில் புதிதாக அரசு அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாரபட்சமின்றி நல்லாட்சி வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர் தலைமையில், மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் முன்னிலையில், தூத்துக்குடி ஜெய்லானி தெருவிலுள்ள மாவட்ட தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
கட்சியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், விளாத்திகுளம் அப்துல் வதூத், நடுவப்பட்டி ஏ.ஜுபைருத்தீன், ஜாஹிர் ஹுஸைன் நகர் நயினார். முத்தையாபுரம் முஸ்தஃபா, கோவில்பட்டி ஹனீஃபா, புறையூர் முஹம்மத் அலீ, தூத்துக்குடி முஹம்மத் அலீ பாஷா, காயல்பட்டின் எம்.எச்.அப்துல் வாஹித், ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மு.அப்துல் ரசாக் உள்ளிட்ட - மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கருத்துரையாற்றினர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட - கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார். கட்சிக்குள் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றல், மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி களப்பணி செய்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அவரது உரை அமைந்திருந்தது.
நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்தோருக்கு நன்றி:
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேண்டுகோளை ஏற்று, ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 02 - பாரபட்சமற்ற நல்லாட்சி தர புதிய அரசுக்கு வேண்டுகோள்:
இந்தியாவில் புதிதாக அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு இக்கூட்டம் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, நாட்டின் அரசியலமைப்பு சட்ட விதிகளின் படி, அனைத்து தரப்பு மக்களும் சகோதரத்துவ வாஞ்சையோடும், சமூக நீதியோடும் வாழ்ந்திட, பாரபட்சமற்ற முறையில் நல்லாட்சி வழங்கிட புதிய அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 03 - வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து:
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள - கட்சியின் தேசிய தலைவர் இ.அஹ்மத், தேசிய செயலாளர் இ.டி.முஹம்மத் பஷீர் ஆகியோரையும் இக்கூட்டம் மனதாரப் பாராட்டுவதோடு, சிறுபான்மையினர் பாதுகாப்பு, மேம்பாடு, நலன் விஷயத்தில் அவர்கள் முழு அக்கறையுடன் செயல்பட எல்லாம்வல்ல இறைவன் அவர்களுக்கு தகுந்த வாய்ப்புகளை வழங்க வேண்டும் என இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 04 - தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து:
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திரு.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி அவர்களை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுவதோடு, அவர்களது பணி சிறக்க வாழ்த்துகிறது.
தீர்மானம் 05 - வரவு செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட - நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டிய கட்சியின் வரவு - செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 06 - கட்சிக் கட்டுப்பாட்டை மீறியோர் மீது நடவடிக்கை:
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் தாய்ச்சபையின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு, அதன் கண்ணியத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால், அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகின்றனர்.
தீர்மானம் 07 - புதிய மாவட்டப் பொருளாளர் தேர்வு:
கட்சியின் மாவட்டப் பொருளாளர் வடக்கு ஆத்தூர் ஷாஹுல் ஹமீத், தான் வகித்து வந்த பொறுப்பிற்கேற்ப பணிகளாற்ற இயலாமையை மாவட்ட தலைவர் அவர்களிடத்தில் கூறியதன் அடிப்படையில், அவரது ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
தாய்ச்சபையின் நீண்ட கால உறுப்பினரும், பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள் தற்பொழுது தாயகத்தில் நிரந்தரமாக இருக்க வருகை தந்துள்ளதையடுத்து, தூத்துக்குடி மாவட்டப் பொருளாளராக இக்கூட்டம் அவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கிறது.
தீர்மானம் 08 – காயிதேமில்லத் பிறந்த நாளின்போது பிறைக்கொடியேற்றல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனர் காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 05ஆம் நாளன்று, மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும், நடைபெற்று முடிந்த தேர்தலையொட்டி அகற்றப்பட்ட கொடிக்கம்பங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றிட அனைத்து கிளை நிர்வாகிகளையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 09 - ரமழான் சிறப்பு ஏற்பாடுகள்:
எதிர்வரும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, கட்சியின் சார்பில் வழமையாக செய்யப்படும் ஸஹர் - நோன்பு நோற்பு நிகழ்ச்சி, சமய நல்லிணக்க நிகழ்ச்சியாக நடத்தப்படும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்படும் சகோதரத்துவ ஈத் மிலன் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும், ஏழைகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழமை போல சிறப்பாகச் செய்திட, மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 10 - நோன்புக் கஞ்சிக்கான அரிசி:
எதிர்வரும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்காக அரசால் வழங்கப்படும் அரிசியை, அனைத்துப் பள்ளிவாசல் நிர்வாகிகளும், அவரவர் பகுதிகளின் வட்டாட்சியர்களுக்கு விரைவாக விண்ணப்பித்துப் பெற முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 11 - கிழக்கு கடற்கரை சாலைப் பணிகள்:
தூத்துக்குடியுடன் நிறுத்தப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலைப் பணிகளை, திட்டமிட்ட படி கன்னியாகுமரி வரை விரைவாக அமைத்திடவும், காயல்பட்டினம் வழித்தடத்தில் அச்சாலையை அமைக்கவும் மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 12 - காயல்பட்டினம் ரயில் நிலைய நிலுவைப் பணிகள்:
காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பணிகளான நடைமேடை விரிவாக்கி - உயர்த்தியமைத்தல், அடிப்படை வசதிகளைச் செய்தல் ஆகிய பணிகள் முடிக்கப்படாததைக் கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், அனைத்து அரசியல் கட்சியினர், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்பினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, போராட்டக் குழுவினரை அழைத்துப் பேசிய ரயில்வே அதிகாரிகள், “நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2014-15 நிதியாண்டில், ரயில்வே நிதிநிலையறிக்கை மூலம் கூடுதல் தொகை பெற்று, அதனடிப்படையில் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும்” என தென்னக ரயில்வே மதுரை மண்டல கூடுதல் மேலாளர் வி.அஜீத் குமார் அவர்களின் எழுத்துப்பூர்மான உறுதிமொழியை வழங்கியதன் அடிப்படையில், அப்போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் புதிய ரயில்வே பட்ஜெட் மூலம் கூடுதல் நிதியைப் பெற்று, காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நிலுவைப் பணிகளை முழுமையாக நிறைவேற்றி முடித்திட ரயில்வே நிர்வாகத்தை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தூத்துக்குடி தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இது விஷயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 13 – கடலில் வீணாகக் கலக்கும் நீரை சேமிக்க தடுப்பணை:
ஆத்தூர் வழியாக கடலில் வீணாகக் கலக்கும் தாமிரபரணி ஆற்று நீரை சேமித்துப் பயன்படுத்தும் வகையில் வசதியான இடத்தில் தடுப்பணை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 14 – பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்:
தூத்துக்குடி மாநகராட்சியில் இதுவரையிலும் நிறைவேற்றி முடிக்கப்படாமலிருக்கும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்திட தூத்துக்குடி மாநகராட்சியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய பொருளாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் நன்றி கூற, எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தின் அனைத்துக் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட முந்தைய செயற்குழுக் கூட்டம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |